கவி மாறி மண்மாரியான கதை
கவி மாறி மண்மாரியான கதை
இருபெரும் ஆளுமைகளுக்குள் எப்போதும்
நீயா? நானா? என்ற போட்டி இருக்கும்.
படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடெல்லாம்
இதற்குக் கிடையாது.
படித்தவர்கள் தானே பண்பாக
நடந்து கொள்வார்கள் என்று
எல்லோரையும் நினைத்துவிட முடியாது.
அப்படி நினைத்துக் கொண்டிருந்தால்
நாம் ஏமாந்து தான் போவோம்.
பதவிக்காகப் போட்டி.
புகழுக்காகப் போட்டி.
முதல் மரியாதைக்கான
போட்டி.
உரிமைக்கான போட்டி.
முதல் பரிசுக்கான போட்டி.
எங்கும் போட்டி.
எதிலும் போட்டி.
இவை எல்லாம் எதற்காக?
தான்தான் எல்லாம்....
நான் நானே.....நான் மட்டும்தான்
என்று தன் இருப்பை முன்னிலைப்படுத்த
உலகம் தன்னை மட்டுமே
கொண்டாட வேண்டும்
என்ற நான்...எனக்கு
என்ற சுயநலம் அன்றி வேறென்ன
சொல்வது?
போட்டி பொறாமையாக மாறும்போது
சில விபரீதங்கள் நடைபெறுகின்றன.
ஆனால் அப்படி எல்லா இடங்களிலும்
விபரீதம் மட்டுமே நடைபெறும் என்று
சொல்லிவிட முடியாது.
சில நேரங்களில் அவர்களுக்குள் நடக்கும்
போட்டி காண்பவர் கண்களுக்கு
நல்ல விருந்தாக
அமைவது உண்டு.
கண்களுக்கு மட்டுமல்ல .உங்கள்
செவிக்கும் இலக்கிய பசிக்கும்
நல்ல விருந்தாக வந்து அமைவதும் உண்டு.
செவிக்குணவுக்கா தமிழில்
பஞ்சம்.?
விருந்து படைத்தவரின்
உள்ளத்தில்
இல்லை கஞ்சம்.
அதனால் கவிநயம் கொஞ்சும்
பாடல்கள் நம்மிடம் தஞ்சம்.
கருத்துக்கு இல்லை பஞ்சம்.
அவற்றில் இலக்கியநயம் மிஞ்சும்.
போட்டிக்கு இழுத்தவர் உள்ளமோ அஞ்சும்.
இப்படி அஞ்ச வைத்த ...கொஞ்ச
வைத்த....இன்னும் கொஞ்சம்
இன்னும் கொஞ்சம்
என்று கெஞ்ச வைத்த
பாடல்களைக்
கேட்டு இன்புற ஆசையா?
வாருங்கள்....விருந்து எப்படி
இருக்கிறது என்று பார்த்துவிடுவோம்.
காளமேகப் புலவர் எந்தச் சொல்லைக்
கொடுத்தாலும் பாடி அசத்திவிடுவார்.
கரியை உமியாக்குவார்?
தத்தித்தா தூதுதி தாதூதி என்று
எழுத்தாலே கவி படைத்து அசத்திவிடுவார்.
புலமை இருக்குமிடத்தில் வறுமை
இருக்கத்தானே செய்யும்.
அதனால் திருமலைராயன்
என்ற சிற்றரசரைப் பாடிப் பரிசில்
பெற்று வர வேண்டும் என்ற ஆசையோடு
மன்னனைக் காணச் சென்றார்.
திருமலைராயன் அவையில்
அறுபத்து நான்கு புலவர்கள் உண்டு.
இந்த அறுபத்து நான்கு புலவர்களுக்கும்
தலைவர் அதி மதுர கவிராயர்.
காளமேகப் திருமலை ராயனைக் காணச் சென்ற அந்த நாளில் அதி மதுர கவிராயர்
பல்லக்கில் வந்து கொண்டிருக்கிறார்.
