விடுதலைக்கவி பாரதி

விடுதலைக்கவி பாரதி


முன்னுரை:


பாரதி என்ற மூன்றெழுத்து நாமத்தை

உச்சரிக்கும்போதே நம்முள் 

உணர்ச்சிப் பொங்கும்.

உத்வேகம் எடுக்கும்.

இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக

மக்களிடையே விடுதலை உணர்வை ஊட்டியவர்

தனது சிந்தனைகள் மூலமாக மக்களைத்

 தட்டி எழுப்பியவர்.தூங்கிக் கிடந்த சமுதாயத்தைத் துயிலெழ வைத்தவர்.

இந்திய விடுதலைப்

 போராட்டக் களத்தில் தவிர்க்க முடியாத சக்தி பாரதி என்று சொன்னால் அது மிகையாகாது.

 விடுதலை வீரர்:

தென் தமிழகத்தின் எட்டையபுரம் என்ற

ஊரை உலகமெங்கும் எட்டிப் பார்க்க

வைத்த பெருமை பாரதிக்கு  உண்டு.

பாரதி வெறும் இலக்கியப் புலவர் மட்டும் அல்லர்.

விடுதலையை வேள்வியாகச் செய்து

கொண்டிருந்த விடுதலைப்போர் வீரர்

என்றுதான் அவரை அடையாளம் காண முடியும்.


விடுதலை வேட்கை:

விடுதலை வேட்கை வெறிகொண்ட

ஒப்பற்ற கவிஞர் பாரதி.அவருக்கு

தாய்மொழி மீதும் தாய் நாட்டின் மீதும்

தணியாக் காதல் உண்டு.

இதனை பாரதியின் பாடல் வரிகள்

பறைசாற்றி க் கொண்டேயிருக்கும்.


" என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

 என்று மடியும் இந்த அடிமையின் மோகம்

 என்றெம தடிமை விலங்குகள் போகும்

என்றெம தின்னல் தீர்ந்து பொய்யாகும் "

என்று பாடி விடுதலைத் தாகத்தை

தூண்டச் செய்தவர் பாரதி.


"தண்ணீர் விட்டா வளர்த்தோம் சருவேசா

கண்ணீரால் காத்தோம்

கருகத் திருவுளமோ? "

என்று உணர்ச்சி பொங்க பாடிய பாரதியின்

பாடல் வரிகள் 

நம்மையும் விடுதலைப் போராட்ட

களத்திற்குக்கே கூட்டிச் செல்லும்.



நாட்டுப்பற்று :

"எந்தையுந்தாயு மகிழ்ந்து குலாவி

யிருந்தது மிந்நாடே - அதன்

முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து

 முடிந்தது மிந்நாடே - அவர்

 சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து

சிறந்தது மிந்நாடே - இதை

 வந்தனை கூறி மனதி லிருத்தியென்

வாயுற வாழ்த்தேனோ "

என்று நாட்டு வணக்கம் பாடி

நானிலம் முழுவதையும் நம் நாட்டைத்

திரும்பிச் பார்க்க வைத்தவர் பாரதி.

பாரதியின் பாடல்கள் எல்லாமே

நாட்டுப்பற்றை ஊட்டி வளர்ப்பனவாகவே

இருக்கும்.


பாரதமும் பாரதியும் :


" பாரதி இல்லாப் பாரதமில்லை

 பாரதமில்லாப் பாரதி இல்லை"

 என்று சொல்லும் அளவுக்குப் பாரதத்தின்மீது

 தீராப் பற்று வைத்திருந்தார் பாரதி.


" பாருக்குக் குள்ளே நல்ல நாடு - எங்கள்

 பாரத நாடு "

 என்று பாரதத்தை  கொண்டாடியவர்

 பாரதி.

"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்

நற்றவ  வானிலும் தனி சிறந்தனவே"

என்ற பாரதியின் வரிகள் ஒரு

மந்திரம் என்றே சொல்ல வேண்டும்.


வந்தேமாதரம் : 

வந்தேமாதரம் என்பதுதான்

பாரதி பாடிய முதல் சுதந்திரப் பாடல்.

வந்தேமாதரம் என்ற சொல்லை

வடபுலத்திலிருந்து வாங்கி வந்திருந்தாலும்

அதனை ஒரு மந்திரமாகவே உச்சரிக்க வைத்த பெருமை பாரதிக்கு உண்டு.

விடுதலைப் போராட்டக் காலத்தில் இந்த

மந்திரச் சொல்லை உச்சரிக்கும்போது

உள்ளத்தில் ஒரு உத்வேகம் மேலிடும்

என்பார்.

வா. உ. சி அவர்கள் பாரதியின் வந்தேமாதரம்

பாடலைக் கேட்டுக் கொண்டேதான்

உயிர்விட்டார் என்பது வரலாறு.

