எட்டாம் நம்பர் வீடு

எட்டாம் நம்பர் வீடு 

எட்டாம் நம்பர் வீட்டை

எட்டிப்பார்காதே...எட்டிப்பார்க்காதே என்று

எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்.

நீ கேட்க மாட்டியா..."காதைப்பிடித்துத்

திருகினார் அம்மா.


ஏன் போனால் என்னவாம்?


"போகாதே என்றால் போனால்

என்னவாம்? எதிர்தா பேசுற.....

இனி ஒருவாட்டி எதிர்த்துப் பேசினா வாயிலேயே

சூடு வச்சுடுவேன். "


"போகல தாயி....எதுக்கு எட்டாம் நம்பர்

என்றதும் இப்படி பயப்படுகிறாய்?"


உனக்குச் சொல்லிட்டுத்தான் 

மறுவேலை பார்க்கணும்.

எப்பப் பார்த்தாலும் ஏன்? எதற்கு? என்று

ஆயிரெத்தெட்டுக் கேள்வி..."அம்மா முணுமுணுத்தபடியே

 முகத்தில்

முத்துமுத்தாக அனுப்பி இருந்த 

வியர்வையை முந்தானையால் துடைத்துக்

கொண்டார்.


ஏன் எட்டாம் நம்பர் வீடு

என்றதும் அம்மா இப்படிப் பயப்படுகிறார்?

வியர்த்து வேறு கொட்டுகிறது. பேச்சில்

ஒரு படபடப்பு தெரிகிறது. எட்டாம் நம்பர்

வீட்டிற்கும் அம்மாவிற்கும் ஏதோ ஒரு

தொடர்பு இருந்திருக்கிறது. அதை மறைக்கத்தான்

அம்மா இத்தனை பாடுபடுகிறார்.


ஒரு பக்கம் அம்மாவைப் பார்த்தால் 

பரிதாபமாக இருக்கிறது.

யார் வீடு?

இந்த வீட்டில் அப்படி என்ன மறைக்கப்பட வேண்டிய பொருள் இருக்கிறது.?


என்னவாக இருக்கும்?

எப்படித் தெரிந்து கொள்வது?

அம்மா மூடி மறைக்கப் பார்ப்பதிலிருந்து

அதனைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற 

ஆர்வம் எனக்குள் அதிகமாகிக்கொண்டே வந்தது.என்னைத் தூங்க விடாமல் துரத்தியது.


அவசியம் இல்லாவிட்டாலும் எட்டாம் நம்பர்

வீட்டில் எழுதப்பட்டிருந்த  

எட்டு என்ற எண் என்னை

என்ன என்னவெல்லாமோ செய்ய

ஆரம்பித்தது.

அடிக்கடி அந்தப் பக்கமாகப் போ என்று

மனசு உந்தித் தள்ளியது


எட்டாம் நம்பர் வீடு எப்போதும்

பூட்டியே இருக்கும்.

பூட்டிய வீட்டிற்குள்  யார் இருக்கப் போகிறார்கள்?

ஆள் இல்லாத வீட்டைப் பார்த்து

ஏன் பயப்பட வேண்டும்?

ஆள் இருந்ததற்கான

அடையாளம்கூட தெரியாமல்

சுவர் எல்லாம் பொசிந்து போய் 

பத்து வருடங்களுக்கு மேலாக

வெள்ளையடிக்கப்படாமல்

கிடந்தது.

சிதலமடைந்து கிடக்கும் கோலம் தான்

அச்சுறுத்துவதாக இருக்கிறது.


ஆனால் வீட்டுக்கு வெளியே எப்போதும்

ஒரு ஆட்டுக்குட்டி

கட்டிப்போடப்பட்டிருக்கும்.


மற்றவர்கள் எல்லாம் நெருங்காத,

நெருங்கவே அச்சப்படுகிற ஒரு 

வீட்டின் முன்பு  ஆட்டைக் கட்டிப்

போட்டது  யார்?


எதிர் வீட்டில் உள்ளவர்களாக

இருக்கலாம் என்றால் அதற்கும்

சாத்தியம் இல்லை.

எதிர்வீட்டில் ஒரு வயதான தாத்தா

மட்டும்தான் இருக்கிறார்.

