ஆங்காலம் ஆகும்.....

ஆங்காலம் ஆகும்



 "காலம் கருதி யிருப்பர் கலங்காது

ஞாலம் கருது பவர்” என்பார்

வள்ளுவர்.


உலகத்தைக் கொள்ளக் கருதுகின்றவர் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக் காத்திருப்பார்கள்.


ஆனால் எல்லோருக்கும் காத்திருக்கும் 

பொறுமை வராது.

இப்போதே செய்து முடிக்க வேண்டும்.உடனடியாக பெரிய ஆளாக வேண்டும்.

உலகமெல்லாம் தன் கைக்குள் வர

வேண்டும் என்று ஆசைப்படுவர்.


தங்கள் ஆசையை நிறைவேற்ற எதை எதையெல்லாமோ

செய்து பார்ப்பர்.

ஆனால் எதுவும் கைகூடாது.


கடைசியில் என்ன இது....

நான் என்ன செய்தாலும்‌

ஒன்றும் கைகூட மாட்டேங்குதே... என்று

ஒரு விரக்தியான மனநிலைக்குத் தள்ளப்பட்டு விடுவர்.

யாரோ ஒருவர் மட்டுமே இப்படி

நடந்து கொள்வதில்லை.

நம்மில் பலர் இப்படிப்பட்ட மனநிலை உடையவர்கள்தான்.


ஏன் இந்த அவசரம்?

ஆங்காலம் ஆகும்.

பொறுமையாக இருங்கள் 

என்று நமக்கு ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லித் தருகிறார் ஔவை.

அதைப் பற்றிய ஔவையின் பாடல்

இதோ உங்களுக்காக...

"எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது

புண்ணியம் வந்தெய்து போதல்லால் – கண்ணில்லான்

மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே

ஆங்காலம் ஆகும் அவர்க்கு"


   நல்வழி பாடல்-4


"கண் தெரியாத குருடன்  ஒருவன் மாங்காய் அடிக்க முயற்சி செய்கிறான்.

தன்னால் கூடுமா என்ற சிந்தனை 

அவனிடம் இல்லை.

கால நேரம் தெரியவில்லை.

கோலைக் கையாளும் திறனும்  அவனுக்கில்லை.

எந்தத் திசையை நோக்கி வீசினால்

மாங்காய் விழும் என்பதையும் அறிய வாய்ப்பில்லை.


ஆனாலும் ஓர் ஆசை.

கையில் வைத்திருந்த கோலை 

எடுத்து வீசுகிறான்.


அவன் மாமரத்தை நோக்கி வீச அது

எங்கேயோ போய் விழுகிறது.

ஆனால் மாங்காய் மட்டும் விழவில்லை.

இப்போது கையில்  இருந்த கோலும் 

போயிற்று.

இனி என்ன செய்வது?

கோலில்லாமல் எப்படி நடப்பது?

வழித்துணைக்கு வேண்டுமே?

எங்கே என் கோல் விழுந்தது?

தட்டுத் தடுமாறுகிறான்.  

கோலை எடுக்க முடியவில்லை.

மாங்காய்  மீது ஆசைப்பட்டு

உள்ளதையும் இழந்து போனான்.


 ஒருவன் கால நேரம் தெரியாமல்   ஒரு செயலைச் செய்தால்  அவன் நிலை

இப்படித்தான் முடியும். கையில் உள்ள பொருளையும் இழந்து

தடுமாற நேரிடும். நாம் செய்த புண்ணியத்தின் பலனாக, ஒரு காரியம் கைகூடும் வேளை வரும் வரை நாம் செய்யும் எந்த முயற்சி

செய்தாலும்  அது நமக்குப்  பலன் தராது, 

அதனால் காலம் கருதி ,

உரிய காலம் வரும்வரை காத்திருந்து

அதற்கான காலம் வரும்போது அந்தச்

செயலைச் செய்ய வேண்டும்."

என்கிறார் ஔவை.

 அருமையான உவமை.
நம்மில் பலருக்கு மாங்காய் அடித்த
அனுபவம் இருக்கும் ஆனால் கண் தெரியாத ஒருவன் தன் கையில் இருக்கும் கோலால் மாங்காய்
அடிக்க நினைத்தால்....
தெரிந்த ஒரு நிகழ்ச்சியைக் கண்முன்
கொண்டு  வந்து நிறுத்தி 
ஆசைப்பட்டால் எதுவும் ஆகாது. அதற்கு கால நேரம் சரியாக அமைய வேண்டும் 
என்று சொல்லி நம்மை சிந்திக்க வைத்திருக்கிறார் ஔவை.

"ஆங்காலம் ஆகும்..."

அருமையான வரி இல்லையா?

Comments