பாரி இறந்த கதை

பாரி இறந்த கதை

கடையேழு வள்ளல்கள் யார் யார்?

அவர்களின் சிறப்பு பெற்றதன் காரணம் என்ன?

அறிந்து கொள்ள வேண்டும் என்ற

 ஆசை இருக்கும்.


பாரி, ஓரி ,காரி,பேகன், அதியமான் ,ஆய்

இவர்கள் ஏழுபேரும் கடையேழு வள்ளல்கள் என்று சொல்லப்படுகின்றனர்.

அவர்களுள் முதன்மையானவன் முதல்தரமானவன் என்று பாரியைக் கொண்டாடுகிறோம்.

இந்தக் கொண்டாட்டங்களுக்குக்

காரணம் முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி என்று ஒற்றை வரியில் சொல்லி

கடந்து போய்விடுவோம்.


இந்த ஒரே ஒரு காரணத்திற்காகவா

பாரி வள்ளல்களுள் முதன்மை வரிசையில்

வைத்துக் கொண்டாடப்படுகிறான்.



இதைவிடப் பெரிய அளவில் உதவுகிற

புரவலர்கள் இல்லையா?

வாரி வாரி வழங்கும் வள்ளல்கள் இல்லையா?


எனக்குள் ஒரு தேடல்.


முல்லைக்குத் தேர் கொடுத்த அந்த

வள்ளலைப் பார்த்துவிட வேண்டும்.

பார்த்து ஓரிரு கேள்விகளுக்கு விடை கண்டு வந்துவிட வேண்டும் என்ற ஆசையில் இதயத்தில் சுமந்த கேள்விகளோடு நடந்தேன். இடையில் கண்ணில் பட்டது ஒரு முல்லைக்கொடி.

அருகினில் சென்றேன் .முல்லைக்கொடி படர

கொழுகொம்பில்லாது அருகில் இருந்த

கள்ளிச் செடியோடு கை கோர்த்து

கம்பீரமாக நின்றது. 


பாரி பார்த்த முல்லைக்கொடிக்கு

அடித்த நற்பேறு இந்த முல்லைக்கொடிக்குக் கிடைக்காமல்

போயிற்று என்று பரிதாபப்பட்டுக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன்.


அப்போது கபிலர் என்றொரு புலவர்

நினைப்பு குறுக்கே வர 

கவனச் சிதறலாய்க் கணப்பொழுது நினைவில் சிறு தடுமாற்றம்.

தடுமாற்றத்தால் ஏற்பட்ட தடமாற்றம். 


தடமாற்றத்தில் நினைவில் மடைமாற்றம் 

நிகழ்ந்துவிடாதபடி  சிந்தையை ஒருங்கிணைத்து

ஏதாவது கூடுதல் தகவல் கிடைக்குமா என்ற நப்பாசையில் கால் போன போக்கில் 

நடந்தேன்.

எனது ஆசை நிராசையாகவில்லை.


அப்போது,


பாரி பாரி என்று பல ஏத்தி

ஒருவர்ப் புகழ்வர் செந்நாப் புலவர்

பாரி ஒருவனும் அல்லன்

மாரியும் உண்டு

ஈண்டு உலகு புரப்பதுவே

         புறநானூறு - 134



என்ற கபிலரின் பாடல்

செவிப்பறையில் முட்டி மோதிய

நாட்கள் நினைவலைகளாய்

நெஞ்சோடு இனித்தன.

என்னை அந்த இடத்திலேயே நிற்க

வைத்தன.

நிமிர்ந்து பார்க்க வைத்தன.


பாரி பாரி என்று புகழ்கிறீர்களே

பாரி ஒருவன் மட்டும் தான்

வள்ளலா? மாரி இல்லையா? என்ற

கேள்வியைக் கேட்க வைத்து

வஞ்சகப் புகழ்ச்சியாகப் பாடி 

மாரிக்கு ஒப்பானவன் இந்த உலகில் வேறு ஒருவனும் இல்லை.பாரி ஒருவன் மட்டுமே

வள்ளல் என்று முறியோலை எழுதித் தந்தவராயிற்றே

கபிலர் .


இந்தக் கபிலரைக் கண்டுவிட வேண்டும்.

கண்டு ஏன்....ஏன் இப்படிச் செய்தீர் என்று

கேட்டுவிட‌ வேண்டும்.