வீதி எங்கும் மகிழ்ச்சியும் ஆரவாரமும்
என ஒரே கொண்டாட்டம்.
அனைவரும் அதிமதுர கவிராயரைப் புகழ்ந்து
குரல் எழுப்புகின்றனர்.
காளமேகம் இவற்றை எல்லாம் ஒரு பார்வையாளராக
நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அதைப் பார்த்த கட்டியங்காரன்,
"என்ன நீ....எம் அதிமதுர கவி ராயர்
வந்து கொண்டிருக்கிறார்?
சும்மா நிற்கிறாய்?
நீயும் புகழ்ந்து குரல் எழுப்பு "
என்கிறான்.
"நான் ஏன் புகழ்ந்து குரல் எழுப்ப வேண்டும் வேண்டும்?"
எதிர்க்கேள்வி கேட்டார்
காளமேகம்.
அத்தோடு விட்டுவிடவில்லை.
"அதிமதுரம் என்று அகிலம் அறியத்
துதி மதுரமாய் எடுத்துச் செல்லும்
புதுமையென்ன
காட்டுச் சரக்கு உலகில் காரணமில்லாச்
சரக்கு
கூட்டுச் சரக்கு அதனைக் கூறு"
என்று குதர்க்கமான ஒரு கேள்வியும்
கேட்டுவிட்டார்.
அதாவது "இந்த அதிமதுரத்தை
உலகமறிய துதிமதுரமாக்கித்
தூக்கிச்செல்வதில் என்ன புதுமை இருக்கிறது? எதற்காக அவரை இப்படித் தூக்கிச் செல்ல வேண்டும்.?
அப்படித் செல்லும் அளவிற்கு அவரிடம் என்ன இருக்கிறது ?"
இதுதான் காளமேகத்தின் கேள்வி.
காவலன் சும்மா இருப்பானா?
செய்தியைக் கொண்டு நேரே அதிமதுரத்தின் காதுகளில்
ஓதிவிட்டான். அதிதமதுர கவிராயர்
காதுகளில் செய்தி விழுந்ததும் முகம்
சிவ்வென்று சிவந்து போயிற்று.
"என்னை இகழ்ந்தானா ?
என்னை இகழ்ந்தானா ?
யாரவன் "பல்லை நறநறவெனக்
கடித்தார் .
"இதோ இப்போதே மன்னரிடம் சொல்லி நான்
யார் என்பதை அவனுக்கு அறிய வைக்கிறேன்"
என்று அரண்மனை நோக்கிச் சென்றார் .
மன்னரிடம் கேள்விப்பட்ட செய்தியைப் சொன்னார்.
மன்னருக்கும் ஆத்திரம்.
" இழுத்து வா
அந்த ஆணவக்காரனை"
என்று கட்டளையிட்டார்.
காளமேகம் மன்னன் அவையில்
கொண்டு வந்து நிறுத்தப்பட்டார்.
அவரை ஏற இறக்கப் பார்த்தார்
மன்னர்.
"ஏது...இவனா இவனா இவ்வளவு
ஆணவமாகப் பேசியிருப்பான்?"
என்பதுபோல மன்னரின் பார்வை இருந்தது.
இவனிடம் அப்படி என்ன பெரிய ஆளாக இருந்துவிடப் போகிறான் என்ற நினைப்பில்
"நீர் என்ன பெரிய புலவரோ
பாட்டெல்லாம் பாடினீராமே"என்று கேட்டார்.
"அப்படித்தான் சொல்லிக் கொள்கிறார்கள் அமைதியாகப் பதிலளித்தார் காளமேகம்.
"எனது ஆஸ்தான கவி அதிமதுர கவிராயரோடு நீர் புலமைமிக்கவரோ?"
"யார் புலமை மிக்கவர் என்பது மோதிப்பார்த்தால் அல்லவா தெரியும்."
"போட்டியிட முடிவு செய்துவிட்டீரா?
