பாரதிதாசனின் புதியதோர் உலகம் செய்வோம்

  புதியதோர் உலகம் செய்வோம்

"தமிழுக்கு அமுதென்று பேர்_ அந்தத்
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர் "

என்ற தேன்தமிழ்ப் பாடல் வரிகளைத் தந்து
என்நேரமும் காதுகளில் தேனிசையாய்
ஒலித்துக் கொண்டிருப்பவர் பாரதிதாசன்.

உலகில் மாற்றங்கள் நிகழ்வதும்
அதை நாம் ஏற்றுக் கொள்வதும்
தொடர்ந்து நடைபெற்று வருவதும்
இன்று நேற்று நடைபெற்றுக் கொண்டிருக்கும்
செயல் அல்ல.
மாற்றங்களை நோக்கிய பயணம்
எல்லா காலங்கிலும் நடைபெற்று
வந்திருக்கிறது.

அந்தப் பயணம்தான் புதிய படைப்புகளையும்
புதுமைகளையும் கொண்ட புதிய
சமுதாயத்தைப் படைக்கும்.

பழைமையிலேயே இருந்து கொண்டால்
புதுப்பித்தலைப் பற்றிய சிந்தனையே
இல்லாமல் ஒரு முடக்கம் ஏற்பட்டுவிடும்.
முடமாகிப் போவோம்.

எப்போதும் புதியவற்றை அறிய வேண்டும்
புதிய சமுதாயத்தைக் காணவேண்டும்
என்ற கனவு எல்லோரிடமும் இருக்கும்.
இருக்க வேண்டும்.
அதுதான் செயலாக்கத்துக்கு
வித்திடுவதாக அமையும்.

நமது கனவு செயல்வடிவம்
பெறும்போது சமூகமும்
சமூக நடைமுறைகளும் புதிப்பிக்கப்பட்ட
நிலையில் புதிய பரிணாமத்தை எட்ட
வாய்ப்பு ஏற்படும்.

மாற்றம் தனிமனிதனால் ஏற்பட்டுவிடாது.
ஒருங்கிணைந்து செயலாற்றினால் மட்டுமே
புதிய உலகைக் காணலாம்.

அப்படிப்பட்ட புதிய மாற்றங்களுக்கான
விதைகளாக இருப்பவை
பாரதிதாசனின் பாடல்கள் .

பொதுவுடைமைக் கொள்கைக்கு ஊட்டம் தரும்
உணர்ச்சிமிக்க சொற்களைப் பாரதிதாசன்
கவிதைகளில் காணமுடியும்.

"ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்
உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ "

என்ற பாடலின் மூலம் எல்லோரும் எல்லாம்
பெற்றிட வேண்டும். உயர்வு தாழ்வில்லா
பொதுவுடைமைச் சமுதாயம்
காண வேண்டும் என்ற பாரதிதாசனின்
கனவு உணர்ச்சிமிகு வார்த்தைகளாக
வந்து விழுகின்றன.

சமுதாய அக்கறை மிகுந்த
இப்படிப்பட்ட அவருடையப் பாடல்
வரிகள் நம்மை அவரை நோக்கிக்
கட்டி இழுக்கும்.யாரிவர்
என அண்ணாந்து பார்க்க வைக்கும்.

அவர் பாடல்களின் ஒவ்வொரு வரியும்
உணர்ச்சிப் பிழம்பாக நிற்கும்.
உள்ளத்தில் புதியதொரு ஒரு உத்வேகத்தை
ஊட்டுவதாக  இருக்கும்.

போராட்டமில்லாத அமைதியான உலகில்
வாழ வேண்டும் என்பதுதான் அனைவரின்
விருப்பமாக இருக்கும்.
அப்படியானால் நாம் எல்லோரும்
சேர்ந்துதான் அப்படிப்பட்ட
சூழலை உருவாக்க வேண்டும்.

பொதுவுடைமை கொள்கை எல்லா இடங்களிலும்
பரவ வேண்டும்.
அனைவருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும்.
இல்லாமை இல்லா நிலை வர வேண்டும்.
இருப்பவன் இல்லாதவனுக்குக்
கொடுத்து அனைவரையும் வாழ
வைத்திடவேண்டும்.
பகிர்ந்து கொள்ளும் பண்பு வளர வேண்டும்
என்ற கனவுதான் பாரதிதாசனின்
புதியதோர் உலகம் செய்வோம் பாடல்.

பாடல் இதோ உங்களுக்காக...

"புதியதோர் உலகம் செய்வோம் _ கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

                    (  புதியதோர் உலகம் ....)
                   
பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதை எங்கள் உயிரென்று காப்போம்
இதயமெலாம் அன்பு நதியில் நனைப்போம்
இதுஎனதென்னு மோர் கொடுமையைத் தவிர்ப்போம்

                          (  புதியதோர் உலகம்...)
                         
உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
ஒருபொருள்தனி எனும் மனிதரைச் சிரிப்போம்
இயல் பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம் "

                     (   புதியதோர் உலகம்... )

போர்..போர்...போட்டி பூசல்
நிறைந்த உலகத்தை வேரோடு
சாய்த்திட வேண்டும்.
எல்லார்க்கும் எல்லாம் கிடைத்திட

வழி செய்திட வேண்டும்.அதற்கு
நீர் பொது, நிலம் பொது என்று
அனைத்தும் அனைவர்க்கும் பொது
என்ற பொதுவுடைமை ஒன்றே வழி.

இந்தப் பொதுவுடைமைக் கொள்கையை
எட்டு திசையிலும் எட்டும் திசைவரைக்
கொண்டு சேர்த்திடல் வேண்டும்.

சோம்பல் என்பது உணர்விலும் வேண்டாம்.
முளையிலேயே எரித்து விடுக.
யான் ...எனது... என்னுடைமை
என் பிள்ளை...என்வீடு என்று
சொல்லித் திரியும் சுயநலக்காரர்களை
எள்ளி நகையாடும் காலம் வர வேண்டும்.
இருக்கின்ற பொருள் பயன்தரவில்லை
என்றால் பசித்திருப்போம்.தப்பே இல்லை.
கொடுப்பதற்கு ஏதாவது உண்டு எனில்
அனைவரும் சேர்ந்தே புசித்திருப்போம்.
எவ்வளவு உயர்ந்த எண்ணம்
பாருங்கள்!
யாருக்கு வரும் இந்த உயர்ந்த
எண்ணம் ?
உயர்ந்தோர் உள்ளுதல் யாவும்
உயர்வுள்ளலாகத்தானே இருக்கும்!

பாரதிதாசனின் கனவு, சமூக அக்கறை,
விருப்பம்,கோபம்
அத்தனையையும் சுமந்து நிற்கும்
அருமையானப் பாடல் .                                
திரைப்படப் பாடலாக அனைவர்
இல்லங்களிலும்
இனிமை சேர்த்தப் பாடல்.

"சங்கே முழங்கு சங்கே முழங்கு
சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காதத் தமிழென்று
சங்கே முழங்கு  சங்கே முழங்கு "

என்று தமிழையே வாழ்வாகக்
கொண்டவரின் பாடல்
தமிழுக்கும்  தமிழருக்குமாக பரிந்து
நிற்காது வேறு எப்படி இருக்கும் ?

Comments

Popular Posts