விளையாட்டில் வினாவிடை

 விளையாட்டில் வினாவிடை

"பாடல் இல்லாத விளையாட்டு
பருப்பு இல்லாத கூட்டு போன்றது."
என்பார்கள்.
சுவை இருக்காது.
சிறுவர்கள் விளையாட்டில் கண்டிப்பாக
பாடல் இருக்கும்.இருக்க வேண்டும்.
பாடல்கள் பாடிக்கொண்டே விளையாடுவதில்
சிறுவர்களுக்கு ஓர்அலாதி இன்பம்.

விளையாட்டுப் பாடல்கள் 
உலக அறிவை ஊட்டுகின்றன.
மொழித்திறனை  வளர்க்கின்றன.
சொல்லாட்சித் திறன் பெருகுகிறது.

வினா விடைப்பாடல்கள் 
மொழிப்பயிற்சி, நாப்பயிற்சி
போன்ற பயிற்சிகளை வளர்ப்பவையாக
இருக்கும்.நண்பர்களோடு சேர்ந்து
விளையாடும்போது சிறுவர்கள்
தம்மையும் அறியாமலேயே அதிகமாக
கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.
புத்தகத்தையும் தாண்டி மேலும்
அதிகமான சொற்களைக் கையாளும்
திறன் வளர்கிறது.
தன்னொத்த வயதினருடன்
பழகும் பண்பு ஏற்படுகிறது.

முதல் அடிக்கு அடுத்த அடி பதில்
சொல்வதாக அமைவதால் கேள்வியும்
மறக்காது.பதிலையும் நினைவில்
வைத்துக்கொள்ள முடியும்.
கண்டவை கேள்விப்பட்டவை
என்று  அனைத்துப்  பொருட்களைப் 
பற்றியும் கேள்விகள் கேட்டு
எளிமையாக பாடி விளையாட முடியும்.

நாட்டார் பாடல்களில் 
வினாவிடைப் பாடல்கள் 
சிறுவர்களால் விரும்பி
விளையாடப்படும் ஒன்று.
நாமும் விளையாடியிருப்போம்.

விளையாடியவற்றை
நினைவுபடுத்தி  மகிழ உங்களுக்காக
இதோ....

1. அன்னம் அன்னம்

என்ன அன்னம்- சோத்தன்னம்

என்ன சோறு -  பழஞ்சோறு

என்ன பழம்  - வாழைப்பழம்

என்ன வாழை  - திரிவாழை 

என்ன  திரி -   விளக்குத்திரி

என்ன விளக்கு  -  குத்து விளக்கு

என்ன குத்து  - இந்தக் குத்து


2. வேர் வேர் 

   என்ன வேர்? -  வெட்டி வேர்
  
   என்ன வெட்டி? _ விறகுவெட்டி
   
   என்ன விறகு ? -  வேலம்விறகு.

  என்ன வேலம்  ? -  கருவேலம்

  என்ன கரு  ? -  முட்டைக்கரு
  
என்ன முட்டை ?  - கோழி முட்டை

 என்ன கோழி  -  விடலைக் கோழி 

என்ன விடலை? -  முத்து விடலை.

என்ன முத்து ?  - மாரி முத்து

என்ன மாரி - பூமாரி

என்ன  பூ  - தாழம்பூ 

என்ன தாழை? - பெரியதாழை.


3.  பனை பனை 

   என்ன பனை ?-  தாளிப்பனை.
     
   என்ன தாளி? - விருந்தாளி.
     
   என்ன விருந்து? - மண விருந்து.
    
   என்ன மணம்? -  பூ மணம்.
     
  என்ன பூ?    - வாழைப்பூ

என்ன வாழை ? - தலை வாழை
     
 என்ன தலை? - யானைத்தலை
     
என்ன யானை ? -  காட்டுயானை

என்ன  காடு - மாங்காடு

என்ன   மா ? - அம்மா.



4. கொக்கே கொக்கே 

    எங்கே போனாய்?

    விறகு விற்கப் போனேன்.
    
    விறகு எங்கே?

     துட்டுக்குப் போட்டேன்.

      துட்டு எங்கே ?

     நெல் வாங்கினேன்.

      நெல் எங்கே?

      அரிசி ஆக்கினேன்.

       அரிசி எங்கே?

       சோறாக்கினேன்.

       சோறு எங்கே?

