ரோஜா தினம்

ரோஜா தினம்

ரோஜா…ரோஜா… ரோஜா ரோஜா
 ரோஜா ரோஜா ...... ...
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு 
வீடுவந்தேன்
உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன் அந்தத் திங்கள் தீண்டவும் விடமாட்டேன் உனை வேறு கைகளில் தரமாட்டேன்
நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்
ரோஜா…ரோஜா…ரோஜா…ரோஜா…

பாடல் காதோடு வந்து இனிமை சேர்க்க
என்னை மறந்தேன்.

ரோஜாவின் நினைவில் 
தொடர் வண்டி  நிலையம் 
நோக்கி 
பொடி நடையாய் நடக்க
அங்கே
கண்முன்னர் 
ரோஜா அணிஅணியாய்
கூடைகளில் அணியும் செய்து
வீற்றிருக்க
கால்கள் முன்னும் பின்னும்
தள்ளாட
ஏதின்று ரோஜா 
கண் சிமிட்டி 
கட்டி இழுக்கிறதே 
என்று கண்கள் விரிய 
என்ன நடக்கிறது 
ஒன்றும் புரியவில்லை 

பிப்ரவரி ஏழாம் நாள்
ரோஜா தினம் என்று 
உள்ளம் சொல்ல
உற்சாகம் ததும்ப
சிவப்பு ரோஜா முன்னர் 
வந்து நின்று
கைகளை நீட்டினேன்

 சார் எந்த கலர்
ரோஜா வேண்டும் 
 என்ற குரல் 
இடை மறித்து நிற்க

எந்தக் கலர்...
எந்தக் கலர் 
என்னையே
கேள்வி கேட்டு
சற்று ஒதுங்கி நின்றேன்

அதற்குள்
இது காதலர் வாரம்
காதலுக்கென்று முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட
காதலர்களின் இந்த வாரம் 
பிப்ரவரி 7 ஆம் நாள் 
தொடங்கும் என்ற செய்தி
நினைவலையில் 
மின்னலாய் ஓடி வந்து
மறைய

நான் 
எந்த வண்ண ரோஜாவை 
எடுத்தால் என்ன?
கொடுத்தால் என்ன?
தடுப்பதற்கு யாரிவள்
என்று ஒரு அசட்டுத்
தைரியத்தில் சிவப்பு ரோஜா முன்னர் நெடுநேரம் நின்றிருந்தேன்


காதலா?
காதலானால் சிவப்பு ரோஜா 
வாங்கி கையில் கொடுத்து
அசத்துங்கள் 
என்று சொல்லிச் சிரித்தது
சிவப்பு ரோஜா

இல்லை இல்லை 
அப்படியெல்லாம் இல்லை
என்று தலை தானாய் ஆட....

யாரையும் பாராட்ட வேண்டுமா
என்னைக் கையிலெடுங்கள்
உங்கள் பாராட்டு உரியவருக்கு சென்றடையும் என்று
கண் சிமிட்டியது
இளஞ்சிவப்பு ரோஜா

யாரைப் பாராட்ட 
ஏது சொல்லி பாராட்ட
காரணமில்லாமல் 
இளஞ்சிவப்போடு 
போய் நின்றால்
நன்றாக வா இருக்கும் என்று
முன் நீட்டிய
கை  தானாய்க்
கீழிறங்க

ஏன் நண்பர்கள் இல்லையா?
உங்களை உள்ளன்போடு
மகிழ்ச்சிப்படுத்திய நண்பருக்கு
இன்று என்னைக் கொடுத்து 
மகிழ்ச்சிப் படுத்துங்களேன் 
கண்களால் பேசி 
என்னைக் கவர்ந்தது
மஞ்சள் ரோஜா

எதிராளியோடு 
இணக்கமாய் போக
பிணக்கை நீக்கி
பிரியமாய்ப் பேச
பழைய கணக்கைத் தீர்த்து 
புதுக்கணக்கு எழுத
சமாதானத் தூதுவராக
நான்  செல்லட்டுமா
என்று அனுமதி கேட்டு
நின்றது 
வெள்ளை ரோஜா.


