மாதக்கடைசி

மாதக் கடைசி


சங்கருக்கு விதவிதமான வண்ணங்களில்

டீ ஷர்ட் அணிய ஆசை.

எந்தக் கடைக்குப் போனாலும் 

கண்கள் கடை முழுவதும் டீ ஸர்ட்டை

சுற்றிச் சுற்றியே வரும். அன்றும் 

அப்படித்தான் தெருவோரமாக டீ ஷர்ட் 

விற்கும் ஒரு வியாபாரியின் கடந்து

போனான்.


அவனைக் கடக்க விடாதபடி

வியாபாரியின் குரல் தடுத்து

நிறுத்தியது.

சற்று தடுமாறிய படி திரும்பிப் பார்த்தான்.

"அம்மா வாங்க ....ஐயா வாங்க...."

என்று கூவிக் கொண்டிருந்த வியாபாரி

சங்கர் நிற்பதைக் கண்டதும்

"வாங்க சார்‌ வாங்க....

என்ன கலருல வேணும்.

ஐயா கலருக்கு எல்லா கலரும்

பொருத்தமாகத்தான் இருக்கும்.

உங்களுக்கு ஏற்ற கலர்...

நல்ல நல்ல எழுத்து வடிவங்களில் 

இருக்கிறது...வாங்க வந்து பாருங்க "

என்று நாலைந்து முறை

 எடுத்து விரித்துக் காட்டினான்.


டீசர்ட்டை வாங்குவதற்கு முன்

சங்கர் கை தானாக பேண்ட் 

பாக்கெட்டுக்குள் சென்றது.


வியாபாரி புரிந்து கொண்டான்.


"அவ்வளவு அதிகமெல்லாம் இல்லீங்க

ஜஸ்ட்  கன்ரெட் ரூப்பீஸ் தான்.

இப்போ இல்லன்னா எப்பவும்

இந்த விலைக்குக் கிடைக்காது சார்..

வாங்க சார்...வாங்க சார்...

வாங்கிட்டுப் போங்க "

என்று விடாமல் தொண்டை தண்ணீர்

வற்ற குரல் கொடுத்துக்கொண்டே இருந்தான் ரோட்டோர துணி வியாபாரி.


இன்று ஒரு டீ சர்ட்டாவது விற்றுவிட வேண்டும் என்ற

முடிவோடு  சங்கரை விடுவதாக இல்லை.



சங்கர் கையில் பர்ஸ்சை எடுத்துத்

திறந்துப் பார்த்தான்.

இருநூறு ரூபாய் இருந்து சிரித்தது.


"ஒன்றை எடுக்கலாமா.... வேண்டாமா...வேண்டாம்

அம்மா பணம் எங்கே என்று கேட்டால்....?

அதுவும் மாதக் கடைசி.இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இந்த இருநூறு ரூபாய் நோட்டை எடுத்து எடுத்துப் பார்த்துதான் கடத்த வேண்டிருக்கிறது.

அதற்குள் புது செலவு எதுவும் வந்துவிடக்கூடாது...அப்பனே."

கண்கள் தானாக வானத்தைப் பார்த்தன.


நினைக்கும்போதே பெருமூச்சு வந்தது.



கையை வெளியில் எடுத்துவிட்டு

மறுபடியும் சட்டையைப் பார்த்தான்.

"இந்தா சார்...வாங்கிக்கோங்க சார்...

உங்க கலருக்கு ரொம்ப நல்லா

இருக்கும்.

எழும்பி வந்த வியாபாரி நேரே

சங்கர் மார்பில்

வைத்து அளவு பார்த்துவிட்டு 

சூப்பர் சார் ....அட்டகாசம்...

இப்பத்தான் ஒரு ஹீரோ லுக்கு இருக்கு...பிடியுங்க சார்.."என்று கையில் வைத்துவிட்டு

ரூபாய்க்குக்கூட காத்திராமல்..


"ஐயா வாங்க...அம்மா வாங்க "என்று

அடுத்த கிராக்கி பிடிப்பதில் மும்முரமாக இருந்தான்.


'வேண்டாம்பா 'என்று திருப்பிக்

கொடுத்துவிடலாம் என்றால் வியாபாரி சங்கர் முகத்தைக்கூட பார்ப்பதாக இல்லை.


"உங்க பட்ஜெட்டுக்குள்ள வாங்கிக்கலாம்.

இது பிடிக்கலியா..வேறு கலர் காட்டவா...?"

என்ற வியாபாரி வேறு கிராக்கியோடு பேரம்

பேச ஆரம்பித்துவிட்டான்.


 சங்கர் கையில் வைத்திருந்த டீ சர்டோடு

குழப்பத்தில் நின்றிருந்தான்.

