கடவுள் ஏன் கல்லானான்....

கடவுள் ஏன் கல்லானான்....


கேள்வி கேளுங்கள்.
கேட்க கேட்கத்தான் அறிவு வளரும்.
கேள்வி கேட்கும்போது 
புதியனவற்றைத் தெரிந்து கொள்கிறோம்.

அதிகம் கேள்வி கேட்கப்படும்
இடங்கள் மூன்று என்பர்.
முதலாவது வீடு.

ஏன் ? எதற்கு ? எங்கே ? 
என்ற கேள்விகள் கேட்காத வீடுகள்
இருக்க முடியாது.

சண்டைக்கான அடித்தளமே கேள்வியில்தான்
தொடங்குகிறது.

அடுத்து வகுப்பறை .
 அதிகம் கேள்விகள் கேட்கப்படும் 
 இடம் வகுப்பறை.

மாணவர்களை அதிகம் கேள்வி
கேட்க அனுமதியளிக்காத இடம்
என்றுதான் சொல்ல வேண்டும்.
பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவர்களைக்
கேள்வி கேட்க அனுமதிப்பதில்லை.

மூன்றாவது நீதிமன்றம் கேள்வி கேட்கப்படும்
இடம். அஞ்சி அஞ்சி விடை
சொல்லும் இடம்.

இவை தவிர நண்பர்களுக்கிடையே 
பேசும்போது கேள்வியும் விடையும் 
சகஜமாக வந்து விழும்.

குழந்தைகள் அதிகம் கேள்வி கேட்பர்.
பதில் சொல்லும் இடத்தில் இருக்கும்
பெற்றோர் பல நேரங்களில் பதில்
சொல்ல முடியாமல் தடுமாறுவர்.

இப்படி கேள்வி இல்லா இடம்
இல்லை. கேள்விக்கான  விடையைத்
தேடி அலைபவன்தான் அதிகம்
தெரிந்து கொள்கிறான்.
அறிவாளியாகிறான். அறிவியல் உலகின்
கண்டுபிடிப்புகள் யாவும் ஏன் ? எதற்கு ? எப்படி?
என்ற கேள்விகளுக்கு விடை 
தேடியவையாகத்தான் இருந்திருக்கின்றன.
இவை ஒருபுறம்  இருக்கட்டும்.

கேள்வி கேட்பதற்கு என்றே
ஒருவர் இருந்தாராம்.அவர்
கூடவே பதில் சொல்வதற்காக 
மற்றுமொருவரைச்
சுமந்து கொண்டே செல்வாராம்.

கேள்வியும் பதிலும் கூடவே திரியும்
வேடிக்கை மனிதர்கள் யார் என்று
அறியும் ஆவல் ஏற்படுகிறதல்லவா! 
வேறு யாரும் இல்லைங்க...
நம்ம இளஞ்சூரியனும் முதுசூரியனும்தான்.

யாரிந்த இளஞ்சூரியன், முதுசூரியன்?
அவர்கள் என்ன உங்கள் பக்கத்து வீட்டுக்
காரங்களா ?என்று நீங்கள் கேட்பது
என் காதுகளில் விழுகிறது.

நீங்கள் கேள்வி கேட்டு நான் பதில்
சொல்லாமல்  போனால்  சொல்ல வந்த
கருத்துக்கே பொருளில்லாமல் போய்விடும்.

இரட்டைப் புலவர்கள் என்று அழைக்கப்
பட்டவர்கள்தான் இந்த இளஞ்சூரியனும்
முதுசூரியனும்.
இருவரும் மாற்றுத்திறனாளிகள்.
ஒருவர் பார்வையற்றவர்.  மற்றொருவர்
கால் ஊனமானவர்.

பார்வையற்றவர் கால் ஊனமுள்ளவரை
தன் தோளில் சுமந்து செல்வார்.
ஊனமுள்ளவர் வழிகாட்டுவார்.
இப்படியே ஊர் ஊராகச் சென்று
கவி பாடுவது இவர்களது வழக்கம்.

இந்த இரட்டையர்களில் ஒருவர்
இல்லாமல் மற்றவர் இல்லை.
அதுபோல ஒருவர் பாடிய பாடலை நீக்கினால்
அவர்கள் பாடலிலும்  முழுமை இருக்காது.

கேள்வியும் பதிலுமாகவே
இவர்களுடைய பாடல் இருக்கும்.
ஒருவர் கேலியாகப் பாடினால்
மற்றவரும் கேலியாகப் பதிலுரைத்துப்
பாடலை முடித்துவிடுவார்.

இவர்களுடைய பாடல் அழகே
முதல் இரண்டு அடிகளும் கேள்வியாக
இருப்பதும் இறுதி இரண்டு அடிகளும்
விடை சொல்வதாக அமைவதுமே ஆகும்.

இப்படிப்பட்ட பாடல்கள் படிப்பவர்களிடையே
இந்தக் கேள்விக்கு என்ன சொல்லியிருப்பார்
என்று அறிய வேண்டும் என்ற ஆர்வத்தைத்
தூண்டுவதாக இருக்கும்.

ஒருமுறை இந்த இரட்டையர் ஓர்
ஊர் வழியாகச் செல்கின்றனர்.

அந்த ஊரில் அதிகமாக அநீதி
நடந்து கொண்டிருக்கிறது. தட்டிக்கேட்க
யாருமே முன்வரவில்லை.
வம்பர்களிடம் தட்டிக் கேட்டால்
வம்புதான் வந்து சேரும் என்று
அனைவரும் ஒதுங்கியே இருந்தனர்.
ஆனால் எத்தனை நாளைக்குத்தான்
ஒதுங்கி இருப்பது?

தங்களுக்குள் முணுமுணுத்துக்
கொள்வதைத் தவிர அவர்களுக்கு
வேறு வழி தெரியவில்லை.

"இவர்களை எல்லாம் யார் தட்டி
 கேட்பது? "

"யார் கேட்க முடியும் ?
கடவுள்தான் கேட்க வேண்டும் ."

"கடவுளுக்கு கண்ணே இல்லையா?"

இப்படிப்பட்ட வார்த்தைகள் இரட்டையர்
காதுகளில் வந்து விழுகின்றன.

ஊரில் ஓர் அநீதி நடக்கிறது.
கேட்க ஆளில்லை. அப்படியானால்
கேட்கும் பொறுப்பு யாருடையது.
கடவுளுடையது.
ஆனால் இங்கே கடவுளும் கண்களை
மூடிக் கொண்டார்.

அப்படியானால் சாதாரண குடிமகனுக்கு
கோபம் ஏற்படுவது இயல்புதானே ? 
அந்தக் கோபம் இரட்டையர்களுக்கு
ஏற்பட்டிருக்கிறது.

 கோபம் பாடலாக வெளிவருகிறது.

முதலாமவர் கடவுளைப் பார்த்து
கேள்வி கேட்கிறார்.

"கேட்ட வரமளிக்கும் கீர்த்தியுள்ள 
தெய்வங்காள்
கூட்டோடே எங்கே போனீர் ?"
என்று கேட்டு குமுறுகிறார்.

கேள்வி கேட்டுவிட்டார்.
இரண்டாமவர்
சும்மா இருப்பாரா?
இருக்கத்தான் முடியுமா ?

அவருக்கும் இறைவன்மீது கோபம்தான்.
ஆனால் கேள்வி கேட்கும் 
மனநிலையில் அவர் இல்லை.

இப்போது இதற்கு விடையளிக்கும்
பொறுப்பு இரண்டாமவருக்கு இருக்கிறது.
இறைவனைப் பார்த்து கேள்வி
கேட்டால் இறைவன்தானே பதில்
சொல்லியாக வேண்டும்.

இதோ இறைவன் பதில் சொல்கிறார்
கேளுங்கள்.

"பாட்டைக்கேள் செல்காலமெல்லாம் 
செலுத்தினோம்
அல்காலம் கல்லானோம் 
செம்பானோம் காண்"

என்று விடை கூறி முடித்துவிட்டார்.

பாடுகிறவனே கேள். உன் பாட்டுக்கு
விடைகூறுகிறேன் .

காலமெல்லாம் ஆளுமை செலுத்தினோம்.
இதுவரை எங்கள் ஆட்சி நடைபெற்றது.
இப்போது இருண்ட காலம்.
இப்போது நடக்கும் அநீதிகளைக்
கண்டு நாங்களே கல்லாகி விட்டோம்.
செம்பாகிப்போனோம் என்று
இறைவன் பதில் சொல்லுவது போல 
பாடல் உள்ளது.

அநீதி அதிகமாகிப் போனதால்
இறைவன்கூட வாயடைத்துப்
போவான்  என்று வேடிக்கையாகப்பாடி
நம்மை சிந்திக்க வைத்துவிட்டனர்
இரட்டையர்கள்.

"கடவுளுக்கு கண்ணே இல்லையா?"
என்று சிலர்  சொல்வதைக்  கேட்டிருப்போம்.

அந்தக் கேள்விக்கு இன்றுவரை
விடை கிடைத்திருக்காது.
அதன் பின்னர் நாம் அந்தச்
சிந்தனையே  இல்லாது கடந்து
வந்திருப்போம்.
ஆனால் அந்தக் கேள்விக்குக் கடவுள்
வாயாலேயே விடை சொல்ல வைத்து
நம்மைத் திரும்பிப் பார்க்க வைத்த
பெருமை இரட்டையர் பாடலுக்கு 
உண்டு.

வேடிக்கையாகப் பாடப்பட்டதாக
இருந்தாலும் சற்று சிந்திக்க
வேண்டியதிருக்கிறது.

இரட்டையர்களின் இந்தப் பாடல்களை
வாசித்ததும் கண்ணதாசனின்
"கடவுள் ஏன் கல்லானார் மனம்
கல்லாய்ப் போன
மனிதர்களாலே" என்றப் பாடல்தான்
நினைவுக்கு வருகிறது.

Comments

Popular Posts