நாணமோ இது நாணமோ

நாணமோ இது நாணமோ


பெண்களுக்கு உரிய நான்கு நற்பண்புகள்

என்னவென்று கேட்டால் அச்சம்,மடம்,

நாணம்,பயிர்ப்பு என்று சொல்லிவிடுவீர்கள்.

அதனைக் கேட்டுக் கேட்டு

பழகிவிட்டோம்.


அச்சம் என்றால் பயம்.

மடம் என்றால் அறியாமை.

நாணம் என்றால் வெட்கம்

பயிர்ப்பு என்றால் கூச்சம்

என்று சொல்லித் தந்திருக்கிறார்கள்.

அதனால் அவற்றைப் பற்றி நன்கு தெரிந்து

வைத்திருக்கிறோம்.


இந்த நான்கு பண்புகளும் பெண்களுக்கே 

உரியது என்று உயர்த்திப் பேசி வருகிறோம்.

கொண்டாடி மகிழ்கிறோம்.


இதில் நாணம் மட்டும்

பெண்களுக்கே உரிய

சிறப்புப் பண்பாக கருதப்படுகிறது.

ஆண்கள் நாணினால் எப்படி  இருக்கும்?

சரியாக இருக்காது.


நாணம் பெண்களிடம்

மட்டும்தான் இருக்க வேண்டுமா?


வேறு யாரிடமும் நாணம் இருக்கக்கூடாதா?


மனிதர்களைத் தவிர

வேறு யாரிடமும் நாணம்

இருக்காதா?

இருக்கக் கூடாதா?

விலங்குகள் நாணுவதைப்

பார்த்திருக்கிறீர்களா?


நான் பார்த்தேன்....

யாரது விலங்குகள் முகத்தில் நாணத்தைப்

பார்த்தது?


நான்...நான்...நானேதான் என்கிறார் ஒரு

புலவர்.

யாரப்பா அந்தப் புலவர்?


அப்படி எந்த யானையிடம் ...

எந்த இடத்தில் ...எப்போது

யானை வெட்கப்பட்டு நின்றதைப்

பார்த்தாராம்.?


அவர் பார்த்த நாணிகோணி நின்ற யானையை உங்களுக்கும்

பார்க்க வேண்டும் என்று 

ஆவலாக உள்ளதல்லவா?


 உங்களைப்போலத்தான் நானும் 

அந்த யானையைப் பார்க்க பேராவலாக

இருக்கிறேன்.


வாருங்கள் .போய் பார்த்து வருவோம்.



"கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு

நெடுவரை மருங்கின் குஞ்சும் யானை

கனவில் தான்செய்தது மனத்தது ஆகலின்

கனவில் கண்டு கதுமென வெரீஇப்

புதுவது ஆக மலர்ந்த வேங்கையை

அதுவென உணர்ந்து அதன் அணிநலம் முருக்கிப்

பேணா முன்பின் தன்சினம் தணிந்து அம்மரம்

காணும் பொழுதின் நோக்கல் செல்லாது

நாணி இறைஞ்சும் நல்மலை நல்நாட....

... ..... ....... ......"

                               

கபிலர் என்ற புலவர் எழுதிய

கலித்தொகை பாடல் இது.


யானைக்கும் புலிக்கும் காட்டில் பெரிய

சண்டை. புலியிடம் தோற்றுவிடக்கூடாது

என்று ஆவேசத்தில்  யானை தாக்கியது.

யானையின் ஆவேசத்திற்கு முன்னால்

புலியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.


புலி தோற்று புறமுதுகிட்டு ஓடிவிட்டது.

யானைக்கு இப்போதும் ஆவேசம்

அடங்கவில்லை.

அப்படியே யானை தூங்கிப் போயிற்று.


இப்போது யானைக்கு

ஒரு கனவு வருகிறது.

கனவினில் மறுபடியும் அதே புலி 

எதிரே வந்து நிற்கிறது.


ஏற்கெனவே கோபம் தலைக்கு ஏறி

இருந்த நிலையில் புலியைச் பார்த்ததும்

நீ இன்னும் போகலியா என்றபடி 

புலியின் மீது பாய்ந்து முட்டி 

மோதியது யானை.


மோதி வீழ்த்திய பிறகுதான்

 தெரிகிறது இதுவரை தான்

 முட்டி மோதியது

 ஒரு வேங்கை மரம் என்பது.

 

இவ்வளவு நேரம் நான் முட்டி

மோதியது இந்த வேங்கையோடுதானா?

புலி இல்லையா?

நினைத்ததும் உள்ளுக்குள்ளேயே 

சிரித்துக்கொண்டது யானை.


நாணத்தால் முகம் நாணிக்

கோணிப் போனது.

கனவில் மட்டுமா யானைக்கு

நாணம் வந்தது.?


கனவினில் கண்ட

அந்த ஒடிந்த

வேங்கை மரத்தைக்

கடந்து போகும் போதெல்லாம்

கனவில் நடந்த செயலை எண்ணி

நாணிக்கோணி 

 நிற்கிறதாம் அந்த யானை.


என்னவொரு கற்பனை பாருங்கள்.!


எதற்காக இந்தக் காட்சியைச்

சொல்கிறார் கபிலர்?


காதலன் ஒருவன் இரவு நேரத்தில்

தன் காதலியை சந்திக்க வருகிறான்.

அவனிடம் காட்டு வழியாக வருவது

ஆபத்து நிறைந்தது. ஆதலால் இரவினில்

வருவதை விடுத்து பகலில் வா என்று

சொல்ல வேண்டும்.

அப்போதுதான் தோழி வேங்கையைப்

புலி என்று முட்டி மோதி

நாணப்பட்டு நின்ற யானை

உள்ள காடு என்று

தலைவனிடம்  சொல்கிறாள்.


யானை என்று வெறுமனே சொல்லியிருந்தால்

யானை தானே அது என்ன

செய்துவிடப் போகிறது 

ஒதுங்கி வந்துவிடலாம் என்று

தலைவன் நினைக்கக்கூடும்.

அதனால் இது சாதாரண யானைகள்

உள்ள காடு அல்ல.

கனவில் கூட புலியோடு மோதும்

வெறியோடு இருக்கும் யானைகள்

உள்ள காடு என்று சொல்கிறாள்.


 சாதாரணமாக சொல்லிவிட்டுக்

கடந்து போனால் பாடலில் சுவை

இருக்காது. அதனால்தான் நாணத்தை

யானையின் முகத்தில் அப்பிவைத்து

நம்மையும் யானையைத் திரும்பிப் பார்க்க 

வைத்திருக்கிறார் கபிலர்.


அருமையான கற்பனை இல்லையா?


இனி எங்காவது யானையைப் பார்த்தால்

கபிலரின் இந்த யானையின் நாணம்தான்

நம் கண்முன் வந்து சிரிக்க வைக்கும் 

இல்லையா?












Comments