உண்டாலம்ம இவ்வுலகம்
உண்டாலம்ம இவ்வுலகம்....
உலகம் ரொம்ப கெட்டுப் போய்
விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை ,கொள்ளை
பாலியல் வன்கொடுமை, சண்டைச் சச்சரவு,
நாட்டுக்கு நாடு போர் .வீட்டுக்கு வீடு
போட்டி, பொறாமை, எங்கெங்கு நோக்கினும்
அமைதி இல்லாச் சூழல் என்று சொல்லிச்
சொல்லிப் புலம்பாத ஆளில்லை.
அப்படியானால் உலகமே அவ்வளவு தானா.?
இனி உருப்படவே உருப்படாதா.?
உருப்படியான ஆள் ஒருவர் கூட இல்லையா
என்ற ஐயம் எல்லோர் மனதிலும் எழுவது
இயல்பு.
ஏன் இல்லை. ...அப்படி இல்லாதிருந்தால்
உலகம் என்றோ அழிந்து போயிருக்குமே...
உலகம் இன்று வரை நல்லபடியாக இயங்கிக்
கொண்டிருக்கிறது.
அப்படியானால் நல்லவர்களும் உள்ளனர்
என்பதுதானே அர்த்தம்.
"நல்லார் ஒருவர் உளரேல்அவர் பொருட்டு
எல்லோருக்கும் பெய்யும் மழை "
என்று வள்ளுவர் கூறியிருக்கிறாரே
என்ற உங்கள் மனவோட்டம் எனக்குப்
புரிகிறது.
மழையும் பெய்கிறது...உலகமும் இயங்கிக்
கொண்டிருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம்
யார்...யாராக இருக்க முடியும்...
நல்லவர்கள்....நல்லவர்களேதான்.
வேறு யாரும் இதற்குக் காரணம் அல்லர்.
இன்றும் உலகில் நல்லவர்கள்
இருப்பதால்தான் உலக இயக்கம்
தடை இல்லாமல் சீராக போய்க்
கொண்டிருக்கிறது
இதை நான் சொல்ல வில்லை புறநானூற்றுப்
பாடல் ஒன்று சொல்கிறது பாருங்கள்.
"உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும் இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவதுஅஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும்கொள்ளலர்; அயர்விலர்
அன்னமாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே!"
கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி
என்ற மன்னன் பாடியப் பாடல் இது.
அது என்ன கடலுள் மாய்ந்த இளம் வழுதி.
பெயர் வேடிக்கையாக இருக்கிறதல்லவா!
வேடிக்கைக்குப் பின்னால் ஒரு சோகமான
கதை ஒன்று உள்ளது.
இளம் வழுதி பாண்டிய குலத்தைச் சேர்ந்த
மன்னன்.
பக்கத்து நாடுகளுக்கு எல்லாம் படையெடுத்துச்
சென்று வெற்றி கண்டவன்.
இப்படி ஒருமுறை பக்கத்து நாட்டுடன்
போர்புரிய வேண்டிய
சூழல் ஏற்பட்டது.
கடற்படையோடு போருக்குச்
சென்றார் இளம்வழுதி.
கப்பல் கடலில் சென்றுகொண்டிருக்கும்போது
பெரும் புயல் காற்று வீசியது.
அதனால் இளம்வழுதி சென்ற கப்பல்
கடலில் மூழ்கியது.
மன்னனும் மன்னனுடன் போருக்குச் சென்ற
வீரர்களும் கடலில் மூழ்கி மாண்டு போயினர்.
நாடே சோகத்தில் மூழ்கியது.
இப்போது மற்றவர்களுக்கு அவரை அடையாளப்படுத்திச்
சொல்ல வேண்டும்.
வேறு எந்த நிகழ்வும் அவர்களுக்கு
நினைவுக்கு வரவில்லை.
அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும்படி
நிகழ்ந்த மரணம் மட்டும் நினைவுக்கு வந்தது.
அதையே அடைமொழியாக கொடுத்தால் என்ன
என்று நினைத்தனர்.
அதன் பின்னர் கடலுள் மாய்ந்த என்ற அடைமொழி
அவர் பெயரோடு சேர்க்கப்பட்டு
அதுவே அவருக்கு அடையாளமாகிப் போனது.
அவர் பாடிய பாடலின் விளக்கம் இதோ :
"இந்திரனுக்கு உரிய அமிழ்தம் ஒரு மனிதனுக்குக்
கிடைக்கிறது.
இனிதினும் இனிதான இந்த அமிழ்தம்
கிடைப்பது அரிதினும் அரிது.
இதனை தான் மட்டும் உண்டால் என்ன?
இது சாதாரணமான மனிதனின் எண்ணமாக
இருக்கும்.
அதன் இன்பம் தனக்கு
மட்டும் கிடைக்கவேண்டும்
என்று எண்ணாமல் பிறருக்கும் அளித்து
அதன்பின்னர் தானும் உண்பர் சிலர்.
அவர்களுக்கு யார் மீதும்
கோபதாபம் கிடையாது.
யாரையும் நமக்கு வேண்டியவர்
இவர் வேண்டாதவர்என்ற பாகுபாடு
பார்க்க மாட்டார்.
எந்தச் செயலைச் செய்வதற்கும் சோம்பல்
என்பதே கிடையாது.
பிறர் அஞ்சும் செயலுக்கு தாமும் அஞ்சுவார்.
புகழ் தரும் நற்செயயல்கள் செய்வதற்காக
உயிரைக் கொடுக்கவும் தயங்க மாட்டார்.
நாம் இந்தச் செயலைச் செய்வதால்
பழிதான் வரும் என்பது தெரிந்தால் உலகம்
முழுவதும் கிடைப்பதாக இருந்தாலும்கூட
அச்செயலை ஒருபோதும் செய்ய மாட்டார்.
மனம் சோர்வடையாது தமக்கென
உழைக்காமல் பிறருக்காக பிறர்
நன்மை அடையவேண்டும் என்ற
உயர்ந்த நோக்கோடு உழைப்பவர்கள்
இருப்பதால்தான் உலகம் இன்றுவரை
நில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது"
என்கிறார் கடலுள் மாய்ந்த இளம் வழுதி.
இதையேதான் வள்ளுவரும்,
"பண்புடையார் பட்டுண்டு உலகம் ; அஃதின்றேல்
மண்புக்கு மாய்வது மன் "
என்று வேறு முறையில் சொல்லி இருக்கிறார்.
நல்லவர்கள் இருப்பதால்தான் உலகம்
சீராக இயங்குகிறது என்று வள்ளுவரும்
கடலுள் மாய்ந்த இளம் வழுதியும் கூறிவிட்டனர்.
நமக்கு இதில் மாற்றுக் கருத்து இருக்கவா
போகிறது.!
Comments
Post a Comment