அவிழ்ந்த குடுமி
அவிழ்ந்த குடுமி
கோபமிருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பார்கள்.கோபமிருக்குமிடத்தில்தான் புலமையும் இருக்குமோ?
ஔவை கோபப்படும் போதுதான்
ஆரையடா சொன்னாயடா
என்று பாடி அனைவரையும்
திரும்பிப் பார்க்க வைத்தார்.
அதுபோல காளமேகப் புலவரும்
கோபப்பட்டு...அட நம்ம காளமேகப் புலவரா இப்படிக் கோபப்பட்ட இருக்கிறார் என்று நம்மையெல்லாம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.
ஒருமுறை காளமேகப் புலவர் கும்பகோணத்திற்குச்
சென்றிருக்கிறார்.
அங்கு ஒரு திருமண வீடு.
அனைவரும் உணவருந்த வரிசையில் அமர்ந்திருக்கின்றனர்.
காளமேகமும் வரிசையில் போய் அமர்ந்திருக்கிறார்.
பக்கத்தில் தலையில் குடுமி வைத்த ஒரு மனிதனும் அமர்ந்திருக்கிறார்.
அனைவர்க்கும் வாழையிலையில் உணவு பரிமாறப்படுகிறது.உணவின் மணம் ,பசி இரண்டையும் பார்த்ததும் வயிறு தா ...தா என்று பொறுக்க முடியாமல் கேட்க ஆரம்பித்தது.
உணவை எடுத்து வாயில் வைக்கலாம் என்ற நேரம் பார்த்து பக்கத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்தவரது குடுமி அவிழ்ந்து, காளமேகத்தின் உணவில் விழுந்தது.அவ்வளவுதான்.முடி வீழ்ந்த உணவை உண்ண மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.
கடும் பசியில் இருந்த காளமேகத்திற்கு, உணவு கிடைத்தும் தன்னால் உண்ண முடியாமல் உணவு பாழ்பட்டுப் போயிற்றே என்று கோபம். அடக்கமுடியாக் கோபம்
கோபத்தில் குடுமி வைத்தவரைப் பார்த்து கத்த ஆரம்பித்தார்.
காளமேகம் கோபத்தில் எப்படிக் கத்தியிருப்பார்.?
கேட்க ஆசையாக இருக்கிறதல்லவா?
இதோ பாடல் உங்களுக்காக....
சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா! சோற்றுப்
பொருக்குலர்ந்த வாயா ! புலையா ! – திருக்குடந்தைக்
கோட்டானே ! நாயே ! குரங்கே ! உனையொருத்திப்
போட்டாளே ! வேலையற்றுப் போய் !
"முடிந்து வைத்திருந்த குடுமி அவிழ்ந்து என் இலையில் விழ, என் உணவைப் பாழ்படுத்திவிட்ட சோழநாட்டவனே! உணவை வாய் ஓரங்களில் ஒட்டிக் கொள்ளும்படியாக அநாகரிகமாக உண்டு, அவை உலர்ந்து காட்சியளிக்கும் இழிமகனே! குடந்தை நகரில் வாழும் கோட்டானே அதாவது ஆந்தையே ! நாயே!, குரங்கே ! உன்னைப் போய் வேறு வேலையில்லாமல் பெற்றுப் போட்டாளே ஒருத்தி ! "என்று வாயில் வந்ததைப் பேசி தன் கோபத்தைக் தீர்த்துக் கொண்டார்.
என்னவொரு கோபம்!
உன்னையும் ஒருத்தி வேலை மெனக்கெட்டு
பெத்துப் போட்டிருக்கிறாளே
என்ன வார்த்தை இது?
கோபத்தில் வாய்க்கு வந்தபடி பேசுவது என்பது இதுதானோ?
புலமை இருக்கும் இடத்தில் கோபமும் இருக்குமோ?
பிரிக்க முடியாதது எது என்ற கேள்விக்கு புலவரும் கோபமும் என்ற பதில் சரியாக இருக்குமோ?
இருக்கும் ...இருக்கும்.சுருக்கு -நீண்ட தலைமுடியை புரிமணை போல் சுற்றி முடிச்சுப் போட்டு வைத்தல்
சோழியா -சோழ நாட்டவனே
சோற்றுப் பொருக்கு = உலர்ந்த சோறு
புலையா = இழிமகனே
கோட்டானே = ஆந்தையே
Comments
Post a Comment