திருக்குறளில் காலம்
வள்ளுவர் பார்வையில் காலம்
முன்னுரை :
மனிதகுல வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் இன்றியமையாத பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று காலம் அறிதல். ‘காலம் கண் போன்றது; கடமை பொன் போன்றது’ என்று கூறுவதும் அதனால்தான். காலமும், இடனும் அறிந்து செயல்பட்டால் நாம் எந்தச் செயலில் ஈடுபட்டாலும் வெற்றி கிட்டுவது உறுதி.
தொல்காப்பியர் கூறும் காலம்:
.தொல்காப்பியர் பொழுது என்பது பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும் என்கிறார். இளவேனிற்காலம், முதுவேனிற்காலம், கார்காலம், குளிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம் என்பவை பெரும் பொழுது எனவும், வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்பவை சிறுபொழுது எனவும் தமிழ் இலக்கணம் காலத்தை வரையறை செய்கிறது தொல்காப்பியம்.
ஆனால் வள்ளுவர் பார்வையில் காலம் என்பது பொழுதினை மட்டும் குறிக்காமல் உரிய காலம் என்னும் பரந்துபட்டப் பொருளில் சொல்லப்பட்டுள்ளது.
காலம் அறிந்து செயல்படு:
“பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது”
காக்கையையும். கோட்டானையும் உவமையாக கூறி காலத்தின் சிறப்பை முன்மொழிகிறார் வள்ளுவர்.
காக்கையை விடக் கோட்டான் வலிமை மிக்கது என்பது அனைவருக்கும் தெரியும். கோட்டானுக்குப் பகற்பொழுதில் பார்வை தெரியாது என்பதால் அதனைக் காக்கை பகலில் வென்று விடும். அதுபோல வேந்தர்கள் பகையை வெல்ல வேண்டுமானால் தகுந்த காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் வெற்றி பெற வேண்டுமாஏற்ற காலம் பார்த்து செயல்படுங்கள் என்று சொல்லித் தருகிறார் வள்ளுவர்.
காலம் அறியாதவர் கற்ற பாடம்:இரண்டாம் உலகப் போரில் சர்வாதிகாரி ஹிட்லரின் தோல்விக்குக் காரணம் கடுமையான பனிக்காலத்தில் சோவியத் நாட்டின் மேல் படையெடுத்ததுதான் என்று சொல்வார்கள் . குளிரைத் தாங்கும்படியான உபகரணங்கள் இல்லாமையால் பெரும் எண்ணிக்கையில் வீரர்கள் இறந்து போயினர். அதனால் ஹிட்லர் பெருந்தோல்வியை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று .இந்தத் தோல்வியின் காரணமாக உலகத்தையே வென்று ஒரு குடையின் கீழ் கொண்டு வரப் பேராசைப்பட்ட ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.எவ்வளவு படைபலமும் திறமையும் இருந்தாலும் காலமறிந்து செயல்படாவிட்டால் தோல்விதான் ஏற்படும்.
செல்வத்தைக் கட்டும் கயிறு:
செல்வத்தை நம்மைவிட்டு நீங்காமல் கட்டும் கயிறு ஒன்று உண்டென்றால் அதுவும் காலம்தான் என்கிறார் வள்ளுவர்.
“பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு”
என்ற குறட்பாவில் காலம் செல்வத்தை நம்மைவிட்டு நீங்க விடாமல் கட்டும் கயிறு என்ற உண்மை வலியுறுத்தப்பட்டுள்ளது.
'பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை . ஆதலால் 'செய்க பொருளை 'என்று சொல்லித்தந்த வள்ளுவர் அத்தகைய செல்வத்தை நீங்காமல் கட்டும் கயிறாக இருப்பது காலம் என்று சொல்லித் தந்து,பொருள் சேர்க்கத் தெரிந்தது போல் அது கைவிட்டுச் போகாத படியும் பார்த்துக்கொள்ள 'பருவத்தோடுஒட்ட ஒழுகல்’ எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்கிறார்.
கருவியாற் காலமறிந்து செய்க:
“அருவினை யென்ப உளவோ கருவியாற்
கால மறிந்து செயின்”
என்ற குறளில் காலத்தோடு கருவியையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்கிறார் வள்ளுவர்.‘ஒரு செயலை செய்து முடித்தற்கான கருவிகளுடனே செய்தற்கான காலமும் அறிந்து செய்வாராயின் செய்தற்கரிய செயல்களும் உளவோ?’ என்று நம்மைப் பார்த்து வினவுகிறார் வள்ளுவர். அப்படியானால் காலம் அறிந்தால் மட்டும் போதாது.காலத்தோடு
கருவியையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்கிறார் என்பது புரிகிறது.
காலமும் இடமும்:
“ஞாலம் கருதினம் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்”
என்ற குறளில் காலத்தோடு இடத்தையும் சேர்த்துக் கொள்ளுகிறார். செய்யும் செயலை காலமறிந்து இடத்தோடு பொருந்தச் செய்தால் உலகத்தையே வெல்லக் கருதினும் கைகூடும் என்பதுவள்ளுவர் கருத்து.இதனையே ‘இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படுக "என்று நம் முன்னோர் சொல்லித் தந்தனர்." ஞாலம் கருதினும் கைகூடும்’ என்பது உலகமே கைகூடும் என்பதால் மற்றவற்றைப் பற்றியும் கூறவேண்டுமோ?’ என்பது இதனால் பெறப்படும் கருத்தாக உள்ளது.
அறிவியலாளர் ஆர்க்கிமிடிஸ் ,
“நான் நிற்பதற்கு ஓர் இடத்தைத் தாருங்கள். உலகமாகிய இந்தப் பூமிப்பந்தை நெம்புகோல் மூலம் புரட்டிக் காட்டுகிறேன்...” என்று அறைகூவல் விடுத்தார் .
இதன்மூலம் காலமும், இடமும் வாய்க்கப் பெற்றால் இயலாத செயல் என்று ஏதுமில்லை என்பது பெறப்படுகிறது.
ஞாலத்தைக் கைகூட வைக்கும் காலம்:
“காலம் கருதி யிருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்”
உலகத்தைக் கொள்ளக் கருதுகின்றவர் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக் காத்திருப்பவர்.
“பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்”
அதாவது அறிவுடையார் பகைவர் தீங்கு செய்த அப்போதே புறத்தில் சினம் கொள்ள மாட்டார். வெல்வதற்கு ஏற்ற காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வர் தகுந்த காலம் வரும் வரை சினத்தைக்கூட உள்ளுக்குள்ளேயே மறைத்து வைக்கவேண்டும்
‘நாள் செய்வது நல்லோர் செய்யார்’ என்பது பழமொழி. காலம் நாம் எதிர்பாராத பல முடிவுகளைக் கொண்டுவரும் என்பதுஇதன்மூலம் தெரிகிறது.
காலம் வரும் காத்திரு:
“எய்தற் கரிய(து) இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்”
கிடைத்தற்கரிய காலம் வந்து வாய்க்குமானால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரிய செயல்களைச் செய்ய வேண்டும்.
“கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து”
பொறுத்திருக்கும் காலத்தில் கொக்கினைப் போல அமைதியாக இருக்க வேண்டும்.
ஆறு, ஏரி முதலிய நீர்நிலைகளில்
மீன்கள் வரக் கண்டதும் கொக்கானது தன் இலக்குத் தவறாமல் விரைந்து தனது கூரிய அலகுகளால் குத்திப் பிடிக்கும்.
இதையே ஔவையும்,
"ஓடுமீன் ஓட உருமீன் வருமளவும்
வாடி யிருக்குமாம் கொக்கு”என்பார்.
முடிவுரை:.
“காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும் அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தை விட அது பெரிதாகும் . அதனால்தான் "உலகம் மெச்ச உலகத்தைத் தன்வசப்படுத்த வேண்டுமா காலம் அறிந்து செயல்படுங்கள்"
இதுதான் வள்ளுவர் சொல்லித் தந்தப் பாடம்.
Comments
Post a Comment