மாலைமாற்று என்றால் என்ன

மாலை மாற்று என்றால் என்ன 


சித்திரக் கவி வகைகளுள் ஒன்று மாலை மாற்று எனப்படும் ."மாலை மாற்று" என்பது, ஒரு பாடல் அல்லது சொற்றொடரை முன்புறமாகப் படித்தாலும் பின்புறமாகப் படித்தாலும் ஒரே மாதிரியாக இருக்கும் ஒரு வகைச் சொல்விளையாட்டு ஆகும். இதனைத் தமிழில் "இருவழியொக்கும் சொல்" என்றும் கூறுவர்.

மாலை மாற்று இலக்கணம்:

"ஒருசெயுண் முதலீ றுரைக்கினு மஃதாய்
வருவதை மாலை மாற்றென மொழிப"

என்று மாலை மாற்றுக்கு இலக்கணம் கூறுகிறது மாறனலங்காரம் என்ற இலக்கண நூல்.

மாலையைப் போல் முதலிருந்து துவங்கி இறுதிவரை வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் வரிசை மாறாமல் ஒன்று போன்றே இருப்பது மாலை மாற்று

"இறுதி முதலாக வெடுத்து வாசிப்பினு
மதுவே யாவது மாலை மாற்றாகும்”

- என்கிறது முத்துவீரியம் என்ற இலக்கண நூல்.

பொதுவாக ‘மாலை மாற்று’ குறள் வெண்பாவால் இரண்டு அடிகளிலேயே பாடப்படும்.

திருஞானசம்பந்தர் பாடல்

ஒன்று மாலை மாற்றுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

"யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா"

-  திருஞான சம்பந்தர்


இதனை முதலிருந்து தொடங்கி வாசித்தாலும், இறுதியிலிருந்து தொடங்கி வாசித்தாலும் ஒன்றுபோலவே தொடங்கி முடியும்.


 பொருள்: 

யாம் - சிற்றுயிர்கள் ஆகிய நாங்கள்

 ஆமா - கடவுள் என்பது பொருந்துமோ

நீ - நீ ஒருவனுமே கடவுள் என்றல்

 ஆம் ஆம் - பொருந்தும்; பொருந்தும்

மா - பெரிய 

யாழீ - யாழை ஏந்தி இருப்பவனே

காமா - அனைவராலும் விரும்பப்படுபவனே 

காண் நாகா- காணத் தகுந்தவாறு பாம்புகளை அணிந்து உள்ளவனே

காணா - காண முடியாதவாறு

காமா - மன்மதனை அனங்கனாகச் செய்தவனே

காழீயா - சீர்காழிக்குத் தலைவனே; மாமாயா - பெரிய மாயைகளைச் செய்தலில் வல்லவனே

மா - கரிய கொடிய;

மாயா - மாயையினின்றும் 

நீ - எம்மை நீக்கிக் காத்து அருள்வாயாக.


விளக்கம் 


சிற்றுயிர்களாகிய  நாங்கள் கடவுள் என்பது பொருந்துமோ? 

நீ ஒருவன் மட்டுமே கடவுள் என்றல் பொருந்தும்.

பெரிய யாழைக் கையில் ஏந்தி இருப்பவனே

அனைவராலும் விரும்பப்படுபவனே, காணத் தகுந்தவாறு பாம்புகளை அணிந்து உள்ளவனே, 

காண முடியாதவாறு மன்மதனை அனங்கனாகச் செய்தவனே,

சீர்காழிக்குத் தலைவனே, பெரிய மாயைகளைச் செய்தலில் வல்லவனே, கரிய கொடிய மாயையினின்றும் நீ எம்மைக் காத்து அருள்வாயாக.


மாலை மாற்று சொற்கள்


விகடகவி

காக்கா

பாப்பா

மாமா

தாத்தா:

திகதி

குடகு

தேருவருதே

மேகமே

மாலாபோலாமா

துவளுவது

வா தாத்தா வா

மாவடு போடுவமா

கைரேகை

தேருவருதே


இந்தச் சொற்களை வாசித்துப் பார்த்தால் மாலைமாற்றுப் பற்றிய தெளிவான புரிதல் ஏற்படும்.


இந்த வகைச் சொல் விளையாட்டினை ஆங்கிலத்தில் palindrome என்று அழைப்பர்.


தமிழ் சினிமாவிலும் இந்த மாலை மாற்றுப் பாடல் உள்ளது.

மதன் கார்க்கி எழுதிய முதல் மாலைமாற்றுப் பாடல் வினோதன் திரைப்படத்தில் இடம்பெற்ற "மேகராகமே மேளதாளமே" பாடல் ஆகும். இது தமிழ் திரைப்பாடல்களிலேயே முதல் மாலைமாற்றுப் பாடல்  என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

பாடல் உங்களுக்காக:


மேக ராகமே

மேள தாளமே

தாரா ராதா


கால பாலகா

வாத மாதவா

ராமா மாரா


மாறுமா கைரேகை மாறுமா

மாயமா நீ நீ நீ மாயமா


தோணாதோ

கான கனகா


வான கனவா

வாச நெசவா

மோகமோ

மோனமோ


பூ தந்த பூ

தீ தித்தி தீ

வா கற்க வா


போ சீ சீ போ

தேயாதே

வேல நிலவே


மேக ராகமே

மேள தாளமே

...முழு பாடலையும் கேட்டு 

மகிழுங்கள்.


Comments