உவகையும் உற்சாகமும் கலந்த உணர்வோடு பெற்ற நன்றியைத் கொண்டாட என்னை எடு
கொண்டாடு என்று
கும்மாளமிட்டுக்
குறுஞ்சிரிப்பு சிரித்தது
ஆரஞ்சு ரோஜா

இத்துணை விளக்கம் 
அத்தனை ரோஜாக்களும் 
தந்த பின்னரும்
எனக்குள் ஒரு தயக்கம்
இதற்கொரு விளக்கம் 
இன்னும் யார் சொல்வார் என்ற
கலக்கம் முகத்தில்
அப்படிக் கிடக்க

ஏன் ஒற்றையாய்க் கொடுக்க
மனம் ஒப்புதல் அளிக்கவில்லையா?
என்று ரோஜாக்கூடை
மெல்லக் குரல் கொடுத்து
என் கவனத்தைத்
திருப்பியதோடு அல்லாமல் 

திருமண முன்மொழிவா
இரட்டை ரோஜாவைக்கொடுத்து
அசத்துங்கள்.

சமாதானம் பேசப் செல்லும்போது
ஒரு வெள்ளைரோஜாவையும் ஒரு சிகப்பு ரோஜாவையும் 
எடுத்துச் செல்லுங்கள் 
காரியம் கைகூடும்

உங்களுக்குள் இருக்கும் 
அன்பு போற்றப்பட வேண்டியதா?  
கொண்டாடப்பட வேண்டிதா
ஆறு ரோஜாக்கள் கொண்ட பூங்கொத்தைக் கொடுத்து அசர வையுங்கள்


உங்கள்  நேசமோ பாசமோ
காதலோ பிரியமோ 
உண்மையாக
நம்பிக்கைக்குரியதாக இருந்தால் பதினொரு  ரோஜாக்கள்
வைத்துக்
கட்டிய பூங்கொத்தைக் 
கையில் கொடுத்து
உங்கள் அன்பின் 
ஆழத்தைப் புரிய வையுங்கள்

ஒருவர் மீது நல்ல அபிப்பிராயம் இருக்கிறது என்றால் பதிமூன்று ரோஜாக்கள் கொண்ட  பூங்கொத்தைக் கொடுத்து நீங்கள் 
யார் என்பதை அறிய
வையுங்கள் 
என்று விரிவான 
விளக்கவுரை தந்து  
சிரித்தது ரோஜாக்கூடை.

"பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும்;
ரோஜாவோடு சேர்ந்த கூடையும்
காதலர் தினத்தில் கவனம் பெறும் "
புதுமொழி எழுத வைத்து
புன்னகைத்தது ரோஜாக்கூடை.

ஒற்றை ரோஜா ஒன்றை 
கையிலெடுத்து
கெத்தாக கடந்து வந்தேன்.

இப்போது உங்கள் உள்ளத்தில் ஒரு புதுக் கணக்கு ஒன்று ஓடி வந்து
விடை கேட்டு 
நிற்கும்
நிற்க வேண்டும் 

எந்த வண்ண ரோஜா 
எடுத்திருப்பேன்
என்ற கேள்வி உங்களை
தூங்க விடாமல்  துரத்தும்
மறுபடியும் ரோஜாக்களின்
எண்ணங்களோடு 
உங்கள் உள்ளம்
உரையாட
கட்டுரையை வாசித்துப் பாருங்கள் 
நான் எந்த வண்ண ரோஜா
எடுத்திருப்பேன் என்பது
உங்களுக்குப் புரியும்.
ரோஜா தினத்தை நான் 
கொண்டாடிவிட்டேன்.

நீங்களும் சரியான 
நிற ரோஜாவை
சரியான எண்ணிக்கையில்  
தேர்ந்தெடுத்து 
இனிய ரோஜா தினத்தை கொண்டாடுங்கள்!
வரட்டா...

இனிய ரோஜா தின வாழ்த்துகள் 👍

 -செல்வபாய் ஜெயராஜ்

கருத்துகள்

Popular Posts