காலங்காலமாக கபிலர் சுமந்து நிற்கும்

பழியைத் துடைத்துவிட  ஒரு காரணம்

கிடைத்துவிட வேண்டும் என்ற ஏக்கம் என்

இதயத்தைக் கனக்க வைத்தது.

பாரத்தை இறக்கி வைத்து

என் கருத்தினைப்

பகிர்ந்து  கொள்ள வழி தேடினேன்.

 தேடலில் கிடைத்த பாடல் வரிகள் 

என்னைச் 

சிந்திக்க வைத்தது.


கபிலர் எந்தத் தவறும் செய்யவில்லையே.

பின்னர் ஏன் அவருக்கு அப்படியொரு

குற்ற உணர்வு?


நல்ல நோக்கில் எழுதப்பட்ட பாடல்

தவறாகப் பயன் படுத்தப்பட்டது.

ஒரு வள்ளலின் உயர்ந்த பண்பை

பறம்பு நாட்டின் வளமையை

இதைவிட சிறப்பாக யாராலும் சொல்லிவிட

முடியாது.

அவர் கண்ட காட்சியை

பாரியின் வீரத்தை அழகாகப் பாடிய

கபிலர் அத்தோடு விட்டிருந்தால் 

பாரி இறக்க நேரிட்டிருக்காது.

கபிலரும் குற்றவுணர்வில் உயிரை

மாய்த்துக்கொள்ள நேரிட்டிருக்காது.

.


பாரியை வெற்றி கொள்ள வேண்டுமானால்

அவர் இதயத்தில் இடம்பிடிக்க வேண்டும்.

அதற்கு அவன் ஒரு பாணனாய் இருக்க வேண்டும்.

பாணர்களுக்காக எதை வேண்டுமாலும்

கொடுப்பார் எம் பாரி என்று 

பெருமிதத்தோடு சொல்லி வைத்ததுதான் தவறாகப் போய் முடிந்தது.

நல்ல நோக்கத்தோடு சொல்லப்பட்ட வரிகள்

துரோகிகளால்  தவறாக எடுத்துக்

கையாளப்பட்டுவிட்டன .

இதில் கபிலரின் தவறு எதுவுமே இல்லையே.


வஞ்சகர்கள்  பாணர்களாக மாறுவேடம்

பூண்டு ஆடிப்பாடி  பாரியின் இன்னுயிரைப்

பரிசில் ஆகத் தர வேண்டும் என்று கேட்க

இல்லை என்று சொல்லும் பழக்கம் இல்லா

பாரி தன் இன்னுயிரைப் பரிசிலாக  ஈந்து

வரலாற்றில் முதல் இடத்தைப் பிடித்துக் கொண்டான்.


வள்ளல்களுள் முதன்மை வரிசையில்

வைத்து கொண்டாடப்படுவதற்கு இதுவும்

ஒரு காரணமாக அமைந்திருக்கிறது.


இப்படி ஒரு நிகழ்வு நிகழக் காரணமாக

அமைந்த பாரியின் 

பாடல் இதோ உங்களுக்காக


"அளிதோ தானே, பாரியது பறம்பே;

நளிகொள் முரசின் மூவிரும் முற்றிலும்

உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே

ஒன்றே சிறியிலை வெதிரின்

நெல்விளை யும்மே

இரண்டே தீஞ்சுளைப் பலவின்

பழம் ஊழ்கும்மே

மூன்றே கொடுங்கொடி

வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே

நான்கே அணிநிற ஒரி

பாய்தலின்மீது திணிநெடுங்குன்றம்

தேன் சொரியும் மே

வான்கண் அன்று அவன் மலையே வானத்து

மீன்கண் அற்று அதன் சுனையை;ஆங்கு

மாந்தொறும் பிணித்த களிற்றின ராயினும்

புலந்தொறும் பரப்பிய தேரினர் ஆயினும்

தாளிறி கொள்ளலர்; வாளிற் றாரலன்

யான் அறிகுவன் அது கொள்ளுமாறே

சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி

விரையொலி கூந்தல்நும்

விரலியர் பின்வர

ஆடினிர் பாடினிர் செலினே

நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே "

என்று பாடினார்.


