பிரளயம் வருமா?

           





   பிரளயம் வருமா?


வழக்கத்திற்கு மாறான பெருவெள்ளம்.
பார்க்கும் இடமெங்கும் வெள்ளக்காடு.
மழை ஓவென்று ஒப்பாரி வைத்து
தன் கொண்டாட்டத்தை நிறுத்தவில்லை.
சிறுகுளங்கள் எல்லாம் உடைப்பெடுத்து
ஊருக்குள் தண்ணீர் வந்துவிடுகிறது.
அவ்வளவுதான் ஊர் முழுவதும் கூச்சலும்
கூப்பாடுமாக மாறிவிடுகிறது.
என்ன செய்வதெனத் தெரியாத பதற்றம்.
ஐயோ...ஜலப் பிரளயம் வந்து
உலகம் அழியப் போகிறது போலிருக்கிறதே
என்று ஆளாளுக்குப் புலம்பத்
தொடங்கிவிடுகின்றனர்.

இப்படிப்பட்டதான சூழ்நிலை பல நேரங்களில்
நிகழ்ந்ததுண்டு.
இப்போதே ஊர் அழிந்து போகக் கூடுமோ
என அஞ்சி இருப்போம்.
எல்லாம் நான்கு நாட்கள்தான்.
அதன்பிறகு பிரளயம் வந்ததற்கான
சுவடே இல்லாமல் போய்விடும்.

"பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்து
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள "
என்ற சிலப்பதிகார அடிகள் பிரளயத்தால்

குமரிக் கண்டம் காணாமல் போனதைப் பற்றி

குறிப்பிடுகிறது.

ஆனால் பலமுறை இறைவன் பிரளயத்தை
அனுப்பி உலகை அழிக்க முயன்றிருக்கிறார்.
ஆயினும் அவரால் ஒட்டு மொத்த உலகையும்
அழிக்க முடியவில்லை. காரணம்
எங்கேயாவது ஓர் இடத்தில் ஒரு நல்லவர்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

ஏழு மேகங்கள் உருண்டு திரண்டு
குமுறி...குமுறி இடையறாது ஓவென்ற
ஒப்பாரியோடு மழையாகக் கொட்டித் தீர்க்க
அதுகண்ட கடல் ஆரவாரத்தோடு எழும்பி
தானும் தன் பங்குக்கு ஆரவாரித்து எழும்புகிறது.
ஆர்ப்பரிப்பும் குமுறலுமாய்  பொங்கி எழும் கடலலை
தன் அலைக் கரத்தால்  நீட்டி, நாடுகளையும்
காடுகளையும் தனக்குள் ஈர்த்துக் கொள்கிறது.
இப்படிப்பட்ட நிகழ்வு நடைபெறும்போது
அதனை ஊழி என்கிறோம்.

இதைத்தான் பிரளயம் என்று நாம்
சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

பிரளயம் என்றாலே அழிவு என்ற
பொருள் உண்டு.

அழிவு நீரால் விளையலாம்.
பூகம்பம் போன்ற இயற்கைப் பேரிடர்
மூலமாகவும்  நிகழலாம்.

பொதுவாகவே பிரளயம் வந்தால் உலகம்
அழியப் போகிறது என்ற அச்சம் அனைவர்
மனதிலும் எழுவது இயல்பு.

இந்தப் பிரளயம் எதனால் ஏற்படுகிறது
என்பது நாம் அறியா ஒன்று.
வெறுமனே இயற்கைப்
பேரிடர் என்று சொல்லிவிட்டு எளிதாக
கடந்து போய்விட முடியாது.
அதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும்
மனிதனிடம் காணப்படும் தீயச் செயல்கள்தான்
முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.

அப்படியானால் சமூகத்தில் தீமைப் பெருகும்போது
மனிதனைத் தண்டிப்பதற்காக இறைவனால்
அனுப்பப்படும் அழிவு சக்திதான் இந்தப் பிரளயம்
என்பது பல வரலாற்று நிகழ்வுகளால்
நிரூபணமாகிறது.

