சுரையாழ அம்மி மிதப்பு

சுரையாழ அம்மி மிதப்பு 


இலக்கியங்களைப் படிக்கப் படிக்க

இன்னும் வேண்டும் ...இன்னும் வேண்டும்

என உள்ளம் கேட்கும். அதனால்தான்

இலக்கியத்தை இலக்கிய இன்பம் 

என்று சொல்லி மகிழ்கிறோம்.

இன்பத்தைத் தேடி ஓடும் ஓட்டம்தானே 

இந்த வாழ்க்கை.


இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள உவமைகள்

உள்ளுறைகள் பல நேரங்களில் எங்கிருந்து

புறப்பட்டு வந்தது இத்தகைய சிந்தனைகளும்

கற்பனைகளும் என வியக்க வைக்கும்.


சில உவமைகள் பல நினைவலைகளைக்

கண்முன் காட்சிப்படுத்தி நிற்கும்.

அவற்றை உள்ளுந்தோறும் உவகை 

மேலிடும். அவற்றோடு தொடர்புடைய

மேலும் பல கருத்துக்களை

ஒப்பிட்டுப் பார்க்க வைக்கும்.

ஏதோ ஒரு சிறுகதையை வாசித்த

உணர்வைக் கொண்டு வந்து

கண்முன் நிறுத்தும்.

ஒற்றை வரிக்குள் இவ்வளவு 

செய்திகளா என உவகை மேலிட வைக்கும்.

வியந்து வியந்து பார்க்க

 வைக்கும்.

அவ்வாறு நான் வியந்தும் மகிழ்ந்தும்

மனதிற்குள் கொண்டாடிய

இலக்கிய உவமைகள் ஏராளம் ....ஏராளம்.

அவற்றுள் ஒன்றே ஒன்றை எடுத்து

உங்கள் முன் படைக்கிறேன்.


நற்குடியில் பிறந்த நல்லவர்கள் எல்லாம்

வறுமையால் வாடுகின்றனர்

ஆனால் கீழோர் எல்லாம் செல்வச் செழிப்புடன்

தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அதனைப் பார்த்த புலவர் ஒருவர் 

அதிர்ந்து போகிறார்.

ஈதென்ன!

தலைகீழ் மாற்றம் நடக்கிறது என்று நினைக்கிறார்.

அவரால் சும்மா இருக்க முடியவில்லை.

உள்ளுக்குள் குமுறல்.

அதனை எப்படிக் காட்சிப் படுத்துவது என்று நினனைக்கிறார்.


கண்முன்னர் சுரை நெற்று ஒன்று ஆற்று நீரில் ஆடிக்கொண்டு வருகிறது.


இதையே தலைகீழாக மாற்றினால்....

மாற்றித் தான் பார்ப்போமே.

காட்சியை நம் கண்முன்னர் கொண்டு வந்த நிறுத்த அவர் கையில்

எடுத்த ஆயுதம்தான் இந்தச்

சுரையாழ அம்மி மிதப்பு

என்ற பழமொழி.

இதோ பாடல் உங்களுக்காக...

"உரைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய

நிறையுளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்

வரைதாழ் இலங்கருவி வெற்ப! அதுவே

சுரையாழ அம்மி மிதப்பு "

                   - பழமொழி நானூறு

"நீர்நிலையில் சுரைக்குடுக்கை மிதக்கும். அம்மிக்கல் மூழ்கிவிடும். இதுதான்  இயற்கை. மலையில் அருவி ஒளிரும் நாட்டை உடைய வேந்தனே! உன் ஆட்சியில் நீரின் மேலே மிதக்க வேண்டிய சுரைக்குடுக்கை நீரில் ஆழ்ந்து போவது போல புகழ் மிக்க சான்றோர் ஒடுங்கிக் கிடக்கின்றனர்.

 நீரில் மூழ்கிக் கிடக்க வேண்டிய அம்மிக்கல் மிதப்பது போல சிறப்புக்கு உரியவர் அல்லாதார் தலைநிமிர்ந்து செம்மாந்து திரிகின்றனர் "என்கிறார் முன்றுறை அரையனார்.


நெற்றாகிப் போன சுரைக்குடுக்கை

எடை குறைவாக இருப்பதால் நீரில்

ஆழ்ந்து போகாது.


அதுபோல அம்மிக்கல் எடை கூடுதலாக இருப்பதால் அதுவும் 

மிதப்பதற்கு வாய்ப்பே இல்லை.

ஆனால் அவை  நிகழ்ந்து விட்டால் .. இயற்கைக்கு மாறான செயலாக

கருதப்படும்.

இப்படி இயற்கைக்கு மாறான செயல்தான்

உயர்ந்தோர் தாழ்தலும் கீழோர்

உயர்நிலையில் இருத்தலும் என்கிறார்

புலவர்.


சொல்ல வந்த கருத்தை சாதாரணமாக

சொல்லிவிட்டுப் போனால் இந்த அளவு

அந்தக் கருத்து நம்முள் ஒரு தாக்கத்தை 

ஏற்படுத்தி இருக்காது.

சொல்லப்பட்ட  பழமொழி 

 நம்மை சிந்திக்க வைக்கிறது.

திரும்பிப் பார்க்க வைக்கிறது.


அந்தக் காட்சியை நம் கண்முன்னர்

கொண்டு வந்து நிறுத்தி இப்படியும்

நடக்குமா என்று வியக்க

 வைக்கிறது.


தண்ணீரில் மிதக்க வேண்டிய ஒரு பொருள் கீழே அமிழ்ந்து கிடக்கிறது.

கீழே அமிழ்ந்து கிடக்க வேண்டிய பொருள் மேலே மிதக்கிறது.


சான்றோர் எல்லாம் அமைதியாக இருக்கின்றனர்.

அறிவிலிகள் எல்லாம் தலையைச் சிலுப்பிக் கொண்டு 

நிமிர்ந்து வாழ்கின்றனர்.

இது இயற்கைக்கு முரணான

நிகழ்வு

இவை எல்லாம் காலங்காலமாக

நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆமாம் .இதுதான் உலகம்.









Comments