நிற்க அதற்குத் தக
நிற்க அதற்குத் தக
(குறளும் குயிலும்)
குளக்கரையில் கொக்கு ஒன்று வெகு நேரமாக
ஒற்றைக் காலில் தவமிருந்து கொண்டிருந்தது.
சாயங்காலம் வரை தவம் இருந்ததுதான்
மிச்சம்.ஒரு மீன்கூட அகப்படவில்லை.
" எத்தனை நாளைக்குதான் இப்படி
காத்திருந்து ....காத்திருந்து...
பட்டினியால் சாவது."
வருந்தியது கொக்கு.
"என்ன செய்யலாம்? .".யோசித்தது.
" நீச்சல் கற்றுக் கொண்டால் மட்டும்தான்
இனி உயிர் வாழ முடியும்."
நீந்த கற்றுக்கொள்ள வேண்டுமானால் ....
யாரிடம் போவது?
எப்படி கற்றுக்கொள்வது?
என்னால் நீச்சல் கற்றுக் கொள்ள முடியுமா ?
நேரே தன் நண்பன் எருமையைத் தேடி போனது.
எருமை தோட்டத்தில் உள்ள ஒரு
மரத்தின் நிழலில் படுத்து நன்றாக அசை
போட்டுக் கொண்டிருந்தது.
" நண்பா...."மெதுவாக குரல் கொடுத்தது கொக்கு.
"அடடே....கொக்கு தம்பியா....
அரே...ஏது இந்த பக்கம்.." விசாரித்தது எருமை.
" உங்களைத்தான் ஒரு விசயமா
பார்க்க வந்திருக்கிறேன்..."
"ஏதும் பிரச்சினையா? "
கரிசனையோடு விசாரித்தது எருமை.
"வேறு என்ன பிரச்சினை இருக்கப் போகிறது?
எல்லாம் சாப்பாட்டு பிரச்சினை தான்."
" ஏன் குளத்தில் மீன் இல்லையா?"
" மீன் எல்லாம் இருக்கிறது.
மீன் எல்லாம் தந்திரமாக நடுகுளத்தில் கிடக்கிறது.
எப்படிப் போய் பிடிப்பது? "
தனது பிரச்சனையை எருமையிடம்
சொல்லிப் புலம்பியது கொக்கு.
" நீ சொல்வதும் சரிதான்."
"அதனால்தான் நீச்சல் கற்றுக் கொள்ளலாமா
என்று உங்களிடம்
கேட்க வந்தேன்."
என்றது கொக்கு.
" சரியான ஐடியா.... ஆனால் என்னால்
உனக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க முடியாதே"
என்றது எருமை.
உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது
நீச்சல் கற்றுத்தருவார்களா?
மெதுவாக எருமையிடம்
சிபாரிசு கடிதம் கேட்டது கொக்கு.
"வா ...என் நண்பன் தவளை
நீச்சல் பள்ளி
ஒன்று நடத்துகிறான்.போய்
கேட்டுப் பார்ப்போம். "
என்றது எருமை.
கொக்கு எருமை முதுகில் ஏறி உட்கார்ந்து கொள்ள
இருவரும் தவளையின் நீச்சல் பள்ளியில்
அட்மிஷன் வாங்க புறப்பட்டனர்.
எருமையைப் பார்த்ததும்,
"ஏது இந்தப்பக்கம்....அதுயாரு முதுகுல...
புதுசா இருக்கு "
என்று விசாரித்தது தவளை.
எருமையின் முதுகில் இருந்து
இறங்கி தவளையாருக்கு வணக்கம் சொன்னது கொக்கு.
"நீச்சல் படிக்க என் நண்பனுக்கு
உங்கள் பள்ளியில் ஒரு
அட்மிஷன் வேணும். "
சிபாரிசு செய்தது எருமை.
"இப்போது அட்மிஷன் எல்லாம் முடிந்து விட்டதே"
கண்களை உருட்டியபடி
பந்தா பண்ணியது தவளை.
"எப்படியாவது பார்த்து செய்யுங்க ...".
கெஞ்சலாக
கேட்டது எருமை.
"நீங்க ரொம்ப வேண்டி கேட்கிறதால
என்னால் மறுக்க முடியல...சரி வந்து
சேர சொல்லுங்க" கொஞ்சம் இறங்கி
வந்தது தவளை.
"நன்றிங்க...".என்று மறுபடியும்
வணங்கியது கொக்கு.
" ஆனால் ஒரு கண்டிஷன்.
குளத்தில் மட்டும்தான்
நீச்சலடிக்கக் கற்றுத் தர முடியும்.
ஓடுற தண்ணீரில்
நீச்சலடிக்கக் கற்றுத் தர முடியாது.
