மண்சட்டியும் மீன்குழம்பும்


   மண்சட்டியும் மீன்குழம்பும்

அசைவம் சாப்பிடுகிற அனைவர்க்கும்
விருப்பமான குழம்பு ஒன்று உண்டென்றால்
அது மீன் குழம்பாகத்தான் இருக்கும்.
எங்க சித்தி வைக்கும் மீன்குழம்புக்கு
ஈடாக யாரும் மீன் குழம்பு
வைக்க முடியாது.
அது என்னவோ ஓடுகிறத் தண்ணீரில்
மீனைத் தேடிப் பார்ப்பது போல
குழம்பு தண்ணியாக இருந்தாலும்
ருசி மட்டும் குறையவே குறையாது.

கொஞ்சம் கெட்டியாக வைத்தால் என்ன என்று
கேட்டால் எட்டு தட்டுக்கு ஊற்றணும்.
அதுவும் இரண்டு நேரத்துக்கு....
ஆளுக்கு இரண்டு
அகப்பை ஊற்றினாலும்
ஒரு வேளைக்கு பதினாறு அகப்பை ஊற்றணும்.
கொஞ்சம்போல மிச்சம் இருந்தால்
சுண்ட போட்டு பழைய சோத்துக்கூட
கூட்டிகிட்டோம்ன்னா கூடுதலா
ஒரு தட்டு கஞ்சி குடிச்சிடலாம்
இல்லியா ?என்பார் சித்தி.

மீன்குழம்பு செய்வதே ஒரு கலைங்க
வெறுமனே பத்தோடு பதினொன்று
அத்தோடு இது ஒன்று என்று
செய்தால் சுவை இருக்காது.
பார்த்துப் பார்த்துப் பக்குவமாகச்
செய்ய வேண்டும்.
இப்படிச் செய்தீர்கள் என்றால்
சட்டி பத்தலைக்கூட விட்டு வைக்க
மாட்டீர்கள். 
சொல்லும்போதே இப்போதே மீன்குழம்பு
செய்து சாப்பிடணும் என்று தோணுது இல்ல....
அப்படிச் சொல்லித் தருவாங்க எங்க
சித்தி.
சித்தி மீன்குழம்புக்கு என்றே
தனி மண்சட்டி வைத்திருப்பார்கள்.
மீன் குழம்பு முடிந்ததும் அந்தச்
சட்டியையும் மூடியையும்  தனியாகக் கழுவி
கமத்தி விடுவார்கள்.

சித்தி மண்சட்டியில் செய்யும்
மீன்குழம்பை நினைத்தாலே
சாப்பிடணும்போல இருக்குங்க....


நானும் சமீபத்தில் ஊரிலிருந்து
மீன்குழம்புக்கு என்றே மண்சட்டி
வாங்கி வந்தேங்க....
அதென்னவோ மீன்குழம்பு
என்றாலே மண்சட்டியும்
எங்க சித்தி நினைவுதான்
வருதுங்க...
வாங்க ...எங்க சித்தி கிராமத்தில்
சொல்லித் தந்த மீன்குழம்பு செய்முறையை
நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


மீன் குழம்பு செய்ய
தேவையான பொருட்கள் :

வற்றல்  :          7 
கொத்தமல்லி - இரண்டு கை அளவு
சீரகம் -                ஒரு கரண்டி 
நல்லமிளகு - ஒரு கரண்டி
வெந்தயம் -      அரை கரண்டி
கடுகு ,உளுந்தம் பருப்பு-தாளிப்பதற்கு ஏற்ற அளவு         
தக்காளி -          நான்கு(நறுக்கியது)
சின்ன வெங்காயம் -இரண்டு கையளவு(உரித்தது)
புளி -                சிறிது
மஞ்சள் -             ஒரு தேக்கரண்டி
தேங்காய் -            அரை மூடி 
( துருவி பால் எடுத்து
  வைத்துக் கொள்ளவும்)
ஒரு கையளவு பால் எடுக்காமல்
அரைப்பதற்கு வைத்துக்கொள்ளவும்

