கையில் ஊமன் கண்ணிற் காக்கும்....

கையில் ஊமன் கண்ணிற் காக்கும்....

கையில் ஊமன்....
அருமையான உவமை.
சிந்திக்க வைக்கும் உவமை.
நம்மைப் பிடறியில் தட்டி
புரிய  வைத்த உவமை.

சில நேரங்களில் நம்மால்
எதுவுமே பேச முடியாத
நிலையில் இருப்போம்.
பேசத் தெரியும். ஆனால் பேச முடியாதபடி
சூழல் அமைந்திருக்கும்.
கையைப் பிசைந்து கொண்டு நிற்போம்.
என்ன சொல்ல? ...!என்ன சொல்ல?
ஒன்றும் சொல்ல முடியலியே...
குறுக்கும் நெடுக்குமாக
நடப்போம்.
பல்லை நறநறவென்று
கடிப்போம்.
பார்ப்பவர்கள் எல்லாம்
ஏன் இவன் ஒன்றும் சொல்லாமல்
இருக்கிறான்?
இவனென்ன கோழையா?
என்று காது கேட்கும்படியாகப் 
பேசுவார்கள்.
ஆனால் என்ன செய்வது?
சூழல் அப்படி அமைந்து போயிற்றே.

இப்படிப்பட்ட சூழ்நிலை நம்மில்
சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம்.
நான் கையாலாகாத
நிலையில் இருக்கிறேன்.
என்னைத் தனியாக விட்டுவிடுங்கள்
என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை
விட்டு கடந்து போகப் பார்த்திருப்போம்.
சற்று நினைவுபடுத்திப் பாருங்கள்.
இதுதான் கையில் ஊமன் நிலை.

இதே நிலையில்தான் குறுந்தொகையில்
 தலைவன் ஒருவன் இருந்திருக்கிறான்.
அவனிடம் அவன் நண்பர்கள் 
ஏன் இப்படி என்று கேட்டபோது
நான் கையாலாகாத நிலையில்
இருக்கிறேன் என்று அவன் சொல்லவில்லை.
அப்படிச் சொல்லியிருந்தால் இந்தத்
தலைவன் நம் கவனத்தை ஈர்த்திருக்க
மாட்டான்.
அதற்கு அவன் சொன்ன ஒரு உவமை
நம்மை அப்படியே அந்தத் 
தலைவனை அண்ணாந்து
பார்க்க வைக்கிறது. யாரவன்....
யாரவன் என்று அவனைத்
தேட வைக்கிறது. அவன் சூழலை
ஆராய வைக்கிறது.
ஐயோ....என்று பரிதாபப்பட
வைக்கிறது.

அப்படிப் பரிதாபப்பட வைத்த
உவமையைச் சொன்னவன் உள்ளத்தை
அறிந்துகொள்ள வேண்டாமா? 
வாருங்கள்...
இதோ பாடல் உங்களுக்காக:


"இடிக்குங் கேளிர் நுங்குறை ஆக
நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மறுங்கிற்
கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன் றிந்நோய்
நோன்று கொளற் கரிதே"
        
                     -     வெள்ளிவீதியார்

ஒரு தலைவனும் தலைவியும்
உருகி உருகிக் காதலித்தனர்.
தங்கள் காதல் யாருக்கும் தெரியக்கூடாது
என்பதில் கவனமாக இருந்தனர்.
யாருக்கும் தெரியாமல் எத்தனை காலத்திற்குக்
காதலித்துக்கொண்டிருப்பது?
காதல் திருமணத்தில் முடிய வேண்டும்
என்றால் பெற்றோருக்கும் தெரியப்படுத்தினால்
வேண்டுமே!
ஆனால் தைரியம் இல்லை.
உடல் வருந்த அதைப்பற்றிய
சிந்தனையிலேயே நாட்களைக்
கடத்திக் கொண்டிருக்கிறான் தலைவன்.