பாரதியார் விடுதலைப் பாடல்கள் இல்லை எனில் நாடு விடுதலை பெறுவது

இன்னும் பல ஆண்டுகள் தள்ளிப்

போயிருக்கும் என்று அறிஞர் பெருமக்கள் 

பலர் கூறியிருக்கும் கருத்தில் உள்ள உண்மை இல்லாமலில்லை.

மறுப்பதற்கில்லை.

சுதந்திர தேவி  வணக்கம்:


சுதந்திர தேவியை ஒரு தெய்வமாகவே

வணங்கி வந்தவர் பாரதி. 

"இத்தரு மனையின் நீங்கி

இடர்மிகு சிறைப்பட்டாலும்

பதந்திரு இரண்டும் மாறிப்

பழிமிகுந் திழிவுற் றாலும்

விதந்தரு  கோடி இன்னல்

விளைந்த தென்னை அழித்திட்டாலும்

சுதந்திர தேவி நின்னைத்

தொழுதிடல் மறக்கிலேனே "

என்று சுதந்திர தேவியை வணங்கி

நின்றார் பாரதி.

பாரதமாதா பதிகம் பாடி

பாரதத்தாயைக் கொண்டாடி மகிழ்ந்த

முதற்கவி பாரதி.


தேசியக் கவி :

விடுதலைப் போராட்ட காலத்தில் பாரதியின்

தேசிய உணர்வுள்ள கவிதைகள் இந்தியர்

அனைவரையும் ஒருங்கிணைத்த காரணத்தால்

இவர் தேசிய கவியாகப் போற்றப்பட்டார்.

"சிந்துநதியின் மிசை நிலவினிலே...."

என்றப்பாடலில்

"வங்கத்தில் ஓடிவரும்

நீரின் மிகையால்

மையத்து நாடுகளில் பயிர் 

செய்வோம்"என்று நதிநீர் இணைப்பு திட்டத்தைப்

பாடி ,பாரதி தான் ஒரு தேசிய கவி

என்பதை மெய்ப்பித்திருப்பார்.


மன்னும் இமயமலை எங்கள்மலை

என்று மார்தட்டிய பாரதி.

"கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்

காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம் 

என்று தேச ஒற்றுமையையும் பாடல் தவறவில்லை 


அச்சமில்லை அச்சமில்லை :

பாரதியின் ,

அச்சமில்லை! அச்சமில்லை!

அச்ச  மென்பதில்லையே 

இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து

நின்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை

அச்ச மென்பதில்லையே "

என்ற பாடல் விடுதலைப் போராட்ட

ஊர்வலங்களில் பாடப்படும்

ஒரு தன்னம்பிக்கை மிக்கப் பாடலாக  இருந்தது.


"அஞ்சி அஞ்சி சாவார்

இவர் அஞ்சாதப் பொருளில்லை

அவனியிலே"

என்று சாதாரண மக்களுக்குப்

புரியும்படி அவர்கள் நிலையை

எடுத்துரைத்து அவர்களைத்

தட்டி எழுப்பியவர் பாரதி.


பெண் விடுதலைக் குரல்:


"பெண்ணடிமை தீருமட்டும் 

பேசும் இத்திருநாட்டில் 

மண்ணடிமை தீருதல்

முயற் கொம்பே "

என்பார் பாரதி.

"மாதர் தம்மை இழிவு செய்யும்

மடமை தன்னைக் கொழுத்துவோம்"

என்று பெண்களை அடிமையாக 

நடத்திடும் மனிதர்களை வெகுவாகச்

சாடினார் பாரதி.

பாரதியின் பெண்ணியச் சிந்தனைகள்

விடுதலைப் போராட்டக் களத்தில்

முக்கிய பேசு பொருளாகியது.

பெண்களும் விடுதலைப் போராட்ட

களத்தில் இறங்கிப் பணியாற்ற

இது ஒரு உந்து சக்தியாக இருந்தது.


."பட்டங்கள் ஆள்வதும்

சட்டங்கள் செய்வதும் 

பாரினில் பெண்கள் நடந்த வந்தோம்

எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்

இளைப்பில்லை காணென்று...."

பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று கனவு கண்டவர் பாரதி.


முடிவுரை :


"ஆடுவோமே பள்ளு பாடுவோமே

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்"

என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே

விடுதலைநாள் மகிழ்ச்சியைக் கொண்டாடி

மகிழ்ந்தவர் பாரதி.

 விடுதலை வேண்டும் என்று சும்மா

செப்பித் திரிந்தவரல்லர் பாரதி.

இந்திய விடுதலை ப் போராட்ட

வரலாற்றிலிருந்து பாரதியையோ

பாரதியிடமிருந்து இந்திய விடுதலைப்

போராட்டத்தையோ பிரித்துப் பார்க்க

முடியாது. விடுதலைப் போராட்டத்தில்

இரண்டறக் கலந்தவர் பாரதி.கடந்த

தலைமுறையின் ஒப்பற்ற விடுதலைக்கவி

பாரதி என்பதில் யாருக்கும் மாற்றுக்

கருத்து இருக்க முடியாது. 












    

கருத்துகள்

Popular Posts