சுழிகுளம் என்றால் என்ன
சுழி குளம் என்றால் என்ன
சுழிகுளம் என்பது சித்திர கவி
வகைகளுள் ஒன்றாகும். குளத்தில் எறியப்படும் கல் சுழிசுழியாய் அலைகளைத் தோற்றுவிப்பதைப் போலச் சுழி அமைப்பில் வரையப்படும் சித்திரம் ஒன்றில் உரிய முறையில் எழுத்துகளைப் பொருத்தி இயற்றப்பெறும் செய்யுள்
சுழி குளம் எனப்படும்.
சுழிகுளத்துக்கான இலக்கணமாவது
"தெழித்துஎழு நீர்குளத் தினுள்செறித் ததைக்கொடு
சுழித்துஅடங் குவபோன்று அடங்குதல் சுழிகுளம்"
என்கிறது மாறனலங்காரம், 295 வது பாடல்.
எட்டுட்டெழுத்துக் கொண்ட நான்கு அடிச் செய்யுளாய், மேலிருந்து கீழேயும், கீழிருந்து மேலேறியும் புறம் சென்றும் முடியும்படி படிக்கத் தக்க வகையில் பாடப்படுவது சுழி குளம் என சாமிநாதம் கூறுகிறது
ஓர்பாட்டு எவ்வெட்டுஎழுத் தாய் நால்வரி இட்டு
ஒழுங்குகி ழ்மேல் மேல்கிழ்புறம் புறம்பார்க்கி னும்
பாட்டு ஒத்தல் சுழி குளம் (சுவாமிநாதம், 197)
எடுத்துக்காட்டுகள்
சித்திரகவிக் களஞ்சியம், தமிழ் இணைய கல்விக் கழகம்
எடுத்துக்காட்டு-1
மதிமதி மாமா வாவா
திதிதிதி சேயே யோவா
மதியமு மாசே யேமா
திதிமுரு காமா சேமா (பாம்பன் சுவாமிகள், சித்திரகவிகள், ப. 30)
வாசிக்கும் முறை: இடதுபுற முனையில் முதலெழுத்தைத் தொடங்கி, கீழிறங்கி, சுழியின்வழியே வலப்புறம் சென்று மேலேறி, இவ்வாறே சுழிவழியாக ஏனைய எழுத்துகளையும் படிக்கச் செய்யுள் நிறைவடையும்.
மதிமதி - அறிவுக்கறிவே ,அழகுக்கழகே . வாவா-வருவாய் திதி திதி - ( என்னை ) நிலை நிறுத்துவாயாக சேயே-இளமைப் பருவமுடையானே , ஓயா - கெடாத மதி அம் உமா - அறிவு மழகுமுடைய உமாதேவியின் சேயே - மகனே . மா திதி முருகா - பெரிய காப்புத் தொழிலுடைய முருக னென்னுந் திருநாமத்தோனே மா சேமா - மகாசேமமுடையானே .
இப்போது மேலே கொடுக்கப்பட்ட
படத்திலுள்ள எழுத்துக்களை வாசித்துப் பாருங்கள். சுழி குளம் என்றால் என்ன என்பது தெளிவாகப் புரியும்.
Comments
Post a Comment