நல்லெண்ணெய்    - மூன்று கரண்டி அளவு
கொத்தமல்லி தழை  -ஒரு கையளவு
( நறுக்கியது)
மாங்காய் - நீளவாக்கில் வெட்டியது ஐந்து
(பழுக்கும் பக்குவத்தில் இருக்கும் காய் நல்லது)
கறிவேப்பிலை- இரண்டு இணுக்கு
பூண்டு -மூன்று பல்மட்டும்

முதலாவது மண்சட்டியை அடுப்பில் வைத்து
சிறிது எண்ணெய் ஊற்றி 
வற்றல் ,கொத்தமல்லி, சீரகம், 
 ஆகியவற்றைத் தனித்தனியாக
வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும். வெந்தயத்தில் பாதியளவு மட்டும்
வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
மீதியைக் தாளிக்கும் போது போடலாம்.

கறுக விடாமல் வறுத்து எடுத்துக்
கொள்ளுங்கள்.

 வறுத்து வைத்த வற்றல் , கொத்தமல்லி,
சீரகம்,,வெந்தயம்
ஆகியவற்றோடு ஒரு கரண்டி 
நல்லமிளகையும் சேர்த்து
 மிக்சியில் 
பொடியாகத் திரிக்க வேண்டும்.
சித்தி அம்மியில் அரைக்கச் சொல்லித்
தந்தார்கள். இப்போது அம்மி இல்லை.
என்ன செய்வது?
மிக்சியில் அரைப்போம்.
பொடியாக நன்றாகத் திரிபட்டதும்
அதனைத் தனியாக எடுத்து வைத்துக்
கொள்ளுங்கள்.

இப்போது வெங்காயம், மூன்று பல்
ஒரு கையளவு தேங்காய்
துருவி வைத்தது, பூண்டு சிறிது சீரகம்
ஆகியவற்றையும் போட்டு
தண்ணீர் ஊற்றி தானமாக
அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
ரொம்பவும் பட்டுப் போல் அரைக்கக்
கூடாது. குழம்பு பிசுபிசுவென்று
சாப்பிட நன்றாக இருக்காது.

மண்சட்டியில் மூன்று கரண்டி
எண்ணெய்  ஊற்றி நறுக்கி
வைத்திருக்கும் 
தக்காளியைப் போட்டு வதக்குங்கள்.
தக்காளி வதங்கும்போது சிறிது
உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
அப்போதுதான் தக்காளி சீக்கிரம்
நன்றாக வதங்கும் என்பார்கள்
எங்கள் சித்தி.
தக்காளி வதங்கும்போதே அதன்மேல்
மீன் துண்டுகளைப் பரப்பி வைத்துவிட்டு
அதன்மீது சிறிது உப்பு,மஞ்சள் பொடி,
மசாலாப் பொடியில் ஒரு அரை
கரண்டி தூவி
 பாத்திரத்தை மூடி வைத்துவிடுங்கள்.
அடுப்பை நிதானமாக எரியவிட
வேண்டும். பிறகு 
நீளவாக்கில் வெட்டி வைத்துள்ள
மாங்காயை மீனின் மீது பரப்ப வேண்டும்.
பின்னர் ஒரு நான்கைந்து நிமிடம் மூடி
வைத்து வேக விட வேண்டும்.
 அப்படியே குலுக்கிக்
குலுக்கி மீனை மாற்றிவிழும்படிச்
செய்ய வேண்டும்.
கூடுமானவரை அகப்பையைப் போடாதிருப்பது
நல்லது .அப்போதுதான் மீன் உடையாமல்
அப்படியே கிடக்கும். மீன் அடைந்துவிட்டால்
முள் குழம்போடு கலந்து விடும்.
அதனால் குழந்தைகள் மீன்குழம்பு
வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள்.
அதனால் பார்த்துப் பக்குவமாகச் செய்யணும்
என்பார் சித்தி.

இப்போது கொத்த மல்லித்தழையையும்
போட்டு வேகவிட வேண்டும்.

அடுப்பில் மீன் முக்கால் வேக்காடு வரை
வேக வேண்டும்.

 பின்னர்
புளிக்கரைசலை ஊற்றி ஒரு கொதி 
கொதிக்கவிடவேண்டும்.
அதன்பின்னர்  மீதம்  இருக்கும் 
மசாலாப் பொடியைப் போட்டுத்
தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்கவிட
வேண்டும்.ஐந்து நிமிடம் கழித்து
வெங்காயம் தேங்காய் விழுது அரைத்து வைத்திருப்பதை
ஊற்ற வேண்டும். பின்னர் அதைத் தொடர்ந்து
 அரைத்து பிழிந்து எடுத்து
வைத்திருக்கும் தேங்காய் பாலை
 ஊற்றுங்கள்.