நண்பர்கள்," விடுடா ...
காதலாவது கத்தரிக்காயாவது?
இதை விட்டுவிட்டு
உன் வேலைப்பார் "என்று
கடிந்து கொள்கின்றனர்.

"முடியலியே...என்னால் முடியலியே"
புலம்புகின்றான் தலைவன்.

"நண்பர்களே!
என்னில் இருக்கும் இந்தக் காதல்
நோயைத் தடுத்து நிறுத்த
முடிந்தால் நன்றுதான்.
நான் மாட்டேன் என்றா சொல்கிறேன்?
நானும்  இயல்பாக இருந்துவிடத் தான்
 விரும்புகிறேன்.
 முடியலியே....
 என் நிலை இப்போது எப்படி
 இருக்கிறது தெரியுமா?
 

ஒரு பாறையில் வெண்ணெய் 
வைக்கப்பட்டிருக்கிறது.
வெயில் ஏற ஏற
அந்த வெப்பத்தினால் வெண்ணெய்
உருகி, பாறை முழுவதும் 
வழிந்து ஓடுகிறது.
அதனைக் கையிலாத ஊமை ஒருவன்
கண்ணால் பார்க்கிறான்.
கையில்லை. அதனால்  அவனால்
அதனை தடுக்கவோ எடுக்கவோ
முடியவில்லை.
யாரையாவது உதவிக்கு அழைக்கலாம்
என்றால் அவனால் பேசவும் முடியாது.
இப்போது அவனால் என்ன செய்துவிட
முடியும்?
செயலற்ற நிலையில் அப்படியே
நிற்க வேண்டியதுதான்.
அதே நிலையில்தான் நானும்
இருக்கிறேன் "என்கிறான்.

என்னால் முடியலியே என்று
சொல்வதற்கு "கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல"
 என் நிலை இருக்கிறது என்று சொல்லி 
 நம்மை எல்லாம்
ஐயோ பாவம்  என்று பரிதாபப்பட
வைத்துவிட்டான்.
இப்படியெல்லாம் இவனைப்
பேச வைத்தவர் யார் என்று
பின்னணியை ஆராய வைத்துவிட்டான்.

யார்?....யார்..? யாராக இருக்கும்
என்று கேட்கிறீர்களா?
வெள்ளிவீதியார் தாங்க....
பெயருக்கு ஏற்றாற்போல்
பளிச்சென்று ஒரு உவமையைக் கூறி 
தன்னை அண்ணாந்து பார்த்து ஆச்சரியப்பட
வைத்துவிட்டார்.

எப்போதெல்லாம் ஒன்றும் செய்யமுடியாமல்
உள்ளுக்குள்ளேயே உருகும் நிலை வருமோ
அப்போதெல்லாம்
"கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல"
 என்ற உவமை நம்முன் வந்து
 உன் நிலைமை இப்படித்தாம்பா
 என்று நம்மை உணர வைக்கும்.
 
எப்படி எப்படியெல்லாம் சிந்தித்து
எழுதியிருக்கிறார் இந்த
 வெள்ளி வீதியார்.

அருமையான உவமை....
நம்மை அதிர்ச்சியில் உறைய
வைத்த உவமை.
ஆச்சரியப்பட வைத்த உவமை.
இதற்காகவே இலக்கியம் படிக்க வேண்டும்
என்ற ஓர் ஈர்ப்பை ஏற்படுத்த வைக்கும்
உவமை.

"கையில் ஊமன்
கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல "

Comments

  1. "கையில் ஊமன்"... மிகமிக அருமை. இன்று தான் முதன்முறையாகப் படித்தேன். தொடரட்டும் உங்கள் பணி. பணி சிறக்க வாழ்த்துக்கள்👍

    ReplyDelete
  2. இலக்கியம் படிக்கத் தூண்டிய உவமை.மிகமிக அருமை.வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts