யானையோடு ஒரு விளையாட்டு
யானையோடு ஒரு விளையாட்டு
பாணன் ஒருவன்
இன்று ஒரு வள்ளலைப் பாடி
பொருள் பெற்று வருகிறேன் என்று தன் மனைவியிடம் கூறிவிட்டுச் சென்றான்.
ஆனால் வரும்போது வெறும் கையோடு வருகிறான்.
வெறுங்கையை
வீசிக்கொண்டு வீட்டிற்கு வந்ததும் பாணினிக்குக் கோபம்.
"இன்றும் வெறுங்கை தானா?"
நக்கலாகக் கேட்டாள்.
"இல்லை ...இல்லை கொண்டு வந்திருக்கிறேன்"
என்றான்.
"என்ன கொண்டு வந்தீர்கள்? காட்டுங்கள்." ஆர்வமாக
கேட்டாள்.
தன் மனைவியோடு சொல் விளையாட்டு
விளையாடிப் பார்ப்பதற்கான
நல்வாய்ப்பு இப்போது
கிடைத்திருக்கிறது.
நழுவ விட்டுவிடுவானா?
ஒரு நமட்டுச் சிரிப்போடு பாணினியைப்
பார்த்தான்.
அவள் கண்கள் அவன் கையில் ஏதாவது
இருக்கிறதா என்று துளாவின.
அவளுடைய ஆர்வத்தைக் கண்டு பாணனுக்கு உள்ளுக்குள் ஒரு சிரிப்பு.
"வம்பதாம் களபம்
கொண்டு வந்திருக்கிறேன்" என்றான்.
(அதாவது கயிறு அணிந்த யானை என்பது அதன் பொருள்.)
அதற்கு அவள் என்ன சொன்னாள் தெரியுமா?
"வாசனை உடைய சந்தனத்தைத்தான் பெற்று வந்தாயா?
நல்லது.... அப்படியானால் அதை நீயே பூசிக்கொள் "என்று கோபமாக சொல்லி
முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
"சந்தனம் இல்லை, மாதங்கம்
கொண்டு வந்திருக்கிறேன்" என்றான்
பாணன்.
மாதங்கம் என்பது யானையின்
மற்றொரு பெயர் என்பது
அவளுக்குப் புரியவில்லை.
"ஆ...மா தங்கமா
நிறைய தங்கம் பரிசாகப் பெற்று
வந்திருக்கிறீர்களா?
அது போதும்.
இனி நம் துன்பம் எல்லாம் தீர்ந்துவிடும்.
நாம் மகிழ்ச்சியாக வாழலாம்"
என்று மகிழ்ச்சியில்
திக்குமுக்காடி நின்றாள்.
பாணனுக்கு தான் தங்கம் கொண்டுவரவில்லை என்பதை எப்படிச்
சொல்லி புரிய வைப்பது என்று தெரியவில்லை.
சற்று மாற்றிப் சொல்லிப் பார்ப்போம் என்று,
" பம்பு சீர் வேழம் கொண்டு வந்தேன்" என்றான்.
அந்த அப்பாவிப் பெண்ணுக்கு
பம்பு சீர் வேழம் என்றால் நிறையப் புகழ் உடைய யானை என்று சொல்கிறான் என்பது புரியவில்லை.
அதற்கும் அவள் ,'நல்ல கரும்புதான் பரிசாகக் கிடைத்ததா.?
சரி...ஒன்றுமில்லாததற்கு அதாவது கிடைத்ததே
அதையாவது கொண்டு வாருங்கள்.. முறித்துச் சாப்பிடலாம்" என்றாள் சலிப்பாக.
"கரும்பு இல்லையம்மா பகடு
கொண்டு வந்திருக்கிறேன் பகடு " என்றான்.
யானையின் மற்றொரு பெயர் பகடு.
இந்த அசட்டுப் பெண்ணுக்கு அதுவும் புரியவில்லை.
சற்று நேரம் திருதிருவென்று
முழித்தாள்.
பின்னர் ஏதோ நினைவு வந்தவளாக
"வள்ளல் உனக்கு எருமைக்கடாவையா கொடுத்தார்?
