நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை
நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை
"நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை"
ஆமாங்க...
நாளும் கிழமையும்
பார்த்துக் கொண்டிருந்தால் எளியவர்கள்
வயிற்றுப் பாட்டுக்கு வெளியில் போய்
வேலை செய்வதற்கு எந்த நாளைத்
தேர்ந்தெடுப்பது?
வறுமை எல்லாவற்றையும் கடந்தது.
சகுனம் பார்த்தலோ நல்ல நாளோ கெட்ட
நாளோ எதுவும் கிடையாது.
அவர்களுக்கு எல்லா நாளும்
நல்ல நாள் தான்.
ஒருவர் சிந்தனையில் ஓடுவதெல்லாம்
இன்றைய பொழுது நல்லதாய்
இருக்க வேண்டும்
நல்லதையே நடக்க வேண்டும் என்பதாக இருக்க வேண்டும்.
ஒரு வேளை சோற்றுக்கு வழி பிறக்க
ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்க வேண்டும்.
ஆனால் வயிறு நிறைந்து விட்டால்....
வேண்டாத சிந்தனைகள் எல்லாம்
வந்து தலையை நீட்டி எட்டிப் பார்க்கும்.
அவள் குறுக்கே வந்து விட்டாள்.
போன காரியம் விளங்குன மாதிரிதான்
என்று பக்கத்து வீட்டுக்காரர்களையும்
அக்கம் பக்கத்தினரையும் பார்த்து
முணுமுணுக்க வைக்கும்.
ஆக்கம் கெட்டவள்.....ஆக்கம் கெட்டவள்
என்று புலம்ப வைக்கும்.
சிலர் மூஞ்சியில் விழித்தாலே விளங்காது
என்று சொல்ல வைக்கும்.
பாம்புக் கண்ணு....பாண்புக்கண்ணு என்று
பாம்பை விட அதிக விஷம் கொண்ட வைக்கும்.
இப்படிப்பட்ட சிந்தனைகளும் விமர்சனங்களும் உதயமாகும் இடம்
சோம்பேறிகளின் மனக்கூடம்
என்பது கண்கூடான உண்மை.
உழைப்பாளியின் உள்ளம்
உழைப்பைப் பற்றி
நேர்மையாக சிந்திக்கும்.
சோம்பேறிகளுக்கு உண்மையாக
உழைப்பவர்களைக் கண்டால்
கண்கள் உறுத்தும்.
சோம்பேறியாக இருப்பவர்களிடமிந்துதான்
மூட நம்பிக்கைகளே பிறக்கின்றன.
ஒருவிதத்தில் இது பொறாமையின்
வெளிப்பாடு என்றுகூட சொல்லலாம்.
அவர்களிடமிருந்து உதயமானது தான் இந்த சகுனம்
பார்த்தலும் நாளும் கிழமையும் பார்த்தலும்
என்பது என் எண்ணம்.
உங்கள் எண்ணம் வேறாக இருக்கலாம்.
அதற்கு நான் பொறுப்பல்ல.
நம்பிக்கை வேறு.
மூட நம்பிக்கை வேறு.
இறைவன் மீது கொள்வது நம்பிக்கை.
நம் உழைப்பு மீது வைப்பது நம்பிக்கை.
நம் திறமையின் மீது இருப்பது நம்பிக்கை.
நம்மீது தான் நாம் நம்பிக்கை வைத்து
எந்த செயலிலும் ஈடுபட வேண்டும்.
எந்த இடத்திற்கும் செல்ல வேண்டும்.
செல்லக்கூடாது என்பதைப்பற்றி
நாம்தான் முடிவு எடுக்க வேண்டும்.
அடுத்தவர்கள் மீதோ
பிற பொருட்கள் மீதோ நாட்கள்மீதோ
கிழமை மீதோ
நம்பிக்கை வைக்கலாமா?
நாம் போகிற காரியத்திற்கும்
நாளுக்கும் என்ன சம்பந்தம்.?
சம்பந்தம் இல்லாத ஒரு ஆளை
சம்பந்தப்படுத்தி நீதான் இவ்வளவுக்கும்
காரணம் என்று சொல்வது எவ்வளவு
முட்டாள்தனம்.?
உன்னை நீ நம்பு.
அப்போதுதான் உலகம் உன்னை
நம்பும்.
இது நல்லநாள்.
இது கெட்டநாள்.
இன்று அஷ்டமி...இன்று நவமி
இப்படிப் பார்த்துப் பார்த்து
சிலர் வேலை செய்வார்கள்.
"செவ்வாயோ வெறுவாயோ "
"செவ்வாய் வெள்ளி செலவிடாதே"
புதன் கோடி தினம் கோடி
"பொன் கிடைத்தாலும் புதன்கிடைக்காது."
"திங்கள் புறப்பட்டால்
போன இடம் திரும்பாது."
ஆதலால் திங்கட்கிழமை
வெளியூர்களுக்குப் புறப்பட்டுச் செல்லக்
கூடாது.
சனி பெருகும்.
சனிப் பிணம் தனியே போகாது.
இப்படி ஒவ்வொரு நாளுக்கும்
ஒவ்வொரு விதமான சொலவடைகளைச்
சொல்லி இந்தநாள் நல்லது.
அந்த நாள் கெட்டது என்று சொல்லி
சொல்லி வளர்த்திருக்கிறார்கள்.
அதனால்தான் பெரும்பாலானவர்கள்
நாளும் கிழமையும் பார்த்துதான்
எல்லா செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
ஆனால் இதுதான் உண்மையா ?
இல்லை என்கின்றனர் முற்போக்குவாதிகள்.
யாரிந்த முற்போக்குவாதி.
அதிவீரராம பாண்டியர்
எழுதிய வெற்றி வேற்கை
"நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை"
என்று கூறுகிறது.
நல்லவனாக இருந்தால் நல்ல மனம் இருந்தால்
நாளும் கிழமையும் பார்க்காதே.
போய்க் கொண்டே இரு.
எல்லாம் நல்லதாகவே நடக்கும்
கஷ்டப்படுவார்கள் நல்ல நாள் பார்த்துதான்
வீட்டைவிட்டு வெளியே போவேன்
என்றால் பட்டினி கிடக்க வேண்டியதுதான்..
இதன் மூலம் வெற்றி வேற்கை சொல்ல வருவதென்ன?
நலிந்தவர் மட்டுமல்ல..
யாரும் நாளும் கிழமையும் பார்த்து
வீட்டிற்குள் முடங்கிக் கிடைக்காதீர்கள் என்பதுதான் அதிவீரராம பாண்டியர் சொல்ல வந்த கருத்து.
நல்ல கருத்து இல்லையா?
Comments
Post a Comment