அவரை வென்று உம்மால் வென்று விடக் கூடுமோ?"
"ஏன் கூடாது ?"
"அப்படியானால் ஒரு போட்டி ஏற்பாடு செய்கிறேன்.
உன்னால் வெற்றி பெற முடியுமானால்
அதில் வென்றுவிட்டால் உன் புலமையை மெச்சி
பரிசு கிடைக்கும் . போட்டிக்கு சம்மதமா "என்றார் மன்னர்.
என்ன பெரிய போட்டி வைத்துவிடப்
போகிறார்கள். கவி பாட வேண்டும்.
அவ்வளவுதானே .பாடி அசத்திவிடலாம்
என்று ஒரு மனக்கணக்கு போட்டு
வைத்தார் காளமேகம்.
போட்டிக்கு ஒத்துக் கொண்டார்.
ஆனால் அதிமதுர கவிராயர்
வேறொரு மனக்கணக்கு போட்டு
வைத்திருந்தார்.
காளமேகம் தன்னையிட எந்தவிதத்தில் உயர்ந்தவர்
என்று உள்ளுக்குள் புழுங்கிக்
கொண்டிருந்த
அதிமதுர கவிராயர்
இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி
காளமேகத்தை மட்டம் தட்டி விடலாம் என்று நினைத்தார்.
காளமேகத்திடம்
எடக்குமடக்காகச் சொற்களைச் சொல்லிப்
பாடல் பாடச் சொல்ல வேண்டும்.
அவர் பாடத் தெரியாமல் அவையில்
முழிக்க வேண்டும்.
அதைப்பார்த்து அவையோர்
கைகொட்டிச் சிரிக்க வேண்டும்.
அவர் அவமானத்தால் ஓட வேண்டும்.
இப்படி ஒரு வன்மத்தை மனதிற்குள்
வளர்த்து வைத்திருந்தார் அதிமதுர கவிராயர்.
போட்டிக்கான நாள் குறிக்கப்பட்டது.
அதிமதுரம் எதிர்பார்த்த அந்த நாளும் வந்திருக்கிறது.
விடுவாரா?
இப்போது காளமேகப்புலவரைப்
பார்த்ததும்
"நீர்தான் கவிகாளமேகம் என்பவரோ?"
என்று நக்கலாகக் கேட்டார்.
"ஆமாம்....தாங்கள் யார் என்று
நான் தெரிந்து
கொள்ளலாமா? "என்றார் காளமேகம்.
"ஹா...ஹா...ஹா...
ஈதென்ன கேள்வி?
என்னை
தெரியாதவர் இந்த அரசவையில்
உளரோ ?"என்று அவையைப் பார்த்து
கேட்டார் அதிமதுரம்.
"தெரிந்து கொள்வதற்கு
நீரென்ன நாடாளும்
மன்னனோ?"
"ம்...என்ன ஆணவம் உமக்கு?
இந்த அரசவைக் கவிராயர் நான் "
"வாலெங்கே நீண்டெழுந்த
வல்லுயிரெங்கே நாலு
காலெங்கே ஊன்வடிந்த கண்ணெங்கே
- சால
புவிராயர் போற்றும் புலவீர்காள்
நீங்கள்
கவிராயர் என்றிருந்தக் கால்"
என்று கேட்டார் காளமேகம்.
கவி என்றால் குரங்கு என்று
இன்னொரு பெயரும் உண்டு.
அதனால்தான் நீர் கவி என்கிறீரே
உமது வால் எங்கே?
நாலு கால் எங்கே?
நீண்ட வயிறு எங்கே?
ஊன் வடிந்த கண் எங்கே? என்று
கேட்டார் காளமேகம்.
"தலைமைப் புலவன் என்னிடமேயா?"
"தலைமைப் புலவரின்
பெயர் என்னவோ?"
"ம்.....அதிமதுர கவிராயர்."
"நல்லபெயர்....பெயரில் இருக்கும்
மதுரம் பேச்சில் இல்லையே...."
"என்ன திமிர் உமக்கு?
தலைமைப் புலவரையே எதிர்த்துப் பேசும்
அளவிற்கு நீர் புலமை மிக்கவரோ?"
"அப்படி நான் சொல்லவில்லை.
அறிந்தோர் சொல்லட்டும்?
"என்ன ஒரு தற்பெருமை.
ஆணவம்......."
"ஆணவம் இல்லை.ஞானச்செருக்கு."
"கவிமீது இவ்வளவு கர்வமா?
எக்கவியும் பாடுவீரோ?"
"என்ன கவி வேண்டும்?
கூறும். கூறிப் பாரும்."
"அரிகண்டம் பாடத் தெரியுமா?"
"அரிகண்டம் என்ன அரிகண்டம்?
எமகண்டமே பாடுவேன்.
அதற்கு நீர் தயாரா?"
"அரிகண்டம் என்றால் என்ன என்பது
உமக்குக் தெரியுமா?..தெரிந்துதான் பேசுகிறீரா?
இல்லை....தெரியாமல் உளறுகிறீரா"
"ஏன் தெரியாது?
கழுத்தில் கத்தியைக் கட்டிக்கொண்டு
கொடுக்கும் குறிப்புக்கு ஏற்ப பாட வேண்டும்.
அவ்வளவுதானே?"
"பாடத்தவறினால் என்ன நடக்கும் தெரியுமா?"
பாடத் தவறினால் உயிர் போய்விடும்.
என்பதும் தெரியும்"
"எதற்கும் துணிந்துவிட்டீர்.
இனி உம்மை அந்த எமனாலேயும் காப்பாற்ற முடியாது.."என்றார் அதிமதுரம்.
ஒவ்வொரு குறிப்பாக அதிமதுரம்
சொல்லச் சொல்ல அடுத்த நிமிடமே
பாடல் வந்து விழுந்தது.
சொற்சுவை இருந்தது. பொருளில் பிழை இல்லை.
இலக்கண வரம்பு மீறா வரிகள் வந்து
விழுந்தன.
அருமையானப் பாடல்கள்.
குறையில்லாப் பாடல்கள்.
மன்னரோ அதிமதுர கவிராயரோ இதனை
சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
முடிவில் காளமேகம் போட்டியில் வென்று விட்டார்.
இப்போது பரிசு வழங்க வேண்டும்.
பரிசு வழங்கினால் தனது ஆஸ்தான
கவிராயரைவிட சிறந்தவர் காளமேகம் என்பதை
ஒப்புக்கொண்டதாகிவிடும்.
அரசரின் மனம் இதற்கு இடங்கொடுக்க மறுத்தது.
பரிசு வழங்காமல் காலம் தாழ்த்தினார்.
இருந்து இருந்து பார்த்தார் காளமேகம்.
அரசர் பரிசு தருவதாக இல்லை.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தார்.
"கோளார் இருக்குமூர்
கோள்கரவு கற்றவூர்
காளைகளாய் நின்று கதறுமூர் -
நாளையே
விண்மாரி யற்று வெளுத்து
மிகக் கறுத்து
மண்மாரி பெய்கவிந்த வான்"
இந்தக் கொள்மூட்டிகள் இருக்கும் ஊர்
மழை இல்லாது
மண்மாரி பொழிந்து அழியட்டும் "என்று
வசைபாடிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
போட்டி முடிவில் பரிசுக்குப் பதிலாக
வசை பாடும்
காளமேகம் என்ற பெயரையும்
வாங்கித் தந்துவிட்டது.
அதுபோல அவருடைய வசைமொழியும்
பலித்து மண் மாரி பொழிந்தது வரலாறு.
போட்டிக்குப் போட்டி
சரியான போட்டி .
மண்மாரி பொழிய வைக்க
கவி மாரி பொழிந்தது வரலாறு இல்லையா?
(இன்னும் வரும்)
கருத்துகள்
கருத்துரையிடுக