பயனில்லாதவை ஏழு

பயனில்லாதவை ஏழு

ஒரு பொருள் தேவையானதா?
தேவை இல்லாததா?
பயனளிக்கக்கக் கூடியதா?
பயனிளிக்காததா? இதனை
நிர்ணயிப்பது எது?
காலம்...சூழ்நிலை...அந்த மனிதன்
இருக்கும்நிலை இவைதான் 
அதனைத் தீர்மானிக்கும்.

ஒருவருக்குத் தேவையான ஒரு பொருள்
இன்னொருவருக்குத் தேவையில்லாமல் இருக்கலாம்.
ஒருவருக்குப் பயன்படுவது
இன்னொருவருக்குப் பயன்படாமல்
போகலாம்.

அதனால் சில கருத்துக்கள் மாற்றி 
மாற்றி பேசப்படும்.
ஆளுக்கு ஆள் மாறுபட்ட கருத்துகள்
இருப்பதுண்டு.

ஆனால் சில கருத்துகள்
எப்படித்தான் மாற்றி மாற்றிப் பேசினாலும்
மாற்ற முடியாதபடி எல்லாக் காலத்திற்கும்
எல்லா தரப்பினரும் ஏற்றுக் கொள்ள தக்கதாக
இருக்கும். அதுதான் காலத்தால் அழியாத,
அழிக்க முடியாத கருத்தாக
நம்மோடு நடை பயின்று
கொண்டிருக்கும்.

அந்தவகையில் காலத்தால் அழிக்க முடியாத
அருமையான கருத்துக்களைக்
 கொண்ட ஒரு நூல்  விவேக சிந்தாமணி.

அனுபவ மூதுரைகள் அடங்கிய
அறிவுக் கருவூலம் விவேக சிந்தாமணி
என்றுதான் சொல்ல வேண்டும்.

இது செய்யுள் வடிவில் இயற்றப்பட்டுள்ளது.
இதன் ஆசிரியர் யார் என்று தெரியவில்லை.
சிந்தனைக்கு உகந்த கருத்துக்
குவியல் என்பது மட்டும் உண்மை.
நீதிக் கருத்துகள் கொண்ட ஓர்
அரிதான செய்யுள் தொகுப்பு நூல் இது.

இந்தப் பகுத்தறிவு பட்டறையில் மொத்தம்
135 பாடல்கள் உள்ளன.
ஒவ்வொரு பாடலும்  சிந்திக்கத் தூண்டும்.
தத்துவத்தை அள்ளித் தரும்.
கற்பனை நயம்  விஞ்சும்.
உவமை நலம் கொஞ்சும் .
நீதிக் கருத்துக்கள் மிஞ்சும்.

அதில் ஒரு பாடலில்
பயனில்லா ஏழு எவை எவையென
தனித்துவப்படுத்தி அடையாளம்
காட்டிச் செல்கிறார் விவேக சிந்தாமணி
ஆசிரியர்.

பாடல் உங்களுக்காக...

"ஆபத்துக் குதவாப் பிள்ளை
அரும்பசிக் குதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர்
தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன் 
குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம்
பயனிலை ஏழும் தானே!"
             _ விவேக சிந்தாமணி


பிள்ளை என்றால் பெற்றோர் ஒரு
ஆபத்தான நிலையில் இருக்கும் போது
ஓடிவந்து உதவுபவர்களாக இருக்க வேண்டும்.
 அதாவது அவர்களின் இறுதிக் காலத்தில் 
 உதவாத பிள்ளை இருந்து என்ன பயன்?
 ஒரு பயனுமில்லையே.
 பெற்றோருக்கு உதவாத பிள்ளையால்
 ஒரு பயனும் இல்லை.
 
நல்ல வயிற்றுப் பசி. 
அந்த வேளையில் உண்பதற்கு  எதுவுமில்லை.
ஆனால் பசி அடங்கியபின்
படையல் வைத்து என்ன பயன்?
உணவானது  பசியைத் தீர்ப்பதாக
இருக்க வேண்டும்.
பார்த்துப் பார்த்துப் பசியாற முடியாது.
பசியாற முடியாத
உணவு இருந்தால் என்ன...?
இல்லாதே போனால் என்ன..?
ஒரு பயனுமில்லை.

தண்ணீர் தாகம்...அப்படியே 
நாவறண்டு போகிறது.
ஒரு வாய்த் தண்ணீர் கிடைத்தால் கூட
போதும்.
 எதிரில் தண்ணீர் இருக்கிறது.
ஆனால் குடிக்க முடியாத நீர்.
தாகத்தைத் தீர்க்க முடியாத அந்த நீர்
இருந்து என்ன?
இல்லாது போனால் என்ன?

பெண் என்றால் வீட்டு நிலைமை அறிந்து
நடக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
ஏழ்மை நிலையிலும் செம்மையாக
வாழத் தெரிந்திருக்க வேண்டும்.
 வீட்டு கஷ்டத்தை அறியாது
ஆடம்பரமாக வாழும் பெண்களால்
வீட்டிற்குத் துன்பம் தான்
வந்து சேரும்.
அப்படிப்பட்ட பெண்ணால்
வீட்டிற்கு  என்ன பயன்
வந்துவிடப் போகிறது?
ஒரு பயனுமில்லை.

மன்னன் என்றால் பொறுமை வேண்டும்.
மக்கள் கூறும் குறைகளை,
 விமர்சனங்களை
ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும்.
தனக்கு எதிராக வரும் பகைக்கு
எதிராக வெகுண்டெழக் கூடாது.
நிதானம் காக்க வேண்டும்.

கோபத்தை அடக்கத் தெரியாத மன்னனால்
அடிக்கடி போர் ஏற்படும்.
போர்  நாட்டின்
பொருளாதாரத்தைச் சீர் குலைக்கும்.
மக்களை நிம்மதி இழக்கச்
செய்யும்.

அப்படிப்பட்ட மன்னனால் குடி மக்களுக்கு 
என்ன பயன்?
ஒரு பயனும் இல்லை.

வித்தைக் கற்றுத் தரும்
ஆசிரியர் பேச்சை மனதில்
கொள்ளாமல் இருக்கும் மாணவனால்
என்ன கற்றுக்கொள்ள முடியும்?
மனம் ஒன்றி கல்வி கற்காவிடில்
என்ன பயன் கிடைத்துவிடப்
போகிறது?

ஆசிரியர் கற்றுத்தரும் வித்தையை
மனம் ஒன்றி கற்காதவரை
 எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை.

புண்ணியம் தேடி தீர்த்த யாத்திரை
செல்கிறோம். கோவில் கோவிலாக
சென்று வந்த பின்னரும்
பாவத்தை விட முடியவில்லை.
தொடர்ந்து அதே பாவத்தைச் செய்து 
கொண்டிருக்கிறோம்.
அப்படியானால் தீர்த்த யாத்திரை சென்று
வந்ததில் என்ன பயன் இருக்கிறது?
ஒரு பயனும் இல்லை.


ஆபத்துக்கு உதவாப் பிள்ளையால்
பயனில்லை.

பசிக்கு உதவா உணவால் பயனில்லை.

தாகத்தைத் தீர்க்க முடியாத
நீரால் பயனில்லை.

குடும்ப ஏழ்மைநிலை  அறிந்து
நடக்கத் தெரியாத 
பெண்ணால் குடும்பத்திற்குப் பயனில்லை.

கோபத்தை அடக்கத் தெரியாத
மன்னனால்  குடிமக்களுக்குப்
பயனில்லை.

ஆசிரியர் மொழி கேளா
மாணவனால் பயனில்லை.

பாவம் போக்காத தீர்த்த
யாத்திரையால் பயனில்லை.

இப்படிப் பயனில்லாதவை ஏழு என்று
பட்டியலிடுகிறது விவேக சிந்தாமணி.

உண்மைதான் என ஒத்துக்கொள்ளும்படியான
கருத்தாக இருக்கிறது இல்லையா?

பயனில்லாதவை ஏழு என்று மனதில்
பதியும்படியாக சொல்லியிருக்கிறார்.

சிந்திக்க வைத்த ஏழு
சிந்தனைக்குரிய ஏழு -இந்தப் 
பயனில்லாத ஏழு.




?

Comments

Popular Posts