பரவாயில்லை,
அதுவும் நல்லதுதான்
நம் வயலை உழுவதற்கு அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்"
என்று சொல்லி சற்று ஆறுதல்பட்டுக் கொண்டாள்.
எப்படித்தான் புரிய வைப்பது என்று
புரியாத பாணன்,
"ஐயோ ....நான் கொண்டு வந்திருப்பது எருமை இல்லை. கம்பமா "என்றான்.
கம்பமா என்றால் அசைகின்ற யானை
என்று பொருள்.
பாணினி," ஓ, கம்ப மாவா ?"என்று
ஆச்சரியமாக கேட்டாள்.
"கம்பம் மாவு
மட்டும் தான் பரிசாகக் கிடைத்ததா?
போகட்டும் ....அதையாவது சீக்கிரம் தாருங்கள் .அதைவைத்து நல்ல களி கிண்டித் தருகிறேன்.
தின்று பசியாற்றிக் கொள்வோம் " என்றாள்.
" உனக்கு ஒன்றுமே புரியவில்லை.
நான் என் செய்வது? கம்பு மாவு இல்லை,
கைம்மா கொண்டு வந்திருக்கிறேன்
கைம்மா"என்று கோபத்தில் உரக்கக் கத்தினான்.
"இதற்கு எதற்கு கத்துகிறீர்கள்.?
யானை கொண்டு வந்திருக்கிறேன் என்று நேரடியாகவே சொல்ல வேண்டியதுதானே.
கைம்மா என்றால் கையை உடைய விலங்கு.
அதாவது யானை என்று எனக்குத் தெரியும்.
அந்த யானையை வைத்துக்கொண்டு
நாம் என்ன செய்வது?
வயிற்றுப்பசியைப் போக்கவா முடியும்.
இல்லை போருக்குத்தான் போக முடியுமா?" என்று அப்படியே கலங்கி போய்
தலையில் கை வைத்தபடி
தரையில் அமர்ந்தாள்.
"பூவோடு சேர்ந்த நாரும்
மணம் பெறும் என்பார்கள்.
பாணன் மனைவி என்றால் சும்மாவா ?"
என்று நினைத்தபடி மனைவியைப் பார்த்து
மெல்ல புன்னகைத்தான் பாணன்
பாடல் உங்களுக்காக....
"இம்பர் வான் எல்லை இராமனையே பாடி
என் கொணர்ந்தாய் பாணா நீ“, என்றாள் பாணி
வம்பதாம் களபமென்றேன் – பூசுமென்றாள்
மாதங்கமென்றேன் - யாம் வாழ்ந்தோமென்றாள்
பம்பு சீர் வேழமென்றேன் - தின்னுமென்றாள்
கம்பமா என்றேன்-நற்களியாமென்றாள்
கைம்மா என்றேன்-சும்மா கலங்கினாளே !"
யானைக்கு
இத்தனை பெயர்களா? நம்மை
ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் அந்தகக் கவி வீரராகவ முதலியார்.
சுருக்கச் சொல்லி
விளங்க
வைக்கும் புலமை புலவர்களைப் போல வேறு யாருக்கு வரும்?
ஒற்றைச் சொல்லில் உரையாடல்.
நாடகமாக காட்சிகளைக் கண்முன்
கொண்டு வந்து நிறுத்தி,
சந்தனமா … பூசிக்கோ.
கரும்பா -நீயே தின்னு.
எருமைக்கடாவா -வயல்ல உழு.
கம்ப மாவா-களி கிண்டு
கைம்மாவா- அட போய்யா
என்று பாணினி மூலமாக
கோபத்தைக்கூட அழகாக வெளிப்படுத்த
வைத்திருக்கிறார் புலவர்.
களபம் சந்தனமானதும்
மாதங்கம் மா தங்கமானதும்
வேழம் எருமை ஆனதும்
கம்பமா கம்பம் மாவாகிப் போனதும்
கைம்மா யானையாகி
கையை ஆட்டி ஆட்டி
கண்முன்
நடப்பதுமாய்க் காட்சிகளை
நகர்த்தி நம்மை
பாடலோடு கட்டி இழுத்துச் சென்று
யானையோடு விளையாட
வைத்திருக்கிறார்
இந்த அந்தகக் கவி .
அருமையான யானை விளையாட்டு... இல்லையா?
Comments
Post a Comment