பெரிதினும் பெரிது கேள்

பெரிதினும் பெரிது கேள் 



"கற்றலினாயினும் கேட்க" என்றார் வள்ளுவர்.


கற்றலினும் கேட்டல் நன்று.

ஆனால் என்ன கேட்க வேண்டும்?

எப்படிக் கேட்க வேண்டும்?

எதைக் கேட்க வேண்டும்?

யார் சொல்வதைக் கேட்க வேண்டும்?

இப்படி பல கேள்விகள் முன்வந்து

நின்று விடை கேட்டு நிற்கும்.


இவை எல்லாவற்றிற்கும் 

நல்லதைப் கேட்க வேண்டும் என்று சொல்லி கடந்து போய்விடுவோம்.


ஆனால் பாரதி கேட்டல் எப்படி இருக்க வேண்டும் என்று மாறுபட்ட கோணத்தில் சிந்தித்திருக்கிறார்.

அதனால் நமது அனைத்துக் கேள்விகளுக்கும் ஒற்றை வரியில்

விடை தந்துவிட்டார்.


"பெரிதினும் பெரிது கேள்" 

அருமையான பதில். 

யாரும் எதிர்பார்க்காத பதில்.


என்ன பெரிதாக கேட்க வேண்டும்?


உனக்கு என்ன தேவையோ அது இதுவரை இல்லாததாக இருக்க வேண்டும்.

அதைக் கேள்.

இதுதான் இந்தப் பெரிதினும் பெரிது கேள் என்பதற்கான பொருளாக இருக்க வேண்டும்.


ஆனால் இந்தக் கேட்டல் ஆளாளாளுக்கு 

வேறுபடலாம்.

 

அவர்களுடைய கருத்து நமக்கு ஏற்புடையதாகவும் இருக்கலாம்.

அல்லாததாகவும் இருக்கலாம் .


அவரவர் மனதில் பட்டபடி முன்னூற்று அறுபது பாகையிலிருந்தும் விமர்சனங்களையும் கருத்துக்களையும் பொருளையும் வீசட்டும் . தப்பில்லை.

அப்போதுதான் அதன் உண்மையான பொருள் என்ன என்பதை அனைவரும் புரிந்துகொள்ள முடியும்.



உன் இலக்கு பெரியதாக இருக்கட்டும்.

உன் சிந்தனைகள் பெரியனவாக இருக்கட்டும்.

உங்கள் எதிர்பார்ப்பு பெரியவையாக இருக்கட்டும்.


நாம்  ஆசைப்படும் எதுவாக இருந்தாலும் அது நாம் முன்பு ஆசைப்பட்டதைவிட 

உயர்ந்ததாக இருக்க வேண்டும்.

இந்தத் தொலைநோக்குப் பார்வையில் தான் பாரதி இந்த வரியைத் தனது புதிய ஆத்திச்சூடியில் எழுதியிருப்பார். எழுதியிருக்க வேண்டும்.


நமது தேடல் எப்போதும் பெரிதாக இருக்கும்போதுதான் நாம் வளர

வேண்டும்  என்ற ஆசை ஏற்படும்.


நமது லட்சியம் ,கனவு,இலக்கு யாவும்

உயர்வாக இருந்தால் அதை அடைய விடா முயற்சியோடு செயலில் இறங்கி உழைக்கக் தொடங்குவோம்.


நேற்றைவிட இன்று சிறப்பாக இருக்க வேண்டும்.

இன்றைய நாளை விட  நாளை மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட கனவுகளோடு உழைத்தவர்கள் தான் வெற்றி பெற முடியும்.



நாம் இன்று மனதில் போட்டு வைக்கும் விதை  நாளை பெரிய மரமாக வளர்ந்து நிற்கும். மரம் கனி கொடுப்பதாக இருக்க வேண்டுமானால்

நாம் போடும் விதை உயர்தரமிக்கதாக இருக்க வேண்டும்.


எண்ணங்கள் தான் செயல்களின் வித்து. எனவே எண்ணங்கள் பெரிதாக இருக்க வேண்டும்.. 


மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் உயர்ந்த லட்சியங்களையும் குறிக்கோளையும் கொண்டு செயல்பட வேண்டும் என்பது பாரதியின் விருப்பம்.

அதனால்தான் பெரிதினும் பெரிது கேள் என்று சொல்லித் தந்திருக்கிறார்.


வெற்றி என்பது பெரும்பாலும் பல தடைகள் நிறைந்த நீண்ட பயணம் . இந்த தடைகளை தாண்டி இலக்கை அடைய முயற்சி மிக மிக அவசியம்.


அதனால் உயர்ந்த இலக்குகளை குறிவையுங்கள் என்கிறார் பாரதி.



"பெரிதினும் பெரிது கேள்".


வாழ்வில் பெரியவற்றை மட்டுமே அடைய வேண்டும் என்ற முயற்சி மேற்கொள்ளுங்கள்.

கேட்பவை நிச்சயம் கிடைக்கும்.

பெரிதினும் பெரிது கேள் என்ற பாரதியின் வரிகளை மனதில் எழுதி வைத்துக்கொண்டு ஒவ்வொருநாளும்

பெரியவற்றை நோக்கியே உங்கள் தேடல் இருக்கட்டும்.

உங்கள் பெரிதான லட்சியம் 

நிறைவேற வாழ்த்துகள்.



கருத்துகள்

Popular Posts