முல்லையும் பூத்தியோ
முல்லையும் பூத்தியோ
"நெருநெல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ் வுலகு"
என்றார் வள்ளுவர்.
நேற்று இருந்தவன் இன்று இல்லை
என்று சொல்லப்படும் நிலையாமை
ஆகிய பெருமை உடையது இவ்வுலகு.
எவ்வளவு எளிதாக சொல்லிவிட்டார்.
உலகம் என்றால் ஆயிரம் இருக்கும்.
எதையும் தூக்கிச் சுமந்து
மனதில் பாரத்தை ஏற்றிக் கொள்ளாமல்
சாதாரணமாக கடந்து போக வேண்டும்.
இது ஞானிகள் சொல்லித் தரும் பாடம்.
ஆனால் எல்லா இடங்களிலும் எல்லா
நேரங்களிலும் எல்லாவற்றையும் எளிதாக
எடுத்துக்கொண்டு நம்மால் கடந்து செல்ல
முடிகிறதா?
சில இழப்புகள் நம்மை புரட்டிப்
போட்டு விடுகின்றன.
காலனையே கேள்வி கேட்க
வைக்கின்றன.
காலத்தின் மீது கோபம்கொள்ளச்
செய்கின்றன.
தாங்க முடியாமல் விம்மி விம்மி
அழ வைக்கின்றன.
உள்ளுக்குள்ளேயே வெதும்பி வெதும்பி
ஒவ்வொரு நாளும் சாகாமல் சாக வைக்கின்றன.
புலம்பி தவிக்க வைக்கின்றன.
புரியாமல் விழி பிதுங்கி
நிற்க வைக்கின்றன.
எழுதி முடிக்கப்படாப் புத்தகத்திற்கு
முடிவுரை எழுதி பிழைக்கணக்கு
செய்து விட்டாய் என்று இறைவனிடமே
கேள்வி கேட்க வைக்கின்றன.
இவற்றையெல்லாம் கடந்து ஒருவர்
இயற்கையையே கேள்வி கேட்கிறார்.
யாரிவர்?
எதற்காக இயற்கையை நோக்கி கேள்வி
கேட்கிறார்?
இயற்கைமீது இவருக்கு அப்படி என்ன
கோபம்?
முல்லையும் பூத்தியோ? என்று
முல்லைக்கொடியைப் பார்த்துக் கேள்வி
கேட்டு நிற்கிறார்.
யாரிவர் ?
எதற்காக இந்தக் கேள்வி?
அறிய வேண்டும் என்று ஆவலாக
உள்ளதல்லவா!
குடவாயில் கீரத்தனார் என்ற புலவர்தான்
இந்தக் கேள்வியை முல்லைக்கொடியைப்
பார்த்துக் கேட்கிறார்.
முல்லைக்கொடி அதுபாட்டுக்குப்
பூத்துக் கிடக்கிறது.
இவரும் இவர் பாதையில்
செல்ல வேண்டியதுதானே!
முல்லைப் பூத்ததில் இவருக்கு என்ன
கவலை வந்துவிட்டது என்கிறீர்களா?
அதுதான் பாடல்.
இதோ பாடல் உங்களுக்காக:
"இளையோர் சூடார்; வளையோர் கொய்யார்
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் !பாடினி அணியாள்!
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்னை
முல்லையும் பூத்தியோ !
ஒல்லையூர் நாட்டே!"
ஒல்லையூர் கிழான் என்ற மன்னனின்
மகன் பெருஞ்சாத்தன்.
நல்ல வீரன். பாணரும் பாடினியரும்
மகிழும் வண்ணம் வாரி வழங்கும் வள்ளல்.
இனிய பண்பாளன். அவன் இறந்துபோய்
விட்டான் என்ற செய்தி கிடைக்கிறது.
ஒல்லையூர் நோக்கி விரைகிறார்
குடவாயில் கீரத்தனார் என்ற புலவர்.
காட்டு வழி.
காடெங்கும் முல்லைப்பூ பூத்துக்
குலுங்கிக் கிடக்கிறது.
தனது மன்னன் மகன் இறந்துவிட்டானே என்ற
கவலையில் நடந்து வந்துகொண்டிருந்த புலவருக்கு
பூக்கள் பூத்துக்கிடக்கும்
அழகைக் கண்டு
மகிழ முடியவில்லை.
மாறாக, பூக்கள் மீதுகோபம் வருகிறது.
ஊரே கவலையில் இருக்கிறது.
இந்த நேரத்தில் நீ பூத்திருக்கிறாயே!
இனி யார் உன்னைத் தீண்டப் போகிறார்கள்
என்று இப்படி பூத்துக் கிடக்கிறாய்?
எங்கள் நாட்டு இளம் பெண்கள் இனி
உன்னைச் சூடிக்கொள்ள மாட்டார்கள்.
அதனால் வளையல் அணிந்த மகளிர் உன் பூக்களைக்
கொய்துச் செல்ல வரப்போவதில்லை.
யாழைக் கையில் வைத்துப் பாடலிசைத்துக்
கொண்டே வரும் பாணர்கள்
தங்கள் யாழின் தண்டால்
உன்னை வளைத்துப் பறித்து
தலையில் சூடிக் கொள்ளப் போவதில்லை.
பாணனே சூடாதபோது பாடினி எப்படிச்
சூடுவாள் ?
அவளும் உன்னைக் கொய்து
சூடிக் கொள்ளப் போவதில்லை.
பிறகு எதற்காக நீ மலர்ந்திருக்கிறாய்?
என்று கேட்கிறார் புலவர்.
கேட்பது ஞாயம் தானே!
நாடே கவலையில் இருக்கும் போது
இந்த முல்லைக்கு மட்டும் அப்படி என்ன மகிழ்ச்சி வேண்டியிருக்கிறது.?
தம் வருத்தத்தை யாரிடம்
சொல்வது எனத் தெரியாமல்
முல்லைக்கொடியின் முன்னால்போய்
நின்று நீ செய்வது முறையோ என்று
முறையிட்டு நிற்கும் புலவரின்
நிலையை என்னவென்பது?
கையறு நிலை பாடவேண்டும்.
அது யாரைப் பார்த்துப் பாடினால் என்ன?
தன் உள்ளக் குமுறலைச் சொல்லி
ஆற்றிக் கொள்ள ஓர் ஆள் வேண்டும்.
காடெங்கும் முல்லையைத் தவிர
வேறொன்றுமில்லை.
முல்லைக்கொடி முன்வந்து
நிற்கிறார்.
முல்லையும் பூத்தியோ?
என்று கேட்டுவிட்டார்.
ஒல்லையூர் நாட்டில் உன்னைச் சூடுவதற்கு
யாருமே இல்லையே!
அப்படியிருக்க நீ ஏன் பூத்தாய்?
எவ்வளவு அருமையான கேள்வி!
மொத்த உணர்வினையும்
முல்லையும் பூத்தியோ என்ற
ஒற்றை வரி சுமந்து நிற்கிறது.
முல்லையும் பூத்தியோ? என்று
மறுபடியும் மறுபடியும் நம்மையும்
கேட்க வைத்து விட்டார் இந்தக் குடவாயில்
கீரத்தனார்.
புலவரின் உணர்வுகளோடு நம்மை
ஒன்ற வைத்து ஒட்டுமொத்தப் பாடலையும்
தூக்கிப் சுமந்து நிற்கும் வரி
முல்லையும் பூத்தியோ !
அருமையான பாடல் இல்லையா?
Comments
Post a Comment