        பகிர்ந்து சாப்பிட்டேன்.


5.   
     ஓடு   ஓடு

  என்ன ஓடு ? -  நண்டு ஓடு.

 என்ன நண்டு?-  பால் நண்டு.

 என்ன பால்?   _ எருமைப்பால்

என்ன எருமை ?  - காட்டு எருமை

என்ன காடு ?   - கள்ளிக்காடு

என்ன கள்ளி ? -  சோத்துக்கள்ளி .

என்ன சோறு ? -  கறிச்சோறு

என்ன கறி ?  -  முயல் கறி

என்ன முயல் ? - வெள்ளைமுயல்

என்ன வெள்ளை ? -கொக்குவெள்ளை

என்ன கொக்கு ?  - நெட்டைக்கொக்கு

என்ன நெட்டை ?  - வாழைநெட்டை

என்ன வாழை ?  - பூவாழை

 என்னப்பூ ? -   வேப்பம்பூ 

 என்ன வேம்பு ? - நில வேம்பு

என்ன நிலம்   ? -  நன்னிலம்.


6. .  தம்பி தம்பி 

   நீ எங்கே போனாய்? 

   ஊருக்குப் போனேன்.

  எந்த ஊரு?  - பழவூர்.

  எந்தப் பழம்? -பலாப்பழம்.

  எந்தப் பலா?  -வேர்ப்பலா.

  எந்த வேர்?  -வெட்டி வேர்.

 எந்த வெட்டி ? - காடுவெட்டி.

  எந்தக் காடு ? -  மலங்காடு. 
      
  எந்த மலை?  -  ஆனை மலை.
     
 எந்த  ஆனை ?  - கோவில் ஆனை
      
 எந்தக் கோவில் - நாகர்கோவில்.


பூப்பறிக்க இவர்கள் வருகிறார்களாம்.
எந்தப் பூவைப் 
பறிக்கப் போகிறார்களாம் ?

7. 
பூப்பறிக்க வருகிறோம்
 பூப்பறிக்க வருகிறோம்.

 எந்த மாதம் வருகிறீர்?
எந்த மாதம் வருகிறீர்?

ஐப்பசி மாதம் வருகிறோம்
ஐப்பசி மாதம் வருகிறோம்.

எந்தப்பூவை பறிக்கிறீர்?
எந்தப் பூவைப் பறிக்கிறீர் ? 

தேவி பூவைப் பறிக்கிறோம்.
தேவி பூவைப் பறிக்கிறோம்.

யாரை விட்டுப் பறிக்கிறீர்?
யாரை விட்டுப் பறிக்கிறீர்.?

  தங்கத்தை விட்டுப் பறிக்கிறோம்
 தங்கத்தை விட்டுப் பறிக்கிறோம்.

 என்று வந்து பறிக்கிறீர்?
  என்று வந்து பறிக்கிறீர்?

இன்று வந்து பறிக்கிறோம்
இன்று வந்து பறிக்கிறோம்.

இனிமையான நினைவுகள் இல்லையா!

சொற்களை மாற்றிமாற்றி
எவ்வளவு பெரிய பாடலாகவும்
பாடி விளையாடலாம்.
அவரவர் திறனுக்கு உட்பட்டது.

நீங்களும் நானும் விளையாடிய
விளையாட்டுதான்.
எத்துணை மகிழ்ச்சியான காலம்!

பல பாடல்கள் மறந்து போய்விட்டன.
மறந்து போய்விட்டது என்பதைவிட
பாடல்கள் பாடி விளையாடுவது
மறைந்தே போயிற்று என்றுதான்
சொல்ல வேண்டும்.

விளையாட்டு என்றால் கணினி 
விளையாட்டு என்ற நிலைக்குத்
தள்ளப்பட்டுவிட்டோம் .
கணினியோடு கட்டுண்டோம்.

நினைத்தாலே இனிக்கும் இப்படிப்பட்ட
விளையாட்டுகளை விளையாடும்
காலம் திரும்புமா?










Comments

  1. பள்ளிப் பருவத்தை நினைவுபடுத்தி பதிவிட்டது மிக அருமை.எண்ணங்கள் அந்த காலத்திற்கே சென்று விட்டன.வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரோஸ்லின். நீங்கள் விளையாடிய
      விளையாட்டை
      எழுதி
      அனுப்புங்கள்.

      Delete

Post a Comment

Popular Posts