எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் 

எதிர்பார்ப்பு இருந்தால் ஏமாற்றம் நிச்சயம்

இருக்கும்.

ஒருவர்மீது அதிதீவிர நம்பிக்கை 

வைத்து விட்டோம்.

அதனால் அவரிடமிருந்து எதிர்பார்ப்பும்

அதிகமாகிறது.

அந்த எதிர்பார்ப்பு நடைபெறாதபோது

 விரக்தி ஏற்படுகிறது.

ஏமாற்றமடைந்து புலம்ப 

ஆரம்பித்துவிடுவோம்.

அதிக நம்பிக்கை வைப்பதுகூட 

பல நேரங்களில் ஆபத்தாக முடிவதுண்டு.

குடும்பத்தில் சண்டை வருவதற்கான

முதற்காரணமே எதிர்பார்ப்புதான்.


அதனால் எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது

என்பதல்ல.

எதிர்பார்ப்பு இல்லாமல் எந்தக் குடும்பமும்

நகராது.


எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எந்த

செயலும் நடைபெறுவதில்லை. 

ஊதியம் கிடைக்கும் என்ற 

எதிர்பார்ப்பில்தான்

வேலை நடைபெறுகிறது.

ஊதியம் கிடைக்காது  என்று தெரிந்தால்

யாருமே எந்த வேலையும் செய்ய முன்வர

மாட்டார்கள்.


அந்தக் காலத்தில் புலவர்கள் 

மன்னர்களைப்

புகழ்ந்து பாடி பரிசில் பெற்றுச் செல்வர்.

மன்னர் எதுவுமே கொடுக்கமாட்டார் 

என்றால்

யார் பாடுவார்?

இப்படித்தான் ஒரு மன்னனிடம் ஏதாவது

கிடைக்குமா என்ற எதிர்பார்ப்போடு ஒரு 

புலவர் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்.

தனது முழு திறமையையும் காட்ட எண்ணி

இரவு முழுவதும் தூங்காமல் எதுகை 

மோனை நயத்தோடு மன்னனைப் புகழ்ந்து

அழகான பாடல் ஒன்று எழுதிக் 

கொண்டு சென்றார்.


மன்னனுக்கு மிக்க மகிழ்ச்சி.

நாள்தோறும் யாராவது வந்து

புகழ்ந்து கொண்டிருந்தால் யார்தான்

வேண்டாம் என்பார்கள்.

பாடல் வாசித்தாயிற்று. இப்போது

பரிசிலளிக்க வேண்டிய நேரம்.

மன்னனுக்கு பொருள் ஏதும் கொடுக்க

மனமில்லை.

உங்கள் பாடலில் எதுகை மோனை

 நன்றாக இருக்கிறது. ஆனால் பொருளில்

எங்கேயோ குறைபாடு உள்ளதுபோல

உணர்கிறேன்.நாளை

தரமான பாடலாக எழுதி வாருங்கள்

என்று வெறுங்கையோடு திருப்பி 

அனுப்பிவிட்டார்.


வயிற்றுப்பசிக்கு ஏதாவது கொடுப்பார் 

என்று எதிர்பார்த்துச் சென்ற புலவருக்கு

ஏமாற்றமே மிச்சம்.


மறுநாள் இன்னும் பல திருத்தங்கள்

செய்து அதே பாடலை எடுத்துக்

கொண்டுபோய் அவையில்

பாடினார் புலவர்.

மன்னருக்குப் பொருள்

கொடுக்க  மனமில்லை.

இதற்கு முன்னால் இப்படிப்பட்ட

பாடலைக் கேட்டிருக்கிறேன். 

யாரும் பாடாத பொருளில்

புதுமையான பாடல் ஒன்று

எழுதி வாருங்கள் என்று

அனுப்பி திருப்பி அனுப்பிவிட்டார்.


புலவர் வீட்டில் நாலு நாட்களாக 

அடுப்பு எரியவில்லை. தன் குடும்ப

வறுமையைப் போக்க ஏதாவது கிடைக்குமா

என்ற ஒரு எதிர்பார்ப்போடு வந்த 

புலவருக்கு மிஞ்சியது

மறுபடியும் ஏமாற்றம் மட்டுமே .


சோர்வாக திரும்பிச் சென்று ஒரு

மரத்து நிழலில் உட்கார்ந்திருந்தார் புலவர்.

அப்போது அந்தவழியாக முதியவர்

ஒருவர் வந்தார். சோர்வாக அமர்ந்திருக்கும்

புலவரைப் பார்த்ததும் அவரிடம் 

தங்கள் சோர்வுக்கான காரணம் என்ன என்று 

நான் தெரிந்து கொள்ளலாமா?

என்று கேட்டார்.


புலவர் என்னங்க...இந்த மன்னர்

எப்படி பாடல் எழுதி கொண்டு கொடுத்தாலும்

நன்றாக இல்லை என்கிறார் என்று

நடந்ததைக்கூறி சலித்துக் கொண்டார்.


எங்கே தாங்கள் எழுதி

வந்தப் பாடலைக் கொடுங்கள் என்று

கேட்டுப் பாடலை வாங்கிப் பார்த்து

வாசித்துப் பார்த்தார். பாடல் அருமையாக

இருந்தது.


இந்தப் பாடலில்  என்ன குறை கண்டார்?


 நாளை  இதே இடத்திற்கு வந்து

 காத்திருங்கள் . நான் பொருளோடு

 வருகிறேன் என்று சொல்லிவிட்டு

 பெரியவர் சென்றுவிட்டார்.

 

 புலவருக்கு ஒன்றுமே புரியவில்லை.

 இருந்தாலும் பெரியவர் பொருள்

 கொடுப்பதாக கூறியதால் அதே இடத்தில்

 வந்து காத்திருந்தார்.

மறுநாள் அரண்மனைக் காவலனோடு

ஒரு குதிரையில் வந்து இறங்கினார்

பெரியவர்.

பின்னால் இரண்டு மூன்று குதிரைகளில்

தங்க நாணயங்கள் நிரப்பப்பட்ட

பெட்டிகளோடு வீரர்களும் வந்தனர்.


புலவர் சுமக்கும் அளவுக்குத் தங்க

நாணயங்களை அள்ளி ஒரு பொட்டலமாக கட்டி

அவர் கையில் கொடுத்தார் பெரியவர்.

புலவருக்கு நம்பமுடியவில்லை.

நடப்பது கனவா நனவா தன்னையே

கிள்ளிப் பார்த்துக் கொண்டார்.


பெரியவரிடம் இவ்வளவு தங்க

நாணயங்கள் எப்படி கிடைத்தது என்று

விசாரித்தார்.


"உன்னை ஏமாற்றிய மன்னரை நான்

ஏமாற்றினேன் "என்றார் பெரியவர்.


"புரியவில்லையே...கொஞ்சம் புரியும்படி

சொல்லுங்கள் "என்று கேட்டார் புலவர்.


ஒரு துறவி வேடமணிந்து அரண்மனைக்குச்

சென்றேன். நீர் எழுதித் தந்த பாடலை

மனனம் பண்ணி அரசவையில் அச்சுபிசகாமல்

அப்படியே ஒப்பித்தேன்.

ஒப்பிக்கும்போது வார்த்தைக்கு வார்த்தை 

நிறுத்தாதபடி மழமழவென வார்த்தைகள்

வந்து விழுந்தன. அதனால் மன்னரால்

எளிதில் பொருள் புரிந்து

 கொள்ள முடியவில்லை.

புரிந்து கொள்ள முடியாதபடி பாடல்

இருந்ததால் இதுதான் தரமான பாடல்

என்பது மன்னர் கணித்துவிட்டார்.


 ஆஹா...ஓஹோ...என்று பாராட்டினார்.

 பாடலுக்கு எடைக்கு எடை தங்க

 நாணயம் கொடுக்கும்படி கூறினார்.

 நான் பாடல் இப்போது என் கையில்

 இல்லை.

  பாடலை வீட்டு முற்றத்தில் கிடக்கும்

 ஒரு  பாறையில் எழுதி வைத்திருக்கிறேன்.

 என்னோடு வீரர்களை அனுப்புங்கள்.

எடுத்து வருகிறேன்

 என்றேன்.

மன்னர் அதிர்ந்து போனார்.


பாறை எடைக்கு எடை தங்க நாணயம்

கொடுக்க வேண்டுமே என்றதும்

மன்னர் முகம் அப்படியே வாடிப்போனது.


இருப்பினும் பாடல் பாடியவர்

துறவியாயிற்றே....ஏதாவது 

சாபம் விட்டுவிட்டால் என்று அஞ்சிய

மன்னருக்கு எடைக்கு எடை தங்க

நாணயங்கள் தருவதைத் தவிர

இப்போது வேறு வழி தெரியவில்லை.


 

மன்னர் உங்களை ஏமாற்ற நினைத்தார்.

நான் மன்னரை ஏமாற்றி விட்டேன்

என்று சொல்லி சிரித்தார் பெரியவர்.


 எல்லோரையும் எல்லா

நேரங்களிலும் ஏமாற்றிவிட முடியாது.


 சிறுபிள்ளைகள்கூட ஆரம்பத்தில் 

 நாம் செய்யும்

 சிறுசிறு ஏமாற்று வித்தைகளை நம்பும்.

 பின்னர் விழித்துக் கொண்டு 

 எதிர் கேள்வி

 கேட்க ஆரம்பிக்கும்.

 ஆனால் சிலர் கடைசிவரை ஏமாளிகளாக

 இருப்பதால்தான் ஏமாற்றுகிறவர் காட்டில்

 அடைமழை பெய்து கொண்டே 

 இருக்கிறது.


அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு இன்றுவரை

பணத்தைப் பறிகொடுத்து

 காவல் நிலையங்களில்

கண்ணீர் மல்க நிற்போரைப் 

எத்தனை முறை

பார்த்திருக்கிறோம்.


உங்களை ஏமாற்ற நினைப்பவர்கள்

யாரை கவிழ்க்கலாம் என்று சுற்றித்

திரிந்து கொண்டிருக்கிறார்கள்.


அயல்நாட்டில் வேலை என்று தாலி

தடயத்தை விற்றுக் கொடுத்துவிட்டு

ஏமாற்றப்பட்ட வாலிபர்கள் 

எத்தனை எத்தனைபேர்!


 எல்லா ஏமாற்றங்களும் ஏதோ ஒரு பெரிய

 எதிர்பார்ப்பால் நடந்ததாகவே இருக்கும்.


பெரும்பாலும் நாம் அறிந்தவர்கள் மற்றும் 

உறவுகளால்

மட்டுமே ஏமாற்றப்பட்டிருப்போம்.

முன்பின் அறியாதவர்களிடம் 

ஏமாறுவது அங்கொன்றும் இங்கொன்றுமாக

ஏதோ ஒரு இடத்தில் மட்டுமே நடை

பெற்றிருக்கும்.


ஒருமுறை ஏமாற்றப்பட்டுவிட்டால்

அந்த ஒரு விசயத்தில் மட்டும் நாம்

ஏமாற்றப்பட்டு விடக்கூடாது என்று

கவனமாக இருப்போம்.


ஆனால் அதே ஆளிடம் வேறொரு

விசயத்தில் ஏமாந்து போவோம்.

இதுதான் மனித இயல்பு.


சில சமயங்களில் நாம் தெரிந்தே 

ஏமாறுகிறோம்.


ஏமாற்றுவது தவறு. அதுபோல

ஏமாறுவதும் ஒருவிதத்தில் தவறு 

என்றுதான் சொல்வேன்.

நமது அதிகப்படியான எதிர்பார்ப்பு

அதாவது ஆசைதான் நம்மை

ஏமாற வைக்கிறது.

நமது பலவீனங்களைத் தெரிந்தவர்களால்

மட்டுமே நம்மை ஏமாற்ற முடியும்.


பெற்றவர்கள் பிள்ளைகள் மீது

அதிகப்படியான எதிர்பார்ப்பு

வைத்திருப்பர்.

அந்த எதிர்பார்ப்பு பொய்யாகப் 

போகும்போதுதான் புலம்பித் தவிப்பர்.


மனைவி கணவன் மீது வைத்திருக்கும்

எதிர்பார்ப்பு நிறைவேறாமல் 

போகும்போது அதுபிரிவில் கொண்டு வந்து

நிறுத்துகிறது.


இதிலிருந்து நாம் அறிந்துகொள்ள

வேண்டியது யார்மீதும் 

அதிகப்படியான எதிர்பார்ப்பு

இருக்கக் கூடாது என்பதாகும்.


ஏமாற்றங்கள் வரும்போது

தாங்க முடியாமல்தான் சிலர்

தற்கொலைவரை சென்று விடுகின்றனர்.


எதிலும் அதிகப்படியான எதிர்ப்பார்ப்பு 

வைக்காதிருந்தாலே நாம் 

ஏமாற்றத்தைத் தவிர்த்து

நிம்மதியாக வாழலாம்.


நிம்மதி வேண்டுமா?


எதிர்பார்ப்பும் வேண்டாம்.

ஏமாற்றமும் வேண்டாம்.






Comments