மண்சட்டியும் மீன் குழம்பும்

மண்சட்டியும் மீன் குழம்பும்

அசைவம் சாப்பிடுகிற அனைவர்க்கும்
விருப்பமான குழம்பு ஒன்று உண்டென்றால்
அது மீன் குழம்பாகத்தான் இருக்கும்.
எங்க சித்தி வைக்கும் மீன்குழம்புக்கு
ஈடாக யாரும் மீன் குழம்பு
வைக்க முடியாது.
அது என்னவோ ஓடுகிறத் தண்ணீரில்
மீனைத் தேடிப் பார்ப்பது போல
குழம்பு தண்ணியாக இருந்தாலும்
ருசி மட்டும் குறையவே குறையாது.

கொஞ்சம் கெட்டியாக வைத்தால் என்ன என்று
கேட்டால் எட்டு தட்டுக்கு ஊற்றணும்.
அதுவும் இரண்டு நேரத்துக்கு....
ஆளுக்கு இரண்டு அகப்பை ஊற்றினாலும்
பதினாறு அகப்பை ஊற்றணும்.
கொஞ்சம்போல மிச்சம் இருந்தால்
சுண்ட போட்டு பழைய சோத்துக்கூட
கூட்டிகிட்டோம்ன்னா கூடுதலா
ஒரு தட்டு கஞ்சி குடிச்சிடலாம்
இல்லியா என்பார் சித்தி.


மீன்குழம்பு செய்வதே ஒரு கலை.
வெறுமனே பத்தோடு பதினொன்று
அத்தோடு இது ஒன்று என்று
செய்தால் சுவை இருக்காது.
பார்த்துப் பார்த்துப் பக்குவமாகச்
செய்ய வேண்டும்.
இப்படிச் செய்தீர்கள் என்றால்
சட்டி பத்தலைக்கூட விட்டு வைக்க
மாட்டீர்கள். 
சொல்லும்போதே இப்போதே மீன்குழம்பு
செய்து சாப்பிடணும் என்று தோணுது இல்லலையா?
அப்படிச் சொல்லித் தருவாங்க எங்க
சித்தி.
சித்தி மீன்குழம்புக்கு என்றே
தனி மண்சட்டி வைத்திருப்பார்கள்.
மீன் குழம்பு முடிந்ததும் அந்தச்
சட்டியையும் மூடியையும்  தனியாகக் கழுவி
கமத்தி விடுவார்கள்.

சித்தி மண்சட்டியில் செய்யும்
மீன்குழம்பை நினைத்தாலே
சாப்பிடணும்போல இருக்கும்.
மணம் நாலு தெருவரை  காற்றோடு
மிதந்து வரும்.


அதேன்னவோ மீன்குழம்பு
என்றாலே மண்சட்டியும்
சித்தி நினைவும்தான்
வருகிறது.
வாருங்கள் . சித்தி கிராமத்தில்
சொல்லித் தந்த மீன்குழம்பு செய்முறையை
நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.



மீன் குழம்பு செய்ய
தேவையான பொருட்கள் :

வற்றல்  :          7 
கொத்தமல்லி - இரண்டு கை அளவு
சீரகம் -                ஒரு கரண்டி 
நல்லமிளகு - ஒன்றரை கரண்டி
வெந்தயம் -      அரை கரண்டி
கடுகு ,உளுந்தம் பருப்பு-தாளிப்பதற்கு ஏற்ற அளவு         
தக்காளி -          நான்கு(நறுக்கியது)
பூண்டு-5 பல்
சின்ன வெங்காயம் -இரண்டு கையளவு(உரித்தது)
புளி -                சிறிது
மஞ்சள் -             ஒரு தேக்கரண்டி
தேங்காய் -            அரை மூடி ( துருவியது)
நல்லெண்ணெய்    - மூன்று கரண்டி அளவு
கொத்தமல்லி தழை  -ஒரு கையளவு( நறுக்கியது)
மாங்காய் - நீளவாக்கில் வெட்டியது ஐந்து
     (பழுக்கும் பக்குவத்தில் இருக்கும் காய் நல்லது)

முதலாவது மண்சட்டியை அடுப்பில் வைத்து
சிறிது எண்ணெய் ஊற்றி வற்றல் ,
கொத்தமல்லி, சீரகம், வெந்தயம்,
 ஆகியவற்றைத் தனித்தனியாக
வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
கறுக விடாமல் வறுத்து எடுத்துக்
கொள்ள வேண்டும்.


 வறுத்து வைத்த வற்றல் , கொத்தமல்லி,
சீரகம்,,வெந்தயம்
ஆகியவற்றோடு அரை கையளவு
நல்லமிளகையும் சேர்த்து
 மிக்சியில் 
பொடியாகத் திரிக்க வேண்டும்.
(சித்தி அம்மியில் அரைக்கச் சொல்லித்
தந்தார்கள். அப்போது அம்மி இல்லை
எனன செய்வது?
மிக்சியில் அரைப்போம்.)
பொடியாக நன்றாக அரைத்ததும்
அதனைத் தனியாக எடுத்து வைத்துக்
கொள்ளுங்கள்.