பிரளயத்திற்கான காரணத்தை
ஜின்னாஹ் ஷரீபத்தீன் என்ற கவிஞர் தனது
பிரளயம் கண்ட பிதா
என்ற இசுலாமிய குறுங்காப்பிய நூலில்
கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

"கொலைக்களவு வழிப்பறியும்
பொய்யும் சூதும் கூறவியலாபடி
மலிந்தே போக
அந்நாள் மக்கள் விபசாரயலைந்தார்
நீதி நேர்மை தொலைதூரம்
ஒழிந்தோடிப் போனதாலே
துணிவு பலம் உள்ளவர்கள்
பிறரை ஏய்த்தார்
சிலைகளெங்கும் கடவுளராய்த் தோன்றி ஏக
தெய்வச் சிந்தை அற்று மக்கள் திசை கெட்டாரே"

எனப் பிரளயத்திற்கான காரணம் எதுவென
கற்பிக்கிறது இந்தப் பாடல்.

மகா பிரளயம் என்று உண்டு
அது தீயினால் ஏற்படும் பேரழிவு.
மகாபிரளயம் ஏற்பட்டால் அதன்பிறகு
பூமியில் எதுவுமே இருக்காதாம்.
சிறிது காலத்திற்குப் பிறகே இறைவனால்
மறுபடியும் உயிர்கள் படைக்கப்படும் என்ற
செய்திகளும் உள்ளன.

பிரளயம் பற்றிய செய்திகள்
புராணங்களில் ஏராளம் உள்ளன.
நாலு வகையான பிரளயம் உள்ளதாக
சோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன.

ஒரு முறை பிரளயம் ஏற்பட்டபோது மீன் வடிவம்
எடுத்து விஷ்ணு பகவான் தனது பக்தனைக்
காத்த வரலாறு சுவாரசியமானது.

சத்திய விரதன் என்று ஒரு ராஜரிஷி
இருந்தாராம். அவர்  மகா விஷ்ணுவை
நோக்கி கடும் தவம் புரிந்து வந்தார்.
வெறும் நீரைத் தவிர வேறு எதனையும்
அவர் ஆகாரமாக எடுத்துக் கொள்வதில்லையாம்.

ஒருநாள் அவர் பூஜை செய்வதற்காக
ஒரு நதிக்குச் சென்று தன் இரு கைகளாலும்
நீரை அள்ளினாராம். நீரோடு சேர்ந்து ஒரு
சிறிய மீனும் கையில் வந்துவிட்டதாம்.
சிறிய மீன்தானே ...ஐயோ பாவம்
பிழைத்துப் போகட்டும்....
என்று மீனைத் தூக்கி தண்ணீரில் விட்டுவிட
முயன்றாம் முனிவர்.
அப்போது ,
"என்னை தயவு செய்து நதியில் விட்டுவிடாதீர்கள்.
அங்குள்ள பெரிய மீன்கள் என்னைத் தின்றுவிடும்"
என்று கெஞ்சியதாம் மீன்.

மீன் சொல்வதும் ஞாயமாகத்தான் தெரிகிறது
என்று பரிதாபப்பட்ட முனிவர் உடனே
மீனை தன் கமண்டலத்திற்குள் போட்டு
தன்னோடு தூக்கி வந்துவிட்டாராம்.

கமண்டலத்திற்குள் இருந்த மீன் ஓர் இரவுக்குள்
கமண்டலம் அளவு பெரியதாக வளர்ந்துவிட்டதாம்.

இந்தமீன் வளருவதற்குப் கமண்டலத்தில் இருக்கும்
நீர் போதாதது போல் இருக்கிறதே...
என்று நினைத்த முனிவர் கொஞ்சம்
பெரிய பாத்திரத்தில் நீர் ஊற்றி
அந்தப் பாத்திரத்தில்
மீனை விட்டுவிட்டாராம்
இப்போதும் முன்னர் நிகழ்ந்தது போலவே  மறுபடியும்
மீன் ஒரே நாளில் பெரிதாக வளர்ந்துவிட்டதாம்.

இதுவும்  சரிபடாது. எங்காவது பெரிய நீர் நிலையில்
கொண்டு விட்டுவிட வேண்டியதுதான் என்று
ஒரு குளத்தில் கொண்டுபோய்
விட்டுவிட்டாராம் முனிவர்.
மறுநாளே மிகப் பெரிய மீனாக
வளர்ந்து விட்டதாம்.

