ஆசுகவி என்றால் என்ன
ஆசுகவி என்றால் என்ன
என்று கேட்டுக் கொண்டதும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் உடனே பாடுவது ஆசுகவி எனப்படும் .
ஆசுகவி பாடுவதற்கு என்று பல புலவர்கள் இருந்தாலும்
அவர்களுள் கவி காளமேகம் குறிப்பிடத் தகுந்தவராவார் .
பருவத்தில் பொழியும் மழை போல அல்லாமல் உடனுக்குடன் கருக்கொண்டதும் பொழியும் மேகம் போல விரைந்து கவி பாடும் ஆற்றல் காளமேகப் புலவரிடம் உண்டு.
இவர் நாற்கவியிலும் பாடும் புலமையுடையவர். இவருடைய பாடல்கள் சொற்சுவை, பொருட்சுவை கொண்டவையாக இருக்கும்.
இத்தகைய தனித்தன்மை காளமேகப் புலவரிடம் இருந்ததால் அவர் "அதிமதுரக்கவி' என அழைக்கப்பட்டார்.
எப்போதும் ஒருவருடைய திறமையை மற்றொருவருடைய மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கும்.
அவர் ஒன்றும் அப்படியொரு புமமைமிக்கவரல்ல என்பதை நாலுபேர் மத்தியில் மெய்ப்பித்துவிட வேண்டும் என்று மனம் துடியாய்த் துடிக்கும்.
அதனால் சாத்தியமில்லாதது என்று நினைக்கும் ஒரு எழுத்தையோ, சொல்லையோ, சொற்றொடரையோ கொடுத்து
ஒரு பாடல் பாடுக என்று கேட்டு மடக்க நினைப்பர்.
இப்படி ஒருவர்க்கு ஒரு குதர்க்கமான ஆசை.
"ஈ ஏற மலை குலுங்கியது' என்பதாக உடனே ஒரு பாடல் பாடுக எனக் கேட்டுக் கொண்டார் .
ஈ ஏற மலை குலுங்குமா?
இது சாத்தியமா?
சாத்தியமில்லாததைச் சாத்தியமாக்குவதில்தான்
காளமேகத்தின் புலமையே இருக்கிறது.
கேட்டதுதான் தாமதம்.கார் மேகம் கருக்க
கவி மழை பொழிய ஆரம்பித்தது.
பாடல் இதோ உங்களுக்காக...
"வாரணங்கள் எட்டும் மாமேரு வும்கடலும்தாரணியும் எல்லாம் சலித்தனவாம்-நாரணனைப்பண்வாய் இடைச்சி பருமத்தி னாலடித்தபுண்வாயில் ஈமொய்த்த போது!'
"வெண்ணெய்த் திருடிய கண்ணனை ஆயர்குல இடைச்சிப் பெண் ஒருத்தி மத்தால் அடிக்க, ஏற்பட்ட புண்ணில் ஈ மொய்த்ததாம். இதனால் அண்ட சராசரம் என்று அழைக்கப்படும் பலமிக்க யானை போன்ற எட்டுத் திசைகளை உள்ளடக்கிய கடலும் மாமேரு மலைகளும் குலுங்கினவாம்."
பாடலில் பொருள் உண்டு . புராணம் உண்டு.
கவி நயமும் உண்டு. வேறென்ன வேண்டும் என்பதுபோல கேட்டவரை நிமிர்ந்து பார்த்தார் காளமேகம்.
இனி கேட்டவர் காளமேகம் முன்னர் வருவாரா என்ன?
இந்தப்பாடல் பாடியதின் மூலம்
காளமேகம் ஆசுகவி ஆனார்.
பாண்டியன் பிரம்பினால் சிவனை அடித்தபோது அந்த அடி, உலக உயிர்கள் அனைத்தின் மீதும் பட்டதாக திருவிளையாடல் புராணத்தில் பாடப்பட்டது போன்ற பாடல் இது.
ஈயேற மலையைக் குலுங்க வைத்து
காளமேகம் அனைவர் மனதிலும் 'ஆசுகவி" என்ற சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டார்.
Comments
Post a Comment