நன்றி சொல்ல வார்த்தை இல்லை
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
"ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்புடைத்து "என்ற
ஒற்றைக் குறளில்
கற்றையாய்
வாழும் கலையைச் சொல்லித் தந்தார்
வள்ளுவர்.
உடலை வலுவாக்கி
உள்ளத்தைத் தூய்மையாக்கி
மனதை அடக்கி
மூச்சுப்பயிற்சியை நிதமாக்கி
வாழும் கலையை நமதாக்கி
வாழ்க்கைக் கலையை
உயர்வாக்கி
உலகாக்கி
உயரே உயரே என
உயர்ந்து வரும்
யோகாக்கலை
நிகழ்ச்சிக்குத்
தகைமையாய்
தன்னிகரில்லாத் தலைமையாய்
தக்கதொரு தலைமையுரையாற்றி
நிகழ்ச்சிக்கு மணிமகுடமாய்
வீற்றிருக்கும் தலைவர்....
...... .
அவர்களுக்கு நிகழ்ச்சி
அமைப்பாளர்கள் சார்பில் முதலாவது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
காரியமில்லா காட்சி
கவின் பெறுவதில்லை
செயலில் செம்மை
செப்புவதில் இனிமை
செயலாற்றுவதில் தனித்தன்மை
கொண்ட
செயலாளர் வி. பி. ராமநாதன்
அவர்களுக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழு சார்பில் நன்றியை உரித்தாக்குகிறேன்.
ஆட்சிக்குழு
கல்விக்குழு
தலைமைப் பொறுப்பில் இருந்து
நிர்வாகத்திற்கும்
கல்வி வளர்ச்சிக்கும்
உற்றநல் துணையாக
உடனிருந்து
வழிநடத்தி வரும் ....
..... ..
.. அவர்களுக்கு
இந்தத் தருணத்தில் நன்றி சொல்ல
கடமைப்பட்டுள்ளேன்.
கல்லூரிக்கு மணிமகுடமாய்
கற்பவரை நல்வழிப்படுத்தும் நல்ஆளுமையாய்
எம்மை நெறிப்படுத்தி
செம்மை வழிப்படுத்தி
சீர்மை திறம்கொண்டு
கல்லூரிக்கு முதன்மையாய்
முழுமுதலாய் இருக்கும்
நம் கல்லூரி முதல்வர் அவர்களுக்கு
நன்றி சொல்வதில் பெரும் மகிழ்ச்சி
கொள்கிறேன்.
யோகசபை ஒருங்கிணைப்பாளராக இருந்து
கச்சிதமாய்
காண்போர் கண்கள் குளிர
காட்சி அமைப்புகளை
நேர்த்தியாய்
நிரல்பட
சீர்பட
சிறப்பாய்
வடிவமைத்துத் தந்த
மேடம் .... ..
..... ..
அவர்களுக்கு
எங்கள் குழு சார்பாக நன்றி.
"ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வதே முறை. "
என்ற வள்ளுவர் வாக்குக்கு இணங்க
முறைமை வழுவாது
நீதி வழங்கி
நெறிபட வாழ்ந்து
இன்று வாழும் கலைக்கு
வார்த்தைகளால்
வலு சேர்த்து
எம் நெஞ்சில்
என்றென்றென்றும்
இனித்திருக்கும்
நிலைத்திருக்கும்
உரையை உளம்கொள வழங்கி
உள்ளங்களை
ஆண்ட
நீதியரசர்....
......
அவர்களுக்கு நன்றி.
சிறப்புரை ஆற்றி
நிகழ்ச்சிக்கு மதிப்புரை வழங்கி
மதிப்புக்கூட்டும்
மதிநுட்பத்தோடு
மனதை ஒருமுகப்படுத்தி
உடல்நலம் பேணலின்
அவசியம் யாதென
அங்கங்கே பேராளுமைகளின்
பேச்சினினை
அடிக்கோடிட்டு
அருந்தமிழில்
அழகாய் உரையாற்றி
நிகழ்ச்சிக்குச் சிறப்பு
சேர்த்த
சிறப்பு அழைப்பாளர்கள்
அலெக்ஸ் அப்பாவு அவர்களுக்கும்
மற்றும்
1.....
2.....
அவர்களுக்கும் நன்றி.
தங்கள் பொன்னான நேரத்தை
ஒதுக்கி நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றி
சிறப்பு செய்தமைக்கு உளமார
நன்றியை நிர்வாகம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவரையும்
முகம் மலர
அகமகிழ்கொள்ள
அன்பாய்
பண்பாய்
அழகுத் தமிழில்
அழகாய் வரவேற்புரையாற்றி
நிகழ்ச்சிக்கு அணியம் செய்த
அன்பு உள்ளம்....
.... அவர்களுக்கு
. நன்றி.
பொருளாதார தலைமையேற்று
பொறுப்புடன்
விருப்புடன்
பேராளுமையோடு
நிதி மேலாண்மை செய்து
வரும்
பொருளாளர் ....
...
அவர்களுக்கும்
நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாய்ச்
சீர்பட சிறப்புரையாற்றி
யோகாவின் அவசியம் பற்றி
அழகாய் ஆழமாய்
மனம் கொள்ளும்படி
கருத்துரை வழங்கிய
திருமூலர் யோகா கலைக்கூடம்
நிறுவனர்...
..... ....
அவர்களுக்கு நன்றி! நன்றி!நன்றி!
நிகழ்ச்சி செவ்வனே நடைபெற
உடனிருந்து
ஊக்கப்படுத்தி
உரிய ஆலோசனைகள் வழங்கி
எமக்கு உந்து சக்தியாக இருந்து வந்த
அலுவலக கண்கணிப்பாளர் பாலச்சந்திரன் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காட்சிகள் சிறக்க
காண்போரை ஈர்க்க
கண்கள் மேடையில் லயிக்க
கவின்மிகு விருந்து படைக்க
மேடைக்கு மேலாடை போர்த்தி
அழகூட்டிய
மேனாள் மாணவர் பிரவீன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊர் கூடி தேர் இழுப்பது போல
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவோடு உடனிருந்து
இந்நிகழ்வில்
என் பங்கும் உண்டு
என்று
தோளோடு தோள் கொடுத்து
தொய்வில்லாது
தொடர்பணி ஆற்றிய
ஆசிரியர்கள் மாணவர்கள் ஒவ்வொருவர்க்கும்
தனித்தனியாக
என் நன்றியையும் வாழ்த்துதலையும்
தெரிவித்துக் கொள்கிறேன்.
உள்ளம் குதுகலிக்க
கண்களுக்கு விருந்தளிக்க
கலை நிகழ்ச்சிகள் கண்முன்
களைகட்டி நிற்க
இது போதாது என்று
உள்ளம் துள்ள
உவகை கூட்ட
பரதநாட்டியமும் வந்து
அபிநயம் பிடித்து
அழகுகாட்டி
நம்மைத் திக்குமுக்காட வைக்க
உதவிய பரத மாஸ்டர் அவர்களுக்கும்
கலை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்த
கலைஞர்களுக்கும்
நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்வதில்
மகிழ்ச்சி கொள்கிறேன்.
அடுத்தது என்ன
அடுத்தது என்ன
என்ற ஆர்வத்தைத்
தூண்ட வைத்து
புருவம் உயர்த்தி
முகம் பார்க்க வைத்து
புதிராய்
புனை ஓவியமாய்
காட்சிகளை நாவில்
நடனமாட வைத்து
நற்றமிழ்
வர்ணனையால்
வசீகரம் செய்து நின்ற
வர்ணனையாளர்கள்
மேடம் கிரிஜா அவர்களுக்கும்
மற்றும் திருமிகு யோக பிரசாத் அவர்களுக்கும் நன்றியையும் வாழ்த்துதலையும் சொல்வதில்
பெருமை கொண்டேன்.
எங்களால் தான்
எங்களால் மட்டும் தான் என்று
போட்டிக்குப் போட்டியாக
போட்டியாளர்களர்களைப்
போட்டிபோட்டு
அழைத்து வந்து
அவர்கள் திறமைக்கு
அங்கீகாரம் வாங்கித்தர
ஆவலோடு முன்னெடுப்பு செய்த
அனைத்துக் கல்லூரி பேராசிரிய பெருமக்களுக்கும் நன்றி.
போட்டியாளர்கள் இன்றி போட்டி இல்லை.
தமது திறமையை
வெளிக்காட்ட கிடைத்த
நல்லதொரு வாய்ப்பாக கருதி
போட்டியில் கலந்து கொள்ள வந்த போட்டியாளர்கள்
மற்றும் அவர்களுக்குப் பயிற்சி அளித்து அழைத்து வந்த பயிற்சியாளர்கள் அனைவர்க்கும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காதுக்கினிய பாடல்கள்
செவிமடலிலில்
மோதி விளையாட
காட்சிகள் கண்ணுக்கு
விருந்து படைக்க
இமைகள் இமைப்பதைத்
துறக்க
ஒலியும் ஒளியும்
முதல்தரமென உதடுகள்
முணுமுணுக்க
எப்படி இப்படியென
உள்ளம் உவக்க
அண்ணாந்து பார்க்க வைத்த
இயற்பியல் துறை பயிற்றுநர் இளங்கோ ஜெகதீச ஜேசுராஜ்
அவர்களுக்கு எமது குழு சார்பாக நன்றியை உரித்தாக்குகிறேன்.
உப்பரிகையில் நின்று
ஒய்யாரமாய் உலகைக் காணும்
மனநிலையில்
கால்கள் தரையில்
ஊன்ற மறுக்க
எண்ணங்கள் வண்ணக்
கொடிபிடித்து
களிற்றின்மேல் ஏறி
அணிவகுப்பு நடத்த
எல்லையில்லா மகிழ்ச்சியில்
அழகாய் அமைதியாய்
பொறுமை காத்து
பார்வையாளர்களாய் அமர்ந்திருக்கும்
அனைவர்க்கும் நன்றியைச் சொல்ல ஆசைப்படுகிறேன்.
எண்ணங்களுக்கு
தீனியிட்டு
வண்ணம் தீட்டி
வடிவமைத்துத் தந்த
நிகழ்ச்சி அமைப்பாளர்களைப்
பாராட்ட
வார்த்தைகளில்லை.
இப்படியொரு மகிழ்ச்சியான
தருணத்தில் தங்கள்
அனைவரோடும்
மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்ளவும்
நன்றி நவிலவும்
வாய்ப்பளித்த நிகழ்ச்சி
ஏற்பாட்டாளர்களுக்கு
வணக்கமும் வாழ்த்தும்
சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்.
நிகழ்ச்சியை
ஏற்பாடு செய்து
நம்மை எல்லாம் யோகாவின்
நினைவில்
மகிழ வைத்த
கல்லூரி நிர்வாகத்திற்கு
மறுபடியும் நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
காலம் இன்னொரு மகிழ்ச்சியான
நிகழ்ச்சியில்
நம்மை ஒன்று சேர்க்கட்டும்.
அதுவரை இறையருள் நம்மை
வழிநடத்தட்டும்.
அனைவர்க்கும் அன்பும்
நன்றியும்
நன்றி..... வணக்கம்.
.
.
.
.
கருத்துகள்
கருத்துரையிடுக