இதுவும் போதாது...இனி இந்த மீனைக் கடலில்
போய் விட்டுவிட வேண்டியதுதான்
என்று கடலுக்குக் கொண்டு சென்றாராம் முனிவர்.

இப்போது மீன், "ஐயையோ... என்னைக் கடலில்
விட்டுவிடாதீர்கள்...கடலில் உள்ள திமிங்கலங்கள்
என்னைத் தின்றுவிடும்."
என்றதாம் .

இப்போதுதான் முனிவருக்கு ஒரு உண்மை புரிந்ததாம்.
அது எப்படி ஒரே நாளில் இவ்வளவு பெரிதாக
ஒரு மீன் வளர முடியும்.இது இறைவனுடைய
திருவிளையாடல்களுள் ஒன்றாகத்தான்
இருக்க முடியும் என்று நினைத்து,

"ஐயனே! ஒரு மீனாக வந்து தங்கள் லீலையை
நடத்த என்னைத் தேர்ந்தெடுத்தக் காரணத்தை நான்
தெரிந்து கொள்ளலாமா..."என்று இறைவனை
நோக்கிக்கேட்டாராம் முனிவர்.

அதற்கு மீன் அவதாரத்தில் வந்த

இறைவன் இன்னும் ஏழு நாட்களில் பூமியும்
விண்ணும் அதற்கு இடைப்பட்ட வெளியும்
பொங்கிவரும் பிரளயத்தால் அழியப்போகிறது.

"என் பக்தனான உன்னைக் காப்பாற்றத்தான்
மீன் அவதாரம் எடுத்துள்ளேன்

நான் உனக்கென்று பிரத்தியேகமாக
உருவாக்கப்பட்ட ஒரு தோணியை
அனுப்பி வைக்கிறேன். அந்தத் தோணியில்
தேவையான மூலிகைகளையும்
விதைகளையும் எடுத்துக் கொண்டு
தப்பித்துக் கொள் "என்றாராம்.

அந்தபடியே பிரளயமும் வந்ததாம்.

முனிவர் தோணியில் ஏறி தப்பித்துக்
கொண்டாராம். இது ஒரு கதை.

சோதிட நூல்களும் இப்போது நடப்பதுகடைசி
காலமான கலியுகம் என்று கூறுகின்றன.

கலியுகத்தில் என்னென்ன எல்லாம் நடக்கும்
என்று ஞானிகளும் சித்தர்களும் எழுதி
வைத்துள்ளனரோ அவை எல்லாம் இப்போது
நடந்தேறி வருகிறது.

அதனால் இறைவன் கோபங்கொண்டு
உலகை அழிக்க நேரிடலாம் என்பது
அனைவரின் கணிப்பு.கணிப்பு மட்டுமல்ல.

அச்சப்பட்டுள்ளனர் என்பதுதான் உண்மை.

பைபிளில் பிரளயம் பற்றிய செய்தி உள்ளது.
நோவா என்ற தெய்வ மனிதன் வாழ்ந்த காலத்தில்

கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாத

மக்களை  ஊழிப் பெரு வெள்ளத்தால்
தண்டிக்க எண்ணினார் ஆண்டவர்.
ஆனால் நோவா நீதி தவறாத நல்ல மனிதன்.
அவனை எப்படி அழிக்க முடியும் ?
அவனையும் அவன் குடும்பத்தாரையும்
காப்பாற்ற எண்ணுகிறார் தேவன்.

அதனால் நோவாவை அழைக்கிறார்.
நோவா ஆண்டவரின் குரலைக் கேட்டதும்
தரையில் மண்டியிட்டு "ஆண்டவரே பேசும் அடி்யேன்
கேட்கிறேன் "என்கிறார்.

"உலகில் உள்ள மக்கள் அனைவரும்
என்னைவிட்டு விலகிச் சென்றுவிட்டனர்.
தீமை அதிகரித்துவிட்டது. நான் அவர்களை அழிக்க
சித்தம் கொண்டுள்ளேன்" என்கிறார்.