மனம் அலுவலகத்திற்கு நேரம் ஆகுது 

என்று அலர்ட் செய்தது.

கையில் வைத்திருந்த டீஷர்ட்டை

திருப்பிக் கொடுக்கலாம் என்றால் மறுபடியும் 

இப்படியொரு கலரு கிடைக்காது என்று மனம் திருப்பிக் கொடுக்க மறுத்து

வாதாடியது.


"வேண்டாம்டா... மாசக் கடைசியாக

இருக்கு.... 

இருக்கிற பணத்திலதான்

மீதி நாட்களை ஓட்டணும் கிளம்பு...கிளம்பு"

மூளை கால்களுக்கு உத்தரவிட

கால்கள் நகர எத்தனித்தாலும்

கண்கள் நகர்வதாக இல்லை.


இது என்ன போராட்டம்.இப்போது 

மனம் வாங்கு வாங்கு  என்று விரட்ட

மூளை ஏய் பார்த்துச் செய் என்று உஷார்

படுத்த...

இந்த கடைநிலை ஊழியர்கள் வாழ்வே

அங்கு மில்லாமல் இங்குமில்லாமல் 

நடுவில் கிடந்து நாய்படாப் பாடு

படுவது தானோ?


சங்கரின் மனநிலையைக் புரிந்துகொண்ட வியாபாரி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.


இப்படிப்பட்ட டெம்டேசன் பேர்வழிகளை

 நம்பித்தானே வியாபாரமே நடக்கிறது.

சங்கர் கண்டிப்பாக டிஷர்ட் வாங்கிவிட்டுத்தான் நகர்வான்.

அவன் முழி அப்படி இருந்ததைப் பார்த்தும் வியாபாரிக்கு உள்ளுக்குள்  மகிழ்ச்சி.


திடீரென்று எழுந்து வந்த வியாபாரி

எழும்பி வந்து சங்கர் கையில் வைத்து

இருந்த சர்ட்டஐப் பிடுங்கி

என்னா தம்பி அப்படி பார்த்துகிட்டு நிற்கிறிய...இந்தாங்க பிடிங்க

 பார்சல் பண்ணி கையில்

வலுக்கட்டாயமாக கொடுத்துவிட்டான்.


வாங்கவா...வேண்டாமா

என்ற குழப்பத்தில் இருந்த

சங்கருக்கு  இப்போது தடுமாற்றம் தணிந்தது.



 சங்கரால் மறுக்க முடியவில்லை.

கைகள் தானாக நூறு ரூபாயை எடுத்து நீட்டின.


பார்சலை எடுத்துவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.


சற்று தூரம் வந்ததும் வாங்காமல்

வந்திருக்கலாமோ என்று மனம்

மறுபடியும் வாதிட்டது.


அம்மாவிடம் என்ன

சொல்லி சமாளிப்பது?

மனம் நூறு ரூபாயின் பின்னாலேயே ஓடிக்கொண்டிருந்தது.


வீடு வந்து சேர்ந்ததும் அம்மா... அம்மா 

என்று குரல் கொடுத்தான்.

ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்னொருபக்கம் உள்ளுக்குள் இருந்த நூறு ரூபாய் நோட்டு சங்கரைப் பார்த்து

சிரித்தது.


அதற்குள் அம்மா," தம்பி இன்றைக்கு

கடைக்குச் செல்லும்போது ரோட்டோரம் 

டீ சர்ட் விற்பவனைப் பார்த்தேன் .உனக்கு

நல்லா இருக்குமேன்னு ஒன்று வாங்கி வந்தேன்.

பிடித்திருக்கிறதா என்று பார்" என்று ஒரு  


டீ சர்ட்டை கொண்டு வந்து நீட்டினார்.


"எனக்கு எதுக்கும்மா...இப்ப போயி..."

சொல்ல வாயெடுத்தான்.

பேச முடியவில்லை. கண்கள் திருட்டு முழிமுழிக்க

கை தானாக வாங்கிக் கொண்டது.


"போட்டு காட்டு. உன் கலருக்கு நல்லா இருக்கும் "என்றார் அம்மா.

உள்ளுக்குள்  உதறல்.

எதையுமே வெளிக்காட்டாமல் டீ ஷர்ட்டைப் போட்டான்.


"உன் கலருக்கு கச்சிதமா

பொருந்தியிருக்கு "என்றார் அம்மா.


"ஏம்மா...மாதக் கடைசியில் போய்..".என்று சொல்ல விடாமல்

வியாபாரியின் முகம் கண் முன்னர் வந்து நிற்க  எதுவும் சொல்ல முடியாமல்

உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டான்.




கருத்துகள்

Popular Posts