பணிநிறைவுப் பாராட்டு மடல்

பணிநிறைவுப் பாராட்டு மடல்

தலைமை ஆசிரியை
திருமதி வெற்றிவேல் தவமணி 
 அவர்களுக்கு வாசித்தளித்தது.


பாண்டித்தமிழ் நடையுலா
             நாஞ்சில் எழிலுலா
மண்டும் புகழுலுலா 
            இரஜகிருஷ்ணபுர ஊருலா
 கண்ணாளர் மார்த்தாண்டம் 
            திருமாலம்மாள் மடியுலா
 கண்டுலா  வந்ததிந்த 
           வெற்றி வேல்நிலா!

அத்தைமகன் தவமணியொடு 
           இன்பச் சுற்றுலா
மெத்தை மடியில்
          சங்கீதமாய்ப் பிள்ளைநிலா
வித்தை யாவும்
           உன்றன் கையிலா
 கத்தையாய் அள்ளினீரோ
            பட்டம்யாவும் உம்வீட்டிலா!

கர்மவீர்ப் பள்ளியில் 
          தடம்  பதித்தலா
 மாதுங்கா ஓர்லிநாக்கா
          எங்கும் ஒளிவீசலா
 கற்றலா கற்பித்தலா
          மொழியாக்கப் பணியிலா
  அயர்விலா உழைத்தலா(ல்)
         உயர்நிலை பெற்றலா!

வெற்றி உன்பெயரிலா
          பண்பிலா அன்பிலா
 சுற்றி வர வைத்தது
            உன்மீதுள்ள காதலா
  தெற்றில்லாத் தமிழுலா
            நாவிலா நட்பிலா 
சுற்றம்  தழுவல்
         உமக்கே உரித்தாதலா!

கொஞ்சு  மொழியுலா
          எழுத்திலா பேச்சிலா
மிஞ்சு அன்புலா
          மனத்திலா செயலிலா
 பிஞ்சு மனத்திலா
              விஞ்சு மதியிலா
  கஞ்சமாய்ப் புகழ்தலா(ல்)       
              பஞ்சம் என்சொல்லிலா!
              
அதிரா நடையுலா
          அழகுத் தேருலா
 புதிராய் இருத்தலால்
           புரியாதோர் புலம்பலா
  மாசிமாதக் கொண்டலா
            மாலைநேரத் தென்றலா
   பழகியநாட்கள்  என்றென்றும்
             தேன்சுவை வேர்ப்பலா!

நதியிடை நீர்கொண்ட
         நட்பு ஓய்தலா
 விதியிடை வந்து
          ஓய்வென உரைத்தலா
 சதிசெய்  காலமிடைவந்து
         நம்மைப் பிரித்தலா
  மதிசெய் நட்பு
           நிலைப்பது இறைவகுத்தலா!

மட்டிலா மகிழ்வுலா
       இல்லம்  வருதலா(ல்)
  உருவிலா உவப்புலா
         உள்ளம் நிறைத்தலா
எண்ணிலா வளமுலா
         இன்பம் தருதலா
 ஈடில்லா புகழுலா
         பேருலா நிலைத்தலா!

                     -  செல்வபாய் ஜெயராஜ்
 
 

      
           




       
 

Comments

Popular Posts