இந்த நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டால்
மட்டும் வாருங்கள் நான் கற்றுத்தருகிறேன்"
என்றது தவளை.
தவளையின் எல்லா நிபந்தனைகளுக்கும்
கொக்கு ஒத்துக் கொண்டது.
மறுநாளில் இருந்தே நீச்சல் பயிற்சி
தொடங்கியது.
ஒருமாத கால பயிற்சியை
இனிதே முடித்தது கொக்கு.
" அப்பாடா.... இனி பிரச்சனை இல்லை.
எப்படியும் குளத்தில் நீந்தி மீன்களைப்
பிடித்து தின்று
வயிற்றுப்பாட்டை கழித்து விடலாம்.."
நிம்மதி பெருமூச்சு விட்டபடி
விடைபெற்றுச் சென்றது கொக்கு .
மறுநாளில் இருந்தே குளத்தில்
நீச்சல் அடித்துச் சென்று
மீன்களைக் கொத்தி வந்து தின்ன
ஆரம்பித்தது கொக்கு.
நீச்சல் நன்றாகவே கை கொடுத்தது.
வயிறு நிறைய சாப்பாடு.
மகிழ்ச்சியாக நாட்கள் கடந்தன.
கோடைகாலம் வந்தது.
குளத்தில் தண்ணீர் வற்றத் தொடங்கியது.
தண்ணீர் இல்லாததால் இருந்த மீன்களும்
செத்துப் போயின.
இப்போது மீனுக்கு எங்கே போவது?
"கடலில் போய் மீன் பிடிக்கலாமே"
என்ற எண்ணம்
உதயமானது.
"இப்போது இருக்கிற ஒரே வழி .
கடலுக்குச் செல்வதுதான்"
ஒரு தீர்மானத்தோடு கடலை நோக்கிப்
பறந்து சென்றது கொக்கு.
ஓடுகிற நீரில் நீந்த கூடாது என்ற
தவளையின் கண்டிஷன்
நினைவுக்கு வர
கொஞ்சம் தயங்கியது கொக்கு.
"இருப்பினும் கடல் நீர் ஓடவா செய்கிறது?
ஒரே இடத்தில்தானே கிடக்கிறது."
என்று தனக்குத்தானே
சமாதானம் செய்துகொண்டது.
ஓரிரு நாட்கள் அலையில் அடித்து வந்து
கரையில் ஒதுங்கும் மீன்களைப் பிடித்து தின்றது.
"எல்லாம் சிறிய மீன்களாகவே இருக்கின்றன."
நீந்தி கடலுக்குள் சென்றால் நமக்கு விருப்பமான மீன்களைப் பிடித்து உண்ணலாம்.
கொஞ்சம் முயற்சி பண்ணி பார்ப்போமே"
மனதிற்குள் எழுந்த பேராசையால்
தப்புக்கணக்கு போட்டது கொக்கு.
மறுநாள்..
முன்பின் யோசிக்காமல் சட்டென்று
கடலுக்குள் இறங்கி நீந்த தொடங்கியது.
அதற்குள் பேரலை ஒன்று வந்து
அப்படியே கொக்கினை சுருட்டிக் கொண்டது.
கொக்கால் இப்போது எதிர்நீச்சல்
போட முடியவில்லை.
அலேக்காக அள்ளிக்கொண்டு
உள்ளே சென்ற அலை...
மறுபடியும் ....மறுபடியும் சுருட்டி
வெளியில் கொண்டு வந்து வீசியது.
அலையின் சுருட்டலில்
கசங்கிப்போன கொக்கு
" அம்மா ..."என்று கரையில் வந்து விழுந்தது.
இரண்டு சிறகுகளும் ஒடிந்து போயின.
கொக்கால் இப்போது பறக்க முடியவில்லை.
கொக்கின் நிலை பார்ப்பதற்கே
பரிதாபமாக இருந்தது.
" கற்ற கல்வி குளத்துக்கு மட்டும்தான் ...."
என்ற தவளையின்
பேச்சைக் கேட்காமல் போனதால்...
சிறகுகளை இழந்து பரிதாபமாகக்
கிடந்தது கொக்கு .
இவற்றை எல்லாம் கடற்கரையில் உள்ள
புன்னை மரத்தில் இருந்து பார்த்துக்
கொண்டிருந்த குயில்,
" நீதான் கடலில் நீந்த படிக்கலியே....
இதெல்லாம் உனக்கு தேவைதானா..."
என்று தலையில் அடித்துக் கொண்டது.
" கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக "
என்று வள்ளுவர் இதைத்தான் சொல்லியிருப்பாரோ
என்று பாடிக்கொண்டே பறந்து சென்றது
குயில்.
கருத்துகள்
கருத்துரையிடுக