இப்போது வெங்காயம், தேங்காய்த் துருவல்,
 ஒரு தக்காளி,ஐந்து  பல் பூண்டு ஆகியவற்றையும் போட்டு
தண்ணீர் ஊற்றி தானமாக
அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
ரொம்பவும் பட்டுப் போல் அரைக்கக்
கூடாது. குழம்பு பிசுபிசுவென்று
சாப்பிட நன்றாக இருக்காது.

மண்சட்டியில் மூன்று கரண்டி
எண்ணெய்  ஊற்றி நறுக்கி
வைத்திருக்கும் 
தக்காளியைப் போட்டு வதக்குங்கள்.
தக்காளி வதங்கும்போது சிறிது
உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
அப்போதுதான் தக்காளி சீக்கிரம்
நன்றாக வதங்கும்.
தக்காளி வதங்கும்போதே அதன்மேல்
மீன் துண்டுகளைப் பரப்பி வைத்துவிட்டு
அதன்மீது சிறிது உப்பு,மஞ்சள் பொடி,
மசாலாப் பொடியில் ஒரு அரை
கரண்டி தூவி
 பாத்திரத்தை மூடி வைத்துவிடுங்கள்.
அடுப்பை நிதானமாக எரியவிட
வேண்டும். பிறகு 
நீளவாக்கில் வெட்டி வைத்துள்ள
மாங்காயை மீனின் மீது பரப்ப வேண்டும்.
பின்னர் ஒரு நான்கைந்து நிமிடம் மூடி
வைத்து வேக விட வேண்டும்.
 அப்படியே குலுக்கிக்
குலுக்கி மீனை மாற்றிவிழும்படிச்
செய்ய வேண்டும்.
கூடுமானவரை அகப்பையைப் போடாதிருப்பது
நல்லது .அப்போதுதான் மீன் உடையாமல்
அப்படியே கிடக்கும். 
இப்போது கொத்த மல்லித்தழையையும்
போட்டுவிட வேண்டும்.

அடுப்பில் மீன் முக்கால் வேக்காடு வரை
வேக வேண்டும்.

 பின்னர்
புளிக்கரைசலை ஊற்றி ஒரு கொதி 
கொதிக்கவிடவேண்டும்.
அதன்பின்னர்  மீதம்  இருக்கும் 
மசாலாப் பொடியைப் போட்டுத்
தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்கவிட
வேண்டும்.ஐந்து நிமிடம் கழித்து
 தேங்காய் விழுது அரைத்து
வைத்திருப்பதை  ஊற்றி
மசாலா வாடை  முறியும்வரை
நன்றாக கொதிக்க விட 
வேண்டும். ரொம்பவும் தண்ணியாக
இருக்கக்கூடாது.

கொஞ்சம் கெட்டியாக வரும்போது
அடுப்பிலிருந்து மண்சட்டியை இறக்கி
வைத்துவிட்டு
ஒரு வாணலியில் சின்னவெங்காயம், கடுகு உழுந்தம்
பருப்பு , சிறிது வெந்தயம்,கறிவேப்பிலை போட்டு தாளித்து
குழம்பின் மீது ஊற்றி 
சட்டியினுள் அகப்பையை விடாமல்
சட்டியைத் தூக்கி இரண்டு மூன்று சுற்று
சுற்றினால் தாளிப்பு முழு குழம்போடு
கலந்துவிடும்.
இரண்டு கொத்தமல்லி தழையை
குழம்பின்மீது தூவி சட்டியை மூடி வைத்துவிட வேண்டும்.

இப்போது மீன்குழம்பு தயார்.

மண்சட்டியில் மீன் குழம்பு 
கொதிக்கும்போதே ஊரைக் கூட்டிவிடும்.
தயாரித்த பின்னர் 
 கெட்டியாக மூடி வைத்துக்
கொள்ளுங்கள்.
அப்போதுதான் திறக்கும்போதெல்லாம்
மணம் கமகமவென்று சுண்டி இழுக்கும்.

இப்படி மீன்குழம்பு மண்சட்டியில்
வைத்துப் சாப்பிட்டுப் பாருங்கள்.

எந்த மீனாக இருந்தாலும் 
குழம்பு ருசியாகவே இருக்கும்.

மீனும் எடுத்து தின்பதற்கு உப்பு காரம்
எல்லாம் சேர்ந்த சுவை உடையதாக
பொரித்த மீனைவிடச்
சுவையாக இருக்கும்.

நித்தம் நித்தம்  நெல்லுச்சோறு
என்பதுபோல நித்தம்நித்தம்
மீன் குழம்பு என்று 
உங்கள் நாக்கு கேட்கும்.

மண்சட்டியில் மீன்குழம்பா?
 அப்பப்பா..!இப்பவே நாக்கில்
எச்சில் ஊறுதே....உடனே மீன்குழம்புக்கு என்று
ஒரு மண்சட்டியும் வாங்கி விடுங்கள்!

மண்சட்டிக்கு மாறுங்கள்.
மண்வாசனையோடு மீன்குழம்பு
வைத்துச் சாப்பிடுங்கள்.
வரட்டா....

     -செல்வபாய் ஜெயராஜ்

கருத்துகள்

Popular Posts