நந்தவனத்தில் ஓர் ஆண்டி....

       நந்தவனத்தில் ஓர் ஆண்டி.....


சித்தர்கள் எப்போதுமே உடம்பு,
ஆன்மா, நிலையாமை என்று
ஒரு சிந்தனைக்குரிய கருத்துக்களையே 
கூறுவர்.
வேடிக்கையாகச் சொல்லிவிட்டுப்
போவதுபோல் இருக்கும்.
வேடிக்கையிலும் ஒரு உள்ளார்ந்த
கருத்து இருக்கும்.

இப்படித்தாங்க  சித்தர் ஒருவர் ஒருநாள்
கால்போனபோக்கில் நடந்து சென்று
கொண்டிருக்கிறார்.
வழியில் ஒரு சுடுகாடு.அங்கே
காணும் காட்சி...அவரை சிந்திக்க
வைக்கிறது.
இவ்வளவு சிறுவயதில் இப்படிப்பட்ட
பரிதாபத்தைத் தேடிக் கொண்டானே என
மனம் வருந்துகிறார்.

என்ன உலகம் இது? நேற்று
இருந்தார். இன்று இல்லை.
வாழும்வரை ஆடிய ஆட்டம்
என்ன ? எனக்கு நிகர் யார்
என்று அடித்தக் கொட்டம் என்ன ? 
மூச்சுப் போச்சு என்றால் எல்லாம் 
அடங்கிப் போச்சு.
ஆனால் கிடைத்தற்கரிய பிறவியல்லவா
இந்த மானிடப்பிறவி.
இந்தப் பிறவியின் அருமையை எத்தனைபேர்
உணர்ந்து வாழ்கிறார்கள்.?

வரமாக வாங்க வந்தப் பிறவி.
அதன் அருமையை உணராமல்
தாறுமாறாக வாழ்ந்து கொடுத்த
காலத்திற்கு முன்பாகவே
வாழ்க்கையை முடித்துக்
கொண்டுவிட்டானே என்று
நினைத்து அங்கேயே நின்று
பார்த்துக் கொண்டே இருக்கிறார்.

 இப்படி பொசுக்கென்று போய்ச் சேருவான்
 என்று நினைக்கலியே என்று அழுது
 புலம்புகின்றனர் உறவினர்கள்.
 பார்த்துக் கொண்டிருந்த கடுவெளி
 சித்தர்,
 

"நந்தவ னத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டுவந் தானொரு தோண்டி - அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"

என்று பாடிவிட்டு அவர்பாட்டுக்குப்
போய்க்கொண்டே இருக்கிறார்.

அது என்ன..ஆண்டி...வேண்டி...
தோண்டி....தாண்டி..
வேடிக்கையாக  இருக்கிறதல்லவா!

மேலோட்டமாகப் பார்த்தால் பொருள்
ஒன்றுமே இல்லைங்க....

அழகிய நந்தவனத்தில் ஒரு ஆண்டி
இருந்தாராம். அவர் நாலாறு மாதமாய்
அதாவது பத்துமாதமாய் ஒரு குயவனிடம்
தனக்கு ஒரு தோண்டி வேண்டும்
என்று வேண்டிக் கேட்டுக் கொண்டாராம்.
குயவனும் வேண்டிக் கொண்டதற்கு
இணங்க அழகிய தோண்டி ஒன்று
 செய்து கொடுத்தாராம்.
 தோண்டி என்றால் கிணற்றிலிருந்து
 நீர் இறைக்கப் பயன்படுத்தும்
  ஓலைப்பட்டையைச்
 சொல்வார்கள். இங்கே சித்தர்
 தண்ணீர் எடுத்துவரப் பயன்படுத்தும்
 கலசத்தைச் சொல்கிறார்.
 
 அதாவது தண்ணீர் கலசம் என்பார்களே
 அதுதாங்க...
 கையில் கலசம் கிடைத்ததும் ஆண்டிக்கு
 பெருமகிழ்ச்சி.
 துள்ளிக் குதித்து ஆனந்தக் கூத்தாடுகிறாராம்.
 
 கையிலிருந்த கலசம் கீழே விழுந்து
 சில்லிசில்லியாக உடைந்து
 போயிற்றாம்.
 இப்படித்தான் மேலோட்டமாகப்
பொருள் இருப்பதுபோல பாடல்
உள்ளது. 
 
ஆசைஆசையாய் வாங்கிய
தோண்டியை ஆடிஆடியே போட்டுடைத்தான்
என்று சொல்வதற்கு ஒரு சித்தர்
வேண்டுமா என்ன?

அதனால்தான் கண்டிப்பாக இதில்
ஒரு உள்ளுறை இருக்க வேண்டும்.
அதுவும் வாழ்க்கையைப் பற்றிய
தத்துவத்தை உள்ளடக்கியதாகத்தான்
இருக்க  வேண்டும் என்று தோன்றுகிறது.

ஒருவன் கருவாகி உருவாகி
உலகத்தை எட்டிப்பார்க்க
பத்துமாதம் ஆகிவிடுகிறது.
தவமாய்த் தவமிருந்து பார்த்துப்பார்த்து
வரமாய் வாங்கி வந்த 
இந்த வாழ்க்கையை வெறுமனே
உலக இன்பத்திலும் களியாட்டங்களிலும்
ஈடுபட்டு தொலைத்துவிடலாமா?

அப்படித்தாங்க பலருடைய
நிலைமை இன்று இருக்கிறது.
இதைத்தான் சித்தர்
அழகாகப் பாடியிருக்கிறார்.

அரிது அரிது மானிடராய்ப்
பிறத்தல் அரிது.
இந்த அரிதான பிறவி கொடுக்கப்பட்ட
நோக்கம் ஏதாவது இருக்க வேண்டும்
அல்லவா!
கண்டிப்பாக நமக்கு இந்த
வாழ்க்கை கொடுக்கப்பட்டதற்கான
ஒரு நோக்கம் இருக்கும்.

தோண்டி கொடுக்கப்பட்ட நோக்கம்
நிறைவேற நாளும் நல்வழியைத் தேட
வேண்டும்.
எந்நாளும் இறையருள் வேண்டி
காத்திருக்க வேண்டும்.
அப்போதுதான் நாம் படைக்கப்பட்டதற்கான
நோக்கம் நிறைவேறும்.
வீணில் வாழ்க்கையைத் தொலைத்து
விடக் கூடாது  என்று சொல்வதற்காகத்தான்
இந்தப் பாடல்.
வேடிக்கையான பாடலுக்குள் விவரமான
கருத்து இல்லையா!


   

Comments

  1. மானிடப் பிறவியின் மகத்துவத்தை மிக அருமையான எடுத்துக்காட்டுடன் பதிவிட்டது மிகச்சிறப்பு.

    ReplyDelete
  2. மிக நன்று.வேடிக்கையான பாடலின் விவரமான கருத்தை விளக்கமளித்தது மிகச்சிறப்பு.🌺🌺🌺🌺

    ReplyDelete

Post a Comment

Popular Posts