நற்றாமரை கயத்தில் நல்அன்னம்
நற்றாமரை கயத்தில் நல்அன்னம்
"உன் நண்பன் யார் என்று சொல்
நீ யார் என்று சொல்கிறேன்"
என்பார்கள்.
நீ எப்படியோ அப்படித்தான் உவன்
சேர்க்கையும் இருக்கும் . ஒத்த குணம் இல்லாரோடு நட்பு வைத்துக்கொள்வது
அரிதினும் அரிது.
நட்பு யாரோடு அமையும்?
என்னென்ன காரணங்களுக்காக
அமையும்? என்று அலசி ஆராய்ந்து பார்த்தால்
ஆளுக்கொரு காரணத்தைச் சொல்லலாம்.
உதவிக்காக...
பணத்துக்காக....
ஒத்த கருத்து இருப்பதனால்
என்று மாறுபட்ட கருத்துக்களை
முன்வைக்கலாம்.
ஆனால் அதிகப்படியான வாக்குகள்
யாருக்கு
கிடைக்கும் என்றால்
ஒத்திசைவு அதாவது ஒத்தக் கருத்துகொண்டோர்
மாட்டு மட்டுமே
நட்பு அமையும் என்பதாகத்தான்
இருக்கும்.
இது இயல்பாக அமையும் ஒரு செயல்
என்றுதான் சொல்லவேண்டும்.
மூடனோடு அறிவாளி கைகோர்த்துச் சென்றால்
பார்ப்பவருக்கே வேடிக்கையாக இருக்கும்.
ஒரு புதுமை நடைபெறுவது போல
வினோதமாகப் பார்ப்பர்.
ஒத்திசைவு இருந்தால் நாட்டமும்
ஈர்ப்பும் தானாய் நிகழும்.
தேனீக்களுக்குத் தேன் இருக்கும்
இடம்தான் விருப்பமாக இருக்கும்.
வண்டுகளுக்கு மலர் மீதுதான்
ஈர்ப்பு உண்டு.
இவை எல்லாம் பயன் கருதியாகக்கூட இருக்கலாம்.
வண்டுகள் பூக்களைச் சுற்றி
முரலுவதைப் பார்த்திருப்போம்.
கருத்திசைவு, ஒத்திசைவு ,பயனிசைவு
இப்படி ஏதோ ஒரு இசைவின்
அடிப்படையில் ஈர்ப்பு
நிகழும்.
இதை எப்படிச் சொல்லித் தருவது?
என்று ஆராய்ந்தால் ஆளுக்கொரு பாடலைச்
சொல்லி என்னைத் திசைதிருப்பப்
பார்த்தனர்.
எனக்கு ஈர்ப்பு ஔவை பக்கம் இருந்ததால்
வேறு எந்தப் பக்கமும் திரும்பாமல்
ஔவை பக்கம் திரும்பினேன்.
அழகானப் பாடலொன்றைப் பாடி
கையில் கொடுத்தார் ஔவை.
என்னை ஈர்த்த ஔவையின் பாடல்
இதோ உங்களுக்காக...
"நற்றாமரைக் கயத்தில் நல்அன்னம்
சேர்ந்தார்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் -
கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்
முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்"
"குளத்தில் பூத்திருக்கும் தாமரை
மலரோடு அன்னப்பறவை சேர்ந்திருக்கும்
அதுபோல கற்றவரோடு சேர்ந்திருக்க
கற்றவர் மட்டுமே விரும்புவர்.
மூடர்களோடு மூடர்கள்தான் சேர்வர்.
இது எப்படி இருக்கிறது என்றால்
சுடுகாட்டுப் பிணத்தைச் சுற்றி
காகங்கள் அமர்ந்திருப்பது போல
இருக்கும் " என்கிறார் ஔவை.
தாமரை மலரோடு அன்னப்பறவை,
கற்றவரோடு கற்றவர் ,
மூடர்களைச் சுற்றி மூடர் ,
சுடுகாட்டுப் பிணத்தைச் சுற்றி இருப்பது
காகம்
இப்படி யாரோடு இருப்பார்
என்பதைத் தெளிவாக புரிய வைத்துள்ளார்
ஔவை.
இப்படி ஒத்திசைவு ,கருத்திசைவு,
பயனிசைவு மூன்றும் அடங்கிய
ஒரு பாடலை எழுதிக் கையில் தந்து,
இப்படித்தான் சேர்க்கை இருக்கும் என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்குப் போய்விட்டார்.
உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்
என்று மனம் ஒத்துக்கொள்கிறதல்லவா?
உண்மையை உரக்கச் சொல்லித் தந்த பின்னர்
ஔவை சொல்வதை ஏற்றுக் கொள்வதில் நமக்கென்ன தயக்கம் இருக்கப் போகிறது?
கருத்துகள்
கருத்துரையிடுக