முறைமைக்கு மூப்பு இளமை இல்

முறைமைக்கு மூப்பு இளமை இல் 


ஒரு குற்றத்திற்கான தண்டனை எப்படி வழங்கப்படுகிறது?

நீதி முறையாக சட்டத்திற்கு உட்பட்டு வழங்கப்படுகிறதா இல்லை  ஒருவர்  சமூகத்தில்  எந்த நிலையில் இருக்கிறார் என்ற பின்புலம் ஆராயப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறதா?

சில நேரங்களில் இப்படிப்பட்ட கேள்விகள்

எழாமலில்லை.

ஒரே குற்றத்திற்கு வெவ்வேறு மாதிரியான தண்டனை வழங்கப்படுகிறது. சட்டம் அனைவருக்கும் சமம் என்று சொல்லிக் கொள்கிறோம்.

ஆனால் கொடுக்கப்படும் நீதிதான்

வேறுபடுகிறது.

ஏன் இத்தனை முரண்பாடுகளும் வேறுபாடுகளும்.?

"ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை. 

         (குறள்: 541)


என்கிறார் வள்ளுவர்.

"நிகழ்ந்த குற்றத்தினை ஆராய்ந்து, விருப்பு வெறுப்பின்றி, சார்புநிலையைத் தவிர்த்து,

நீதி வழங்கப்பட வேண்டியதுதானே நியாயம் "என்கிறார் வள்ளுவர்.


ஒருவர் ஒரு குற்றம் செய்துவிட்டால் முதியவர் அல்லது இளைஞர் எனக் குற்றவாளியின் வயதினைக் கருத்தில் கொண்டு, சார்பு நிலையுடன் நீதி வழங்கப்படுவது சரியல்ல என்கிறார் இன்னொருவர்.

யாரிவர்?

எதற்காக இப்படிச் சொல்லியிருக்கிறார்?

வாருங்கள் அவரிடமே கேட்டு விடுவோம்.

"சால மறைத்து ஓம்பிச் சான்றவர் கைகரப்ப,

காலை கழிந்ததன் பின்றையும், மேலைக்

கறவைக் கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்;-

முறைமைக்கு மூப்பு இளமை இல்."

- பழமொழி நானூறு 


"மிகவும் முயன்று மறைத்துப் பேசி, அறிவுடையார் இது குற்றமன்று என்று கூறினாலும் காலம் கடந்த பின்னரும், முன்னர் பசுவின் கன்றைக் கொன்றவனை அவனது தந்தையே தேர்க்காலில் இட்டுக் கொன்றான், ஆதலால் நீதி வழங்க முதுமையடைந்தவர் இவர், இளமையானவர் இவர் என்ற பேதம் பார்க்கத் தேவையில்லை."

என்கிறார் முன்றுறையரையனார்.

கன்றை இழந்த பசு ஒன்று நீதி வேண்டி ஆராய்ச்சிமணியினை அடிக்க, அதன் காரணத்தை விசாரித்து, அந்தக் கன்றின் மீது தேரோட்டிக் கொன்றவன் தனது மகன் என அறிகிறான் சோழ மன்னன் ..

அமைச்சர்கள் மன்னா!

குற்றம் புரிந்ததாகச் சொல்லபடுவன் சிறுவன்.ஆதலால் அது அறியாமையால் இழைக்கப்பட்ட குற்றம்.

அறியாச் சிறுவன் செய்த குற்றம் குற்றமே அல்ல என்று அமைச்சர்கள் சிறுவனை விட்டு விடும்படி கூறுகின்றனர்.

அரசன் ஆணையை ஏற்று இளவரசனைத் தேர்க்காலில் ஏற்ற மறுத்துப் பின்வாங்குகின்றனர்.

ஆனால் அரசன்  கன்றைக் கொன்றவன் சிறுவன் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை.

தன் மகன் என்பதற்காக அவன் செய்த குற்றம் மன்னிக்கப்பட வேண்டும் என்று நினைக்கவில்லை.

பசுவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும். அதுதான் முறை.

அதனால் நீதிவழங்கும் பொருட்டு, கன்றினைக் கொன்ற தனது மகனின் மீது தானே தேரோட்டிக் கொன்று  பசுவுக்கு நீதி வழங்கினான் மனுநீதிச் சோழன்.


யார் எவர் என்று பாராது செய்த குற்றத்திற்கு தண்டனை வழங்கியே ஆக வேண்டும் என்ற மன்னனின் மன உறுதி இன்று வரைப் பேசப்படுகிறது. நாளையும் பேசப்படும்.

நீதி என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று தமிழ் உள்ளவரை தலைமுறை தலைமுறையாக பேசப்படும் நீதி இது.


நீதி வழங்கும்போது குற்றவாளி ஓர் இளவயதினன் என்பதற்காகக் கருணை காட்டத் தேவையில்லை.

செய்த குற்றத்திற்குத் தண்டனை.அவ்வளவுதான். வேறு எதனையும் கருத்தில் கொள்ள தேவையில்லை.

நீதி என்றால் நடுவுநிலை தவறாது மனுநீதிச் சோழனைப்போல நீதி வழங்க வேண்டும்.

நீதி வாங்கப்படக்கூடாது.

வழங்கப்பட வேண்டும் . 


நீதி வழங்குபவர்கள் மனதில் கொள்ள வேண்டிய  அருமையான பழமொழி


"முறைமைக்கு மூப்பு இளமை இல்"

கருத்துகள்

Popular Posts