உலக அமைதிக்காக
உலக அமைதிக்காக
அமைதி இல்லா உலகில் நிம்மதி
இல்லை. நிம்மதி இல்லா மனதில்
மகிழ்ச்சி இல்லை.
அமைதி இருக்குமிடத்தில்தான்
நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.
அமைதி எப்போது வரும்?
புயலுக்குப் பின்னர் வருவதுதான் அமைதி.
அப்படியானால் பெரும் போராட்டத்திற்குப்
பின் வருவது அமைதி.
அல்லது போருக்குப் பின்னர் வருவது அமைதி
என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
அமைதியை விரும்பாதோர் எவரேனும்
உண்டோ!
சாதிச் சண்டை .சமய இனக் கலவரங்கள்.
தனிமனிதப் போராட்டம்.
திரும்பிய பக்கம் எல்லாம் அமைதி
இல்லாச் சூழ்நிலை.
மக்களிடையே பகை.
குடும்பங்களுக்கு
இடையே பகைமை உணர்வு.
நாளை என்ன நடைபெறுமோ என்ற அச்சம்.
இப்படி திகிலும் பயமும் திருப்பமுமாக நாட்கள்
கடந்து கொண்டிருக்கின்றன.
மனம் எங்கே அமைதி....எங்கே அமைதி
என்று ஏக்கத்தோடு ஒவ்வொரு நாளின் நகர்வுகளையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
அமைதியைத் தேடி ஆன்மீகத் தலங்களை
நோக்கி ஓட வைக்கிறது.
யாராவது ஆறுதலாக நாலு வார்த்தை
சொல்லிவிட மாட்டார்களா என்று மனம் ஏங்கிக்கிடக்கிறது.
மனம் கலங்கிவிட்டால்...
உடல் நலம் கெடும்.
தூக்கம் தொலைந்து போகும்.
நிம்மதி காணாமல் போய்விடும்.
உலகப் போரின் போது இப்படி உடல்நலம் கெட்டு அமைதி இழந்து
தனது சந்ததியினரும் அழிந்துபோன
பல குடும்பங்கள் உலகம்
முழுவதும் உண்டு.
முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள்
உலக நாடுகள் அனைத்தையும்
அமைதியற்றதாக ,நிம்மதியற்றதாக மாற்றியது என்பது வரலாறு.
அந்தக் காயமும் வடுவும் இன்றுவரை
கண்முன்னர் வந்து திகிலூட்டிக் கொண்டிருப்பது என்பது உண்மை.
இரண்டாம் உலகப் போரில் ஐப்பானின்
ஹிரோசிமா ,நாகசாகி என்ற நகரங்களில்
வீசப்பட்ட அணுக்குண்டு உலகையே ஸ்தம்பிக்க வைத்தது.
மக்கள் வாழ்வையே உருக்குலைய வைத்தது.எதிர்கால சந்ததியினரின் வாழ்வையே கேள்விக்குறியாக்கியது.
அப்படிப் பாதிக்கப் பட்ட சிறுமிகளுள் ஒருத்தியின் கதை உலகம்
வரை நினைவில் இருக்கும்.
இரண்டாம் உலகப்போர் நடந்த நேரம்.
அணுக்குண்டு வீசப்பட்டப்போது
சசாகி என்ற அந்தக் குழந்தைக்கு வயது இரண்டு.அணுக்குண்டு
வீச்சில் இருந்து எப்படியோ பிழைத்துக் கொண்டாள்.
எனினும் அந்த மகிழ்ச்சி கடைசிவரை
நிலைத்திருக்கவில்லை.அவள் தனது பதினோராம் வயதில்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டாள்.
புற்று நோய்க்கான காரணம் என்ன என்று மருத்துவர்கள்
ஆராய்ந்தபோது அதிர்ந்து போயினர்.
அணுக்குண்டு வீச்சின்போது வெளியான
கதிர் வீச்சால்தான் சசாகிக்குப் புற்றுநோய் வந்துள்ளது என்ற உண்மை தெரிய வந்தது.
மருத்துவ உலகமே அதிர்ந்து போனது.
அந்தச் சிறுமிக்கு இந்தச் செய்தி தெரிய வர கலங்கிப் போனாள்.கண்ணீர் விட்டு கதறி அழுதாள். நான் என்ன பாவம் செய்தேன்.? ஏன் எனக்கு இந்தத் தண்டனை கொடுத்தாய் ?என்று கடவுளிடம் கேள்விகள் கேட்டாள்.
பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருக்கும் அனைவரும் மௌனமாகிப் போயினர்.
யார் யாருக்கோ நடந்த சண்டையில்
அப்பாவி நான் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்?
எனக்கு ஏன் இந்தப் பாதிப்பு வர
வேண்டும்?.
சசாகியின் அத்தனை கேள்விகளும்
நியாயமானவை.
எப்படியாவது பிழைத்துவிட வேண்டும்
என்று அந்தக் குழந்தைக்கு ஆசை.
என்னைப்போல் இன்னொரு குழந்தை பாதிக்கப்
பட்டுவிடக் கூடாதே என்ற ஆதங்கம்.
உலகம் அமைதியாக இயங்கிக் கொண்டிருந்தால்
தனக்கு இந்தக் கொடுமை வந்திருக்காதே என்ற நினைப்பு வர மனம் எங்கெங்கோ ஓடியது.
அப்போதுதான் ஆயிரம் காகிதக் கொக்கு செய்து இறைவன் முன் படைத்தால் இறைவன் நம் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்
என்ற ஜப்பானியர்களின் இறை நம்பிக்கை நினைவுக்கு வந்து
மெல்ல ஆசை காட்டியது.
இந்த வேளையில் சசாகியின் நண்பன்
மருத்துவமனையில் இருக்கும்
தனது தோழியைப் பார்க்க வருகிறான்.
கையில் தான் செய்து கொண்டுவந்த
காகிதக் கொக்கைக் கொடுத்துவிட்டுச் செல்கிறான்.
இப்போது சசாகி மனதில் ஆயிரம் கொக்குகள்
செய்து இறைவன் முன் படைத்துவிட்டால் தானும் பிழைத்துவிடலாம்
என்ற ஒரு நம்பிக்கை தீவிரமாக
ஓட ஆரம்பித்தது.
உடனே காகிதங்கள் வாங்கி
அந்த நம்பிக்கையோடு
காகிதக் கொக்குகள் செய்ய
ஆரம்பிக்கிறாள்.நாளும் இருபது
கொக்குகளாவது
செய்துவிட வேண்டும் என்ற தீர்மானத்தோடு
மிகவும் ஆர்வமாக செய்து கொண்டிருந்தாள்.
நாளாக ஆக உடலில் தளர்ச்சி ஏற்பட்டு
கொக்குகளின் எண்ணிக்கை
குறைந்து கொண்டே வந்தது.
ஒருகட்டத்தில் சோர்ந்தே போய்
கொக்குகள் செய்ய முடியாமல் போய்விட்டது.
646 கொக்குகள் மட்டுமே அவளால்
செய்ய முடிந்தது.
அதற்குள் மரித்துப் போய் விடுகிறாள்
யாதுமறியா சசாகி.
செய்தி அறிந்த தோழிகள் எல்லோரும் அழுகின்றனர். உறவுகள் கண்ணீர்விட்டு
கதறினர்.
உலகம் சமாதானமாக இருக்க வேண்டும்.
தானும் உயிர்வாழ்ந்துவிட வேண்டும் என்று
எவ்வளவு நம்பிக்கையோடு கொக்குகளைச்
செய்து கொண்டிருந்தாள்.
கடைசியில் கடவுள்கூட கைவிட்டுவிட்டாரே!
என்று சொல்லிச்சொல்லி கதறினர்.
நாளை நமக்கும் இந்த நிலைமை வந்துவிடுமோ
என்ற அச்சம் வந்து செய்வதறியாது திகைத்தனர்.
தன் தோழியின் விருப்பத்தை நிறைவேற்ற
மீதமுள்ள கொக்குகளையும் செய்து
சமாதான வாசகங்களை எழுதி
இறைவனின் பாதங்களில் வைத்து
பிராத்தனை செய்தால் உலகில் அமைதி
நிலவும் என்று நம்பினர்.
தன் தோழியின் நினைவாக ஆயிரம் கொக்குகள் செய்து அதில் உலக அமைதிக்கான வாசகங்கள் எழுதப்பட்டு இறைவன் பாதத்தில் வைத்து பிராத்தனை செய்தனர்.
சசாகியின் நினைவாக ஏதாவது
செய்ய வேண்டும் என்று நினைத்த அரசு
அவளுக்கு நினைவிடம் ஒன்று அமைத்தது.
ஜப்பானிய மக்கள் இன்றும் அவள் நினைவு நாளில்
ஆயிரம் கொக்குகள் செய்து
அவள் நினைவிடத்தில் வைத்து
உலக அமைதிக்காக வேண்டுதல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனராம்.
சசாகியின் இந்தக் கொக்குதான் இன்று
உலகின் அமைதிக் குறியீடாக
மாறிப்போனது .
உலக நாடுகள் மத்தியில் மீண்டும்
இப்படியொரு போர் வராமல் இருக்க
வேண்டும் .உலக மக்கள் எல்லாம்
அமைதியாக இருக்க வேண்டும் என்ற ஒரு
பிஞ்சு உள்ளத்தின் ஏக்கம் ,வாஞ்சை
முளையிலேயே கருகிப் போனது.
சாந்தமாய் இருந்து பூமியைச் சுதந்தரித்துக்
கொள்ள வேண்டும் என்ற எண்ணம்
இல்லாததால் இன்றும் உலக நாடுகள்
அணு ஆயுதத்தைக் கையில் வைத்துக்
கொண்டு உலகையே அச்சுறுத்திக்
கொண்டிருக்கின்றன.
பாலஸ்தீனம், இஸ்ரேல்,உக்ரைன் , ரஷ்யா போன்ற நாட்டு
மக்கள் அச்சத்தோடு நாளைக் கடத்திக்கொண்டிருக்கின்றனர்,
காஸாவில் குழந்தைகள் உணவு
உடை உறையுள் இழந்து கதறுகின்றனர்.
பெற்றோரை இழந்து கண்ணீர் விடுகின்றனர்.
இவை எல்லாம் எதனால்?
யாருக்காக இந்த யுத்தம்?
யாரை திருப்திப் படுத்த இந்தப் பிஞ்சுகளின் உயிரோடு விளையாடுகின்றனர்.?
தலைவர்களிடையே தலைதூக்கி நிற்கும் நீயா நானா என்ற போட்டி மனப்பான்மை அப்பாவி மக்கள் வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருக்கிறது.
மறுபடியும் ஒரு உலகப்போர் தொடங்கிவிடுமோ என்ற அச்சம் உலக நாடுகளை கலங்க வைத்துக் கொண்டிருக்கிறது.
சசாகியைப்
போன்று இன்றும் பல குழந்தைகள்
கண்ணீரில் கரைந்து போவதைக்
கண்டும் கண்மூடி இருக்க வேண்டிய
நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம்.
இந்தப் பிஞ்சுகளின் கதறல் ஏக்கம்
உலகத் தலைவர்களின் இதயங்களை
அசைத்துப் பார்க்குமா?
தலைவர்கள் திருந்துவார்களா?
இந்த நாடுகளில் எல்லாம்
ஆயிரம் ஆயிரம் சசாகிகள்
காகிதக் கொக்குகளைச் செய்து
வைத்துக் கொண்டு அமைதியான வாழ்வு
வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்து
கொண்டுதான் இருக்கின்றனர்.
அவர்களின் வேண்டுதல்கள் கேட்கப்படுமா?
உலக தலைவர்கள்
உணரும் காலம்
வருமா?
காலம்தான் பதில் சொல்லும்.
Comments
Post a Comment