அவருக்கும் கண் சரியாகத் தெரியாது.


அப்படியானால் அந்த ஆட்டுக்குட்டி

யாருடையது என்று தெரிந்தால்

அந்த வீட்டைச் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.


ஏதோ ஒரு ஆசையில் எட்டாம் நம்பர்

வீட்டுப் பக்கம் போய் நின்றேன்.


ஆட்டுக்குட்டிக்கு இரைக்காக ஒரு கட்டுவாழைஇலை 

தாழ்வாரத்தில் கட்டித் தொங்கப் 

போடப்பட்டிருந்தது.

அரைகுறையாக தின்னும் தின்னாமலும்

படுத்திருந்த ஆடு என்னைப் பார்த்ததும்..மே..மே

என்று கத்தியது.


ஆட்டுச் சத்தத்தைக் கேட்டதும்

யாராவது கதவைத் திறக்கிறார்களா

என்று அந்த வீட்டையே பார்த்துக்

கொண்டு நின்றேன்.


அதற்குள் என் கண்களைப் பொத்தி

என்னை பின்னால் இழுத்துக் குப்புறப்

தள்ளி விட்டது  ஒரு கை.


 வீசிய வேகத்தில் சற்று நேரம்

 என்னால் எழும்ப முடியவில்லை.

 நிலைதடுமாறி போனேன்.

 


உதடு கன்னம் எல்லாம்

 மண் ஒட்டிக் கொண்டது.

வேக வேகமாக எழும்பி 

உதடுகளிலிருந்த மண்ணைத்

துடைத்தபடியே என்னைத் தள்ளியவர்

யார் என்று சுற்றும் முற்றும் திரும்பிப் 

பார்த்தேன்.


ஒருவரையும் காணவில்லை.

என்ன இது? ஒருவரையும் காணவில்லை.

அப்படியானால் என் கண்களைப்

பொத்தி என்னைக் கீழே தள்ளியது....யார்?

யாராக இருக்கும்?


மெதுவாக ஒரு பயம் வந்து

எட்டிப் பார்த்தது.


முகம் வியர்த்துக் கொண்டு வந்தது.

கால்கள் தள்ளாடுவதுபோல இருந்தது.

மறுபடியும் வந்து ஏதாவது செய்துவிட்டால்.....


வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தேன்.


நான் ஓடி வருவதைக் கண்டதும்

என் அக்கா பேயைக் கொண்டதுபோல்

ஓடி வருகிற......மூஞ்சி 

 பேய் அறைந்த மாதிரி இருக்கு....

 என்ன ஆயிற்று? என்றாள்.

என்ன இவள் பேய்...பேய் என்று

என்னைக் கூடுதலாகப் பயமுறுத்துகிறாள்.


"ஒன்றுமில்லை...."சும்மாதான்

என்று சமாளித்தேன்.


"எட்டாம் நம்பர் வீட்டுப் பக்கம்

விழுந்து எழுந்து வந்ததுபோல தெரியுது.

முகத்தில் இருக்கும் மண்ணைச் சரியாக

துடைத்துக்கொள் "என்றாள்.


எல்லாவற்றையும்

கூடவே இருந்து பார்த்தது போல

கேட்கிறாள்?


சொல்லவா...வேண்டாமா.....


என்ற குழப்பத்தில் அக்கா முகத்தையே 

பார்த்துக்கொண்டு நின்றேன்.


என்ன...பேயைப் பார்த்து வாயடைத்துப்

போனவள் நிற்கிற மாதிரி இருக்கு?

ஏதும் பேயைக்கீயைப் பார்த்தியா 

மறுபடியும் பேயை கூட்டி வந்து முன்னால்

நிறுத்தப் பார்த்தாள் என் அக்கா.


"எக்கா உன்னிடம் ஒன்று கேட்பேன்

மறைக்காமல் சொல்லியா.....?"மெதுவாக

பேச்சுக் கொடுத்தேன்.


"ஏன் பேய் இருக்கா இல்லியா?

என்று கேட்கப் போறீயா?"


"ஓ...அது...அது....அதேத்தான்.

பேய் உண்டா இல்லியா?

எனக்கு இப்போது இரண்டில் ஒன்று தெரிந்தாகணும்."