மசாலா வாடை  முறியும்வரை
நன்றாக கொதிக்க விட 
வேண்டும்.

கொஞ்சம் கெட்டியாக வரும்போது
அடுப்பிலிருந்து மண்சட்டியை இறக்கி
வைத்துவிட்டு
ஒரு வாணலியில் சின்னவெங்காயம், கடுகு உழுந்தம்
பருப்பு ,வெந்தயம் ,கறிவேப்பிலை , இரண்டு மூன்று
குண்டு வற்றல்
போட்டு தாளித்து
குழம்பின் மீது ஊற்ற வேண்டும்.
சட்டியினுள் அகப்பையை விடாமல்
சட்டியைத் தூக்கி இரண்டு மூன்று சுற்று சுற்றினால் 
தாளிப்பு முழு குழம்போடும்
கலந்துவிடும்.
இப்போது சிறிது கொத்தமல்லித்தழை தூவி
மூடி வைத்துவிடுங்கள்.


இப்போது ருசியான ருசி ஓட்டலையும்
மிஞ்சிய மீன்குழம்பு தயார்.

மண்சட்டியில் மீன் குழம்பு 
கொதிக்கும்போதே ஊரைக் கூட்டிவிடும்.
தயாரித்த பின்னர் 
 கெட்டியாக மூடி வைத்துக்
கொள்ளுங்கள்.
அப்போதுதான் திறக்கும்போதெல்லாம்
மணம் கமகமவென்று சுண்டி இழுக்கும்
என்று ஒரு துணியை வைத்து மூடி
ஒரு கொண்டை போல பக்கவாட்டில்
ஒரு முடிச்சி போட்டு வைத்து அதற்குமேல்
மூடியை வைத்து இறுக்கமாக
மூடி வைத்துவிடுவார் 
எங்க சித்தி.

ஐயோ...இப்போதே மூடியைத்திறந்து
தின்ன வேண்டும் போல் இருக்கிறதே....

இப்படி மீன்குழம்பு மண்சட்டியில்
வைத்துப் சாப்பிட்டுப் பாருங்கள்.

எந்த மீனாக இருந்தாலும் 
குழம்பு ருசியாகவே இருக்கும்.

மீனும் எடுத்து தின்பதற்கு உப்பு காரம்
எல்லாம் சேர்ந்த சுவை உடையதாக
பொரித்த மீனைவிடச்
சுவையாக இருக்கும்.

நித்தம் நித்தம்  நெல்லுச்சோறு
என்பதுபோல நித்தம்நித்தம்
மீன் குழம்பு
கேட்கும் உங்கள் நாக்கு.

மீன் குழம்பு சுண்ட வைத்து
மறுநாள் சாப்பிடும்போது தாங்க
கூடுதல் சுவையாக இருக்கும்.
அதுவும் மண்சட்டியில் ஒட்டியிருக்கும்
சட்டி பத்தலை வழித்துப் போட்டு
தின்று பாருங்க....சட்டி எனக்கு
வேணும் உனக்கு வேணும் என்று
எங்க வீட்டில் ஒரு போட்டியே நடக்கும்.

மண்சட்டியில் மீன்குழம்பு .
 அப்பப்பா..!இப்பவே நாக்கில்
எச்சில் ஊறுதே....உடனே 
ஒரு மண்சட்டி வாங்கி வந்து
மீன் குழம்பு வைத்து
அசத்துங்கள்.


மண்சட்டிக்கு மாறுங்கள்.
மண்வாசனையோடு மீன்குழம்பு
வைத்துச் சாப்பிடுங்கள்.




Comments

  1. மண்சட்டியும் மீன் குழம்பும்
    வாசிக்கும் போதே சாப்பிட்டு முடித்த ருசி.நன்றி

    ReplyDelete
  2. உண்மையிலேயே நாக்கில் எச்சில் ஊறி விட்டது.கிராமத்தில் உண்டதை மறுபடியும் நினைவுபடுத்தி விட்டீர்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts