கரடி பொம்மை தினம்
"ஆனைக்கொரு காலம் வந்தால்
பூனைக்கொரு காலம் வரும்"
என்பார்கள்.
ஆனைக்கும் பூனைக்கும் வரும் காலம்
கரடிக்கு வராமலா போய்விடும்.?
இதோ வந்துவிட்டது.
பிப்ரவரி 10 கரடி பொம்மைக்கான தினம்.
காதலர் தினத்தைத் கொண்டாடிய
உலகம் கரடியையும் விட்டுவிடவில்லை.
இந்தநாளில் காதலர் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெளிப்படுத்துவதற்காக மென்மையான கரடிப் பொம்மைகளைப் பரிசாகப் பரிமாறிக்கொள்வது மேலை நாடுகளில் வழக்கமாக இருந்து வருகிறது.இந்தக் கரடி பொம்மை அன்பு மற்றும் அரவணைப்பின் சின்னமாக உலக காதலர்களால் பார்க்கப்படுகிறது.
திடீரென்று இந்தக் கரடி பொம்மை
எண்ணம் எங்கிருந்து வந்தது.?
இதற்கான ஆரம்பப் புள்ளி வைத்தவர் யார்?
இதற்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம்?
இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடை
தெரிய வேண்டுமானால் நாம்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி
தியோடர் ரூஸ்வெல்ட் வரலாற்றைப் புரட்டிப்
பார்க்க வேண்டும்.
ரூஸ்வெல்ட் அவர்களுக்கு வேட்டையாடுதலில் அதிக நாட்டம்
உண்டு.
ஒருநாள் வேட்டையாடுவதற்காக மிசிசிப்பி
காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார். வெகுநேரமாக வேட்டைக்காக அலைந்து
திரித்துப் பார்த்தார்.
எந்த விலங்கும் சிக்கவில்லை.
சோர்வாக வந்து அமர்ந்தார்.
அதிபர் மனச் சோர்வாக வந்து அமர்வதைப் பார்த்த பணியாளர்கள்
கடைசியாக ஒருமுறை தாங்களும் முயற்சி செய்து பார்ப்போம் என்று காட்டிற்குள் சென்றனர்.
அகப்பட்டது ஒரு கரடிக் குட்டி.
அப்படியே அலேக்காகத் தூக்கி ரூஸ்வெல்ட் முன்னர் கொண்டு வந்து நிறுத்தினர்.
இப்போது ரூஸ்வெல்ட் மகிழ்ச்சியோடு
அந்தக் கரடியைச் சுட்டு வீழ்த்துவார் என்று
நினைத்தனர்.
ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை.
அவர் ஒரு நிமிடம் அந்தக் கரடியின் கண்களைப் பார்த்தார்.
அந்தக் கண்கள் ரூஸ்வெல்ட்டைப் பார்த்து ஏதோ பேசுவது போல் இருந்தது.
கண்களில் இருந்த கெஞ்சலும்
கொஞ்சலும்
அவர் மனதை இளக வைத்தது.
இரக்கப்பட வைத்தது
கருணையோடு கரடிக் குட்டியின் முதுகைத் தடவிக் கொடுத்தார்.
இந்தக் கரடியைக் கொல்வது இரக்கமற்ற செயல் . நான் இந்தக் கரடிக்குட்டியைக் கொல்லப் போவதில்லை என்று கூறி கரடியைச் சுட்டுக் கொல்ல ரூஸ்வெல்ட் மறுத்துவிட்டார் .
ரூஸ்வெல்ட்டின் இந்த இரக்க குணம்
நாடெங்கும் பரவியது. நாளிதழ்களில் தலைப்புச் செய்திகளாயின.
விவாத மேடைகளில் விவாதம் பொருளானது.
இதனை அறிந்த கிளிஃபோர்ட் பெர்ரிமேன் என்ற அரசியல் கார்ட்டூனிஸ்ட் இந்த சம்பவத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒரு கார்ட்டூன் வரைந்து பிரபல வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிகையில் வெளியிட்டுவிட்டார். அவ்வளவுதான்
கரடிக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்கும் இருந்த இரக்க பிணைப்பை வெளிப்படுத்திய இந்த கார்ட்டூன் நாடு முழுவதும் பேசு பொருளாகியது.
அந்தக் கார்ட்டூன் பிரலமாகி மக்களால்
கொண்டாடப்பட்டது.
இந்தக் கார்ட்டூன் மக்கள் மத்தியில்
ஏற்படுத்திய தாக்கம் கரடி பற்றிய
சிந்தனையைத் தட்டி எழுப்பியது.
இதனைத் தனக்குச் சாதமாக்க
நினைத்த பொம்மை உற்பத்தியாளரான
மோரிஸ் மிக்டோம், கார்ட்டூன் படத்தின் அடிப்படையில் கரடி பொம்மைகளை
உருவாக்கி வியாபாரத்தைப் பெருக்க
நினைத்தார் .
நல்ல வியாபாரம் நடத்த இது நல்லதொரு வழி என்று மனக்கணக்குப் போட்டுப் பார்த்தார்.
அதன்படி கரடி பொம்மை தயாரிப்பு மும்முரமாக நடைபெற்றது.
அமெரிக்க முன்னாள் அதிபர் ரூஸ்வெல்ட்டின் செல்லப் பெயர் 'டெடி' என்பதாகும்.
அதையே அவர் தயாரித்த பொம்மையின்
பெயராக்கினார்.
ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டின் நினைவாக அவர் அதை "டெடி'ஸ் பியர்" என்று
பெயரிட்டு சந்தைப்படுத்தினார்.
அவரின் மனக்கணக்கு பொய்த்துப் போகவில்லை.
விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்தது.
'டெடி 'ஸ் 'பியர் 'மக்கள் மத்தியில் வெகு பிரபலமாகியது.
அன்பு, மற்றும் இரக்கத்தின் அடையாளச் சின்னம் இந்த 'டெடி 'ஸ் 'பியர்'
என்று மாறிப் போனது.
இன்று உலகம் முழுவதும் டெடி பியர் பொம்மைகள் பிரியமானவர்களுக்கு தரப்படும் அன்பு பரிசாக
மாறுவதற்குப் பின்னணியில்
பெரிய வியாபார உத்தி கையாளப்பட்ட இருக்கிறது என்பதுதான் உண்மை.
அதன் பின்னர் காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை பரிமாறிக் கொள்ள
இந்த மென்மையான
கரடிப் பொம்மைகளைத் தேர்ந்தெடுக்க ஆரம்பித்து
இன்று வரை வியாபாரம் பல்லாயிரம் கோடிகளை விஞ்சி நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது .
வியாபார நோக்கோடு உருவாக்கப்பட்ட
கரடி பொம்மை காதலர் வாரத்தில்
பல கோடி வர்த்தகம் புரளும்
ஒரு முக்கிய பொருளாக மாறி
இன்று காதலர்களின் கைகளில்
அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.
டெடி டே என்பது தங்கள் துணையிடம் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பாக
அமையும் நாள் என்று
அனைவரும் நம்புகின்றனர்.
நீங்களும் கரடி பொம்மை வாங்குங்கள்.
உங்கள் பிரியமானவர்கள் கைகளில் கொடுத்து
உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.
உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக இந்த ”டெடி டே"
அமைய வாழ்த்துகள்.
கருத்துகள்
கருத்துரையிடுக