"இதுக்கு தான் எட்டாம் நம்பர்

வீட்டில் போய்தான் பார்த்து வரணும்."

என்றாள் சர்வ சாதாரணமாக.


"எட்டாம் நம்பர் வீட்டிலா?

அங்கு அப்படி என்னதான் இருக்கிறது?"


ஒன்றுமில்லை....எல்லோரும் பேய் வீடு என்று

பார்ப்பதற்கே பயப்படுகிறார்களே!

அதனால் சொன்னேன்.""சமாளிக்கப்

பார்த்தாள் அக்காள்.


"பேய் வீடா?   ஏன் அப்படி?

அது உண்மையிலேயே பேய் வீடு தானா?

நீ நம்புறியா?"


"நம்பாம....சில நேரங்களில் அந்த வீட்டிலிருந்து

சின்ன பிள்ளை அழுகிற மாதிரி

அழுகைச் சத்தம் கேட்கும். நானே சில சமயங்களில்

கேட்டிருக்கிறேன்."


"நானும்தான் கேட்டிருக்கிறேன்.

அது புறா சத்தம்.......

அது கூடத் தெரியாதா?"


"அங்கு யார் புறா வளர்க்குறா?"


"ஆளில்லாத வீட்டில் புறா ஆந்தை

எல்லாம் தான் கூடு கட்டும்."


"நீ நான் சொல்வதை என்னைக்குத் தான்

நம்பினாய்? இன்றைக்கு நம்புவதற்கு?"



"நம்புறேம்பா.....சொல்லு அந்த வீட்டைச்

பற்றிய கதையைச் சொல்லு....."


சொன்னால் பயப்பட மாட்டியே....""


"மாட்டேன்....எதுவாக இருந்தாலும் சொல்லு."



"அந்த வீட்டுல ஒரு பாட்டி இருந்தாங்க...."


"ஓ....கேரளப் சூனியக்காரப் பாட்டி

மாதிரி."


"அதே....அதேத்தான்....சரியான சூனியம்

பிடித்துக் கிழவி.....அந்தப் சூனியக்காரியால்தானே

இத்தனை வம்பும்."


"வம்பா?....யார் கூட?"


"தெருவில் போறவுங்க வருகிறவுங்க

ஒருத்தர் விடாமல் வம்புக்கு

இழுக்கும்.

எல்லோரையும் முறைச் சொல்லிக்கூப்பிட்டு

பேசி வம்பை விலை கொடுத்து வாங்கும்."


"ம்...அப்புறம்?"


"இந்தப் பாட்டி ஒரு  அநாதைப் பயலுக்கு

பாவம் பார்த்துச் சோறு கொடுக்கும்."


"அவன் ஒத்தக்காலத் தாங்கித்  தாங்கி

நடப்பான்.பேச்சும் சரியா

வராது.அதனால் யாரும் அவனுக்கு

வேலை கொடுக்க மாட்டாங்க....."


"ஒரு வேளைச் சோறுக்காகப்

பாட்டி வாசலுல நிலையா 

காத்துக் கிடப்பான்.

பாட்டியும் ஒரு அவசரத்துக்கு 

கடைகிடைக்குப் போக ஒரு ஆள் வேணுமே என்று

அவனைச் சேர்த்து வச்சிருந்தாவ"


"அவனுக்கு வீடு இல்லியா?"


"வீடு இல்லியா இருக்கா என்றுகூட 

தெரியாது.ஏதோ அசலூருக்காரன்

அம்மன் கோவில் வேப்பமரத்துக்குக்

கீழே வந்து படுத்துக் கிடந்துருக்கான்."


"வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்தது

யாரு?"


"எல்லாம் இந்தப் பாட்டி தான்"


"ஐயோ பாவம் பார்த்தாங்க....

அது ஊரே ஐயோ பாவம்  என்று

சொல்லும்படி கொண்டு விட்டுட்டுது?"


"என்ன நடந்ததுது என்று சொல்லுங்க...."


"என்னத்த சொல்ல...இப்போது

நினைச்சாலும் ஈரக்கொலையே நடுங்குது."


"ஒரு கொலையா?....இரண்டு கொலையா

மூணு கொலை....ஒரே எடத்துல....

ஊரே குலுங்கிச் போச்சுல்ல...."


"கொலையா?....யாரு யாரைக் கொன்னா?

எம்மா கேட்டாலே பதறுது"


"யாரு யாரைக் கொன்னான்னு

எப்படிச் சொல்ல?

யாருக்குத் தெரியும்?

அந்தக் கடவுளுக்குதான் தெரியும்."


"கடவுளுக்கு தெரிவது இருக்கட்டும்.

இப்போது உனக்குக் தெரிந்ததைச்

சொல்லு.

என்ன நடந்தது....?எப்படித் கொலை நடந்தது....?"


"கேட்கும்போதே உனக்குச் பயமா இருக்குல்ல....

நேரில் பார்த்த எங்களுக்கு எப்படி

இருக்கும்?

ஈரக்குலை அத்துப்  போச்சு"


"நீ வேற...ரொம்ப பயம் காட்டாத....

அந்தக் கொலையைச் பற்றிச் சொல்லு."


அதெல்லாம் தெரியாது.

போலீஸ் காரங்க வந்து சொன்னதைப் பார்த்துதான்

என்ன நடந்தது என்று தெரிஞ்சுகிட்டோம்.

சாயங்காலம் ஒரு ஏழு  மணி இருக்கும்.


"ஊருக்குள்ள போலீசும் ஆம்புலன்சும்

வந்தது. என்னமோ ஏதோ என்று

ஊரு சனமெல்லாம் வண்டி பின்னால் ஓடிருச்சு.

நானும் ஓடினேன்.

வண்டி பாட்டி வீட்டுப் பக்கம் வந்து நின்னுது.

அதற்கு முன்னாலேயே தலையாரி எல்லாம்

வந்து நின்னுகிட்டு இருந்தாங்க..."


ஊரு மக்களை எல்லாம் துரத்திட்டு

போலீசு வீட்டுக்குள்ள போயி பார்த்தாங்க..

அப்புறம் ஒரு துணியில் ஏதோ பொட்டலத்தை

தூக்கிட்டு வருவது மாதிரி பாட்டியைத்

தூக்கிட்டு வந்தாங்க.

ஐயோ நான் எல்லாம் கண்ணைப் பொத்திகிட்டு

திரும்பி நின்னுகிட்டேன்.


எப்படி நடந்ததாம்?


".விளக்கு வைக்கிற நேரம். 

பாட்டி விளக்கை ஏற்ற

தீப்பெட்டி பாத்திருக்காங்க தீப்பெட்டியில

தீக்குச்சி இல்ல....கருக்கலும் ஆயிட்டு.

சுயம்பு சுயம்பு என்று 

சத்தம் கொடுத்துப் பாத்திருக்காங்க....

சுயம்பைக் காணோம் .

சவத்துப்பய....ஒருஆத்தர அவசரத்துக்குக்

கடைக்குப் போக

இல்லாம எங்கள் போயி தொலைஞ்சான்.

என்று சொல்லிகிட்டே நாம் ஒரு எட்டு போயி

தீப்பெட்டி வாங்கி வந்துடுவோமான்னு

கடைக்குப் போயிருக்காவ.

.கருக்கலுல  கதவை சாத்தப்பிடாதுன்னு

பக்கத்து வீட்டு சுதாவை....பாட்டி வருகிறதுவரை 

எங்க வீட்டை பார்த்துக்க மக்கா என்று

சொல்லிட்டு போயிருக்காங்க."


"சுதாவா? இது கேட்காத பேராய்

இருக்கே"


"இருந்தால்தானே பார்க்க முடியும்?"


"சுதாவையும் கொன்னுட்டாங்களா?"


"கேளு...குறுக்கே குறுக்கே

பேசாதே.

பாட்டி அந்தப் பக்கம் போகவும்

எப்போ நேரங் கெடைக்கும்

என்று காத்திருந்தது போல

மேல தெரு சன்னியாசிமவன்

வீட்டுக்குள்ள வந்து நுழைந்திருக்கான்...."


"யாரு....அந்த வாணுவாமலையா?"


"அவனேதான்."



"அப்புறம்...."


"அதைப் பார்த்ததும் அந்தச் சுதாப் பொண்ணு

பொண்ணு ....ஏய் எதுக்கு வீட்டுக்குள்ள போறே ....

வீட்டுல பாட்டி இல்ல என்று

சத்தம் போட்டபடியே அவன்

வீட்டுக்குள்ள போவதைத் தடுத்திருக்கு? "


களவாணிப் பய பச்ச புள்ளன்னிகூட

பார்க்காம புள்ளையைப் புடிச்சி

சுவைத்து வாக்குத் தள்ளியிருக்கான்.

பள்ள சுவத்துல முட்டி அம்மிக்கல்லுல போயி

விழுந்துருக்கு.


"பாவி ஒரே தள்ளுல கொன்று போட்டுட்டானா?""


செத்தே போயிட்டாளா?"


!பிள்ளை மூச்சு பேச்சி இல்லாமல்

கிடந்த உடனே இனி நம்ம மாட்டிகிடுவோம்ன்னு

வெளியில் ஓடப் பார்த்திருக்கான்.

வாசலுல பாட்டி எமன் மாதிரி

வந்து நின்னுருக்காவ"


"மாட்டிக்கிட்டானா?"


எவன்ல களவாணிப்பயல என்று சத்தம்

போட்டபடியே  வெளியில் கிடந்த கோடாரியைத் தூக்கி

ஒரே வெட்டு....



எம்மா...பயங்கரமா இருக்க....

அப்புறம் பய செத்துட்டானா?


"சாகாம...."


" அந்த மூணாவது கொலை. அது

எப்படி நடந்தது?"


"அது கொலை இல்லை .தற்கொலை.

தற்கொலையா? யார் தற்கொலை செய்தது?"



"அந்த

சுயம்புதான்."


"அவனா ?அவன் எதுக்கு

தற்கொலை செய்துகிட்டான்?"


"பாட்டியை போலீஸ் அழைத்துச் செல்லவும்

 வந்து மாங்குமாங்குன்னு

அழுதுகிட்டு நின்றான்.

போலீஸ் ஆம்புலன்ஸ்க்குப் பின்னால்

அழுதுகிட்டு ஓடினான்."


"அப்ப பார்த்ததுதான்....மறுநாள் பாட்டி

வீட்டு தாழ்வாரத்துல தூக்குல தொங்கிட்டான்னு

சொன்னாங்க....."


"எம்மா .!!!ஒரே வீட்டுல மூணு உயிரு போயிட்டு....

ரொம்ப பயமாத்தான் இருக்கு..."


அதுதான் எட்டாம் நம்பர் வீட்டைக் கண்டா

எல்லோரும் பயப்படுவாங்க.

அம்மா அதனால்தான் அந்தப்பக்கம் 

போகாதுங்க போகாதுங்க என்பாங்க.

செத்த மூணு உயிரும் வங்கொலையா 

போனதால

ஆத்மா அங்கேதான் சுத்திக்கிட்டு அலையுதாம்...."


யாரும் பார்த்தாகளாமா?


யாரு கண்ணுக்கும் தெரியல....ஆனால்

அப்படித்தான் ஊருக்குள்ள பேச்சு

நடக்குது.....


அட போக்கா....நீ நம்புறியா?


"நம்பல....ஆனாலும் எல்லாரும்

சொல்லும்போது ஒரு பயம்

வரத்தானே செய்யுது...."


வேப்பமர உச்சியில் நின்று

பேய் ஒன்னு ஆடுதுன்னு

விளையாடப் போகும் போது

சொல்லி வைப்பாங்க

உன் வீரத்தை கொழுந்தினிலே

கிள்ளி

வைப்பாங்க...


வேலையற்ற வீணர்களின்

மூளையற்ற வார்த்தைகளை

வேடிக்கையாகக்கூட நம்பிவிடாதே

நீ

வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து

வெம்பி விடாதே.....


சின்னப் பயலே... சின்னப் பயலே சேதி கேளடா?


பள்ளியில் படிக்கலியா

உங்களை எல்லாம் 

இன்னும் ஐந்நூறு பட்டுக்கோட்டையார்

வந்தாலும் திருத்த முடியாது.


என்றபடி அங்கிருந்து சென்றாள் தங்கை.














Comments