அதாவது பாரியின் பறம்புமலை

வானத்தைப் போன்று பரந்து

அகன்று உயர்ந்தது. அதிலுள்ள நீர்ச்சுனைகள் விண்மீன்கள் போன்றன.

பறம்புமலையிலுள்ள மரங்களில்

நீங்கள் மரங்கள் தோறும் யானைகள் கட்டினாலும் அங்குள்ள நிலப்பரப்பு

முழுவதும் தேர் அதாவது குதிரைப்படையைக் கொண்டு நிறுத்தினாலும் உங்களால் பறம்புமலையைப் பெற்றுவிட முடியாது.

வாளால் நேருக்குநேர் போரிட நேரிட்டாலும்

அவன் பறம்புமலையை உங்களுக்கு விட்டுத்தர மாட்டான்.பறம்புமலையைப் பெறக்கூடிய வழியை நான் அறிவேன்.

தொய்வற்றதும் முறுக்கப்பட்டதுமான

சிறிய யாழ் ஒன்றைச் செய்து அதை மீட்டி,

மணமிக்க தழைத்த கூந்தலையுடைய விரலியர் பின்தொடர ஆடியும் பாடியும் சென்றால் பாரி பறம்பு மலையை உங்களுக்குப் பரிசிலாக அளிப்பான்"

என்றார்.

அதாவது உங்களால் போரிட்டு வெற்றிபெற்று பறம்புமலையைப் பெற்றுவிட

முடியாது.பாணர்களுக்குப் பரிசிலாக

பாரி பறம்பு மலையைத் கொடுத்தாலும்

கொடுப்பானே தவிர போரில் விட்டுக்

கொடுக்கமாட்டான்

என்கிறது கபிலரின் பாடல்.


பாடலைக் கேட்ட மூவேந்தர்களின்

குறுக்குப் புத்தி குதர்க்கமாக

திட்டம்போட ஆரம்பித்தது.

நாமும் பாணராகப் போனால் என்ன?

பாணராகப்போய்ப் பரிசிலாக

பறம்பு நாட்டைப் பெற்று வரலாம்

என்று சாதாரணமாக நினைக்கவில்லை.

அவர்கள் திட்டமே தங்களுக்குப் பெண் தர

மறுத்த பாரியை அழிக்க வேண்டும்  என்பதுதான்.திட்டம்.

பாணர்கள் போன்று மாறுவேடம் பூண்டு

விரலியர்கள் சூழ ஆடிப்பாடி மூவேந்தர்கள்

அரண்மனைக்குள் சென்றனர்.

அவர்களைப் பாணர்கள் என நினைத்த பாரி

கலைஞர்களின் கலையில் தன்னை மறந்தான்.தங்களுக்கு பரிசிலாக என்ன வேண்டும் என்று கேட்டான். வஞ்சகர்களான மூவேந்தரும்

உங்கள் உயிர் வேண்டும் என்கின்றனர்.

ஒரு கணம் அதிர்ச்சியுற்றாலும்

பாணர்கள் கேட்டு எதுவும் இல்லை என்று சொல்லியதில்லை இப்போதும் அப்படியே

நடந்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான்.


உயிர் இருக்கிறது.

வேண்டும் என்கின்றனர்.

எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறார் பாரி.

வஞ்சகர்கள் கொஞ்சமும் தயக்கமில்லாமல்

பாரியைக் கொன்று பறம்பு மலையையும்

கைப்பற்றினர்.

இதுதான் பாரி வஞ்சகர்களால் வீழ்ந்த கதை.

இதில் கபிலர் தன் பாடலில் 

பாரியை வெற்றி பெற வேண்டுமானால் இதைச் செய்ய வேண்டும் என்ற

கருத்து மூவேந்தர்களுக்குத் துணையாக இருந்திருக்கிறது.


நான் எழுதிய பாடலல்லவோ

பாரியின் உயிர் போக காரணமாக இருந்திருக்கிறது என்ற குற்ற உணர்வு

கபிலரை கொல்லாமல் கொன்றிருக்கிறது.

அதனால் அவர் வடக்கிருந்து உயிர் நீத்தார் என்பது வரலாறு.

தெரிந்தோ தெரியாமலோ பாரி இறப்புக்குக் கபிலரும் ஒரு காரணம் என்று கூறுவதற்கு இந்தப் பாடல்தான் காரணம்.














Comments