அதிர்ச்சியடைந்த நோவா, " எல்லா மக்களையுமா? "
என்கிறார்.

"இதிலென்ன சந்தேகம். இருப்பினும் உன்னையும்
உன் குடும்பத்தாரையும் அழிக்க மாட்டேன்."

என்கிறார் தேவன்.

அது எப்படி என்பதுபோல .. தேவனை நோக்கிக்
பார்த்திருக்கிறார் நோவா.

"நான் பிரளயத்தால் உலகை அழிக்கப் போகிறேன்.
அனைவரும் தண்ணீரில் மூழ்கி மாண்டு
போகட்டும் " என்கிறார் ஆண்டவர்
மறுபடியும் கோபமாக.

"நான் மட்டும் எப்படித் தப்புவது?
...உயிரினமே இல்லாத
உலகில் நான் மறுபடியும் எப்படி வாழ முடியும்?"
என்று அடுக்கடுக்காக கேள்விகளைக்
கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறார்  நோவா.

"ஒரு பேழையை உருவாக்கு.
அதனுள் நீயும் உன் குடும்பத்தாரும்
மட்டும் செல்லுங்கள்.
கூடவே ஒவ்வொரு ஜோடி விலங்கு ,பறவை,
ஊர்வன போன்றவற்றையும்
உடன் கொண்டு செல்லுங்கள். அவை நீங்கள்
மறுபடியும் உலகிற்குள் பிரவேசிக்கும்போது
பலுகிப் பெருகி உங்களுக்கு உதவியாக
இருக்கும் " என்கிறார் ஆண்டவர்.

ஆண்டவரின் கட்டளைப்படி நோவா பேழையை
உருவாக்குகிறார்.

நோவாவும் குடும்பத்தாரும்  பேழைக்குள் சென்ற
பின்னர் பிரளயம் ஏற்படுகிறது.

நாற்பது நாட்கள் விடாத மழை.
வெள்ளப் பெருக்கு. உலகின் அனைத்து
உயிரினமும் அழிந்துவிட்டது.
நாற்பது நாட்களுக்குப் பின்னர்  நோவா வெளியில்
நீர்வற்றிவிட்டதை உறுதி செய்துகொண்டு
வெளியில் வருகிறார்.

வெளியில் வந்த நோவாவுக்கு தேவன்
ஒரு உறுதி அளிக்கிறார்.
"இது போன்ற பேரழிவை
இனி ஏற்படுத்த மாட்டேன் .தண்ணீரால் இனி
இந்த உலகம் ஒருபோதும் அழியாது.

இதை உனக்கு உறுதியாகவே தெரிவிக்கிறேன்.
அதன் அடையாளமாக வானத்தில்
வானவில்லை வைக்கிறேன் "என்கிறார்.

இது பிரளயத்தைப் பற்றி பைபிள் கூறும்

செய்தி.

மழை நாட்களில் வானில் தோன்றும் 

வானவில் தேவனின்
உடன்படிக்கையை இன்றும் உலகுக்கு 

நினைவுபடுத்துவதாக உள்ளது.

அப்படியானால் இனி ஒரு பிரளயம் வராதா?

ஏன் இந்த ஐயம்...கண்டிப்பாக பிரளயம் வந்து
அழிவு ஏற்படாது என்பதை
உறுதியாக நம்பலாம்.இறைவனே உறுதியளித்த

பின்னர் பிரளயம் ஏற்படுமா என்ன?

பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன் "
என்றார் வள்ளுவர்.



நல்லவர்களால்தான் உலகம் இன்றளவும்
 இயங்கிக் கொண்டிருக்கிறது.

நல்லவர் ஒருவர் இருந்தால் போதும்.
பிரளயம்  வரவே வராது.











"

Comments

  1. The theme (No end to the world) & the way presented by you are appreciable.

    ReplyDelete
  2. மிக அருமையான பதிவு

    ReplyDelete
  3. கடவுளின் வார்த்தை மாறாது. பிரளயத்தால் அழிவு இல்லை. அருமையான பதிவுக்கு நன்றி👏👏👏🌹🌹

    ReplyDelete
  4. பிரளயம் பற்றியப் பதிவு மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts