ஆசிரியர்கள் சங்கமம்

ஆசிரியர்கள் சங்கமம் 



 

அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் 

வணக்கம்.


இப்படியொரு மகிழ்ச்சியான

தருணத்தில் தங்கள் அனைவரையும் 

பார்த்துப் பேசி

மகிழ்ச்சியைப் பறிமாறிக்கொள்ள

வாய்ப்பளித்த விழா குழுவினருக்கு

முதலாவது வணக்கமும் வாழ்த்தும்

சொல்லி மகிழ்கின்றேன் 



ஓய்வும் பணியும்

ஓரிடத்தில் கூடுகை

உவகையால் உள்ளத்தில்

ஒலித்ததோர்  பேரிகை

மகிழ்ச்சியால் மனதில்

எழும்பியது ஓர்

ஆனந்த மாளிகை


பணி செய்த நாட்கள்

அணிசெய்  நிகழ்வுகள்

நனிமிகு உரையாடல்கள்

கவின்மிகு காட்சிகளாய்க் 

கண்முன் விரிகின்றன

கதைபேசி மகிழ்கின்றன

கவிதைகளாய் 

சத்தமில்லாமல் 

முத்தமிட்டு

உவக்க வைக்கின்றன


மலரும் நினைவுகளில்

மனதை பறிகொடுக்க வைத்து

மகிழ்ச்சியாய்க்

கும்மாளமிடுகின்றன

கண்கள் நல்விசாரிப்பு நடத்த

உதடுகள் மெல்ல

ஒத்திகை நடத்தி

ஒய்யாரப் புன்னகையை

உள்ளங்களோடு

பரிமாற்றம் செய்கின்றன


உப்பரிகையில் நின்று

ஒய்யாரமாய் உலகைக் காணும்

தேவதையின் மனநிலையில்

கால்கள் தரையில் 

ஊன்ற மறுக்கின்றன

எண்ணங்கள் வண்ணக்

கொடிபிடித்து 

களிற்றின்மேல் ஏறி

அணிவகுப்பு நடத்துகின்றன

ஏனிந்த மகிழ்ச்சி?

எதற்காக இந்த 

ஐராவத ஊர்வலம்?

ஒன்றும் புரியவில்லை 

ஊமையாய்ச் சிரிக்கின்றேன்


காலம் வரைந்துவிட்ட 

அனுபவக்கோடுகள்

சித்திரக்கோடுகளாய்

கோலம் செய்ய

தலையெங்கும் 

வேய்ந்து வைத்த

வெள்ளிக்கோடுகள்

கூடுதல் அணியம்செய்

முகம் கண்டு

உவக்கிறேன்

உள்ளம் மகிழ்கிறேன்


கல்வெட்டுகளாய் 

மாநகராட்சி எங்கும்

கால் தடங்கள் 

ஆளுக்கொரு கதை எழுதி

அரங்கேற்றம் செய்தது

அங்கங்கே தெரிகிறது


விருது வழங்கும் விழா -இது எம்மை

 வியக்க வைத்த விழா 

உள்ளுந்தோறும்

உவக்க வைத்த விழா

பருவத்தில் வந்த வசந்தவிழா  

உள்ளுக்குள் பழுத்ததின்று 

தித்திக்கும் வேர்ப்பலா


உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்". 

என்ற குறள் நமக்காக

எழுப்பட்டதோ என்று வியக்கின்றேன்

 மகிழ்ச்சியாகப் பழகினோம்

 பிரியும் போது கலங்கினோம் அறிவுடையோர் யாரென்று 

மெய்ப்பித்தோம்


விருது வாங்கிய

 ஆசிரியர்களுக்கு

பூமாலை தந்தேன்

வாங்கக் காத்திருக்கும் 

ஆசிரியர்களுக்கு

வாழ்த்தொன்று வரைந்து

மென்கரம் தந்தேன்

பலமுறை இந்நிகழ்வு 

நடைபெற வேண்டுமென

வாய்தா கேட்டு உங்கள் முன் 

நிற்கின்றேன



இப்படியொரு கூடுகையை

ஏற்பாடு செய்து

நம்மைப் பழைய நினைவில் 

மகிழ வைத்த 

அன்பு நண்பர்களுக்கு நன்றி.

காலம் இன்னொரு கூடுகையில்

நம்மை ஒன்று சேர்க்கட்டும்.

இறையருள் அதுவரை நம்மை 

வழிநடத்தட்டும்.


அனைவர்க்கும் அன்பும்

 நன்றியும்

நன்றி..... வணக்கம்.
















Comments