காமராசர்
காமராசர்
காமராசர் அங்கம் கறுப்பு
உள்ளம் பாலினும் வெளுப்பு
இல்லை இவருக்கு படிப்பு
அனைவருக்கும் தந்தார் படிப்பு
" எண்ணும்எழுத்தும் கண்ணெனத் தகும்." என்றார் ஔவையார்.
கண்ணான கல்வியை இளமையில் காமராசரால் பெறமுடியவில்லை.
அதனால்தான் தான் பெறாத கல்வியை மற்ற குழந்தைகளும் பெறாமல் போய்விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.
கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.
மதிய உணவு திட்டம் தந்தார்.
பசியில்லாமல் பாடம் படிக்க வழிவகை செய்தார்.
பல்லணை கட்டி பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் வாழ்வு வளமாக வழிவகை செய்தார்.
பெற்றோம் அவரால் வயிறார உணவு
அவர்மேல் எமக்கு உண்டு பேரன்பு
தந்தை குமாரசாமியும் தாயார் சிவகாமி அம்மாளும் பேர் விளங்க பிறந்த பிள்ளை .
இவர் பிள்ளைப் பருவத்தில் தடம் பதித்து மகிழ பேறுபெற்ற ஊர் விருதுநகர்.
என்ன தவம் செய்ததோ விருதுநகர்!
இந்தத் தலைமகனாம் நல்மகனை தமிழ் மண்ணுக்கு ஈந்த பெருமையை விருதுநகர் தனதாக்கிக் கொண்டு தலைநிமிர்ந்து நிற்கிறது.
அவர் தமிழர் என்பதில் எமக்கு உண்டு பெருமையினும் பெருமை.
எளிமை அவருக்குச் சொந்தம்.
ஆனால் எளியவர் யாவரும்
அவருக்குச் சொந்தம்.
காமராசர் ஆட்சிக் காலம் தமிழகத்தின் பொற்காலம் .
நான் அமைப்பேன் பொற்காலம் இன்னொரு முறை என்று
ஆளாளாளுக்குப் போட்டி.
அது இன்று வரை போட்டியாகவே
இருந்து கொண்டிருக்கிறது.
வெற்றி பெற்றவர் எவருமிலர்.
மதிய உணவுத் திட்டம் பிறந்த கதை நெகிழ்ச்சியானது.
இவர் முதல் மந்திரியாக இருந்தபோது, பள்ளிக்குப் போகாமல் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனைப் பார்க்க நேரிட்டது .
சிறுவனை அழைத்து, " பள்ளிக்கு ஏன் செல்லவில்லை "என கேட்டார்.
" நான் பள்ளிக்கு சென்று விட்டால் சோறு யார் தருவார்?"
திருப்பிக் கேட்டான் அந்தச் சிறுவன்.
" சோறு தந்தால் பள்ளிக்கு செல்வியா?" என்றார் காமராசர்.
"ஏன்... நீங்கள் தரப்போகிறீர்களா? குறும்பாகக் கேட்டான் சிறுவன்.
"நான் தருவேண்ணேன்... "
என்றார் காமராசர்.
"அப்படியானால் நான்.கண்டிப்பாக பள்ளிக்கு வருகிறேன் என்றான் சிறுவன்" என்றான் சிறுவன்.
அன்றே அவர் உள்ளத்தில் உதயமானதுதான் மதிய உணவு திட்டம்.
" வயிற்றுக்கு சோறிட வேண்டும்
இங்கு வாழும் உயிர்களுக்கெல்லாம்"
என்பதற்கு இணங்க வயிற்றுப்பசியை போக்கிட நினைத்தார்.
வயிற்றில் பசி இருக்கும்போது செவிக்கு உணவளிப்பது பயனளிக்காது . அதனால் மாணவர்கள் வயிறார உண்டு ,நெஞ்சார வாழ்த்தி, மனமார படிக்க வழிவகை செய்தார்.
பசி வந்தால் செவி கேட்கும் திறனை இழக்கும்.வயிற்றுப்பசியை நீக்கினால் மட்டுமே அறிவுப்பசிக்குத் தீனியிட முடியும் என்ற உளவியலை நன்கு அறிந்தவர் காமராசர்.
உடுக்கும் உடையிலும் ஏற்றத்தாழ்வு இருந்திட கூடாது என நினைத்தார் காமராசர்.
அதனால் பள்ளியில் சீருடை திட்டம்
கொண்டு வந்தார்.அப்படி இப்படி இருக்கும் அரசியலில் இப்படித்தான் இருக்க வேண்டும் என வாழ்ந்து காட்டியவர் காமராசர்.
அதிகம் பேசாதவர்.
"ஆகட்டும் பார்க்கலாம் "என்ற ஒற்றை வரிக்குள் காரியத்தை முடித்துவிடுவார் கர்ம வீரர்.அதனால்தான் கர்மவீரர் என்று பாராட்டப்பெற்றார்.
நீர் மேலாண்மையைத் திறம்பட கையாண்டு அணைகள் கட்டி வறட்சி இல்லாத் தமிழகத்தை உருவாக்கியவர் காமராசர்.
காமராசர் ஒரு அரசியல் சாணக்கியர். ஆட்சிக்கும் கட்சிக்கும் தனித்தனி தலைமை இருக்க வேண்டும் என்று நினைத்தவர் காமராசர்.அதனால் தான் காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தபோது பக்தவத்சலம் அவர்களை தலைமை அமைச்சராக்கி
பெருமை படுத்தினார்.
தன்னலம் கருதாது மக்கள் பணி ஆற்றிய மாமேதை.படிக்காத மேதை. ஊர்கள்தோறும் படித்த மேதைகளை உருவாக்க பள்ளிகள் திறந்தார்.
மூன்று பிரதமர்களைத் தந்த பெருமை காமராசருக்கு உண்டு.அதனால் கிங்மேக்கர் என்ற பெருமையையும் பெற்றார்.
மக்கள் காமராசரை கருமவீரர், ஏழைப்பங்காளன் பெருந்தலைவர் என்று கொண்டாடி மகிழ்ந்தனர்.
காமராசர் ஒரு தாய்.
அதனால்தான் மக்களின் வயிற்றுப்பசியைப் போக்கும் திட்டங்களுக்கு முதலிடம் தந்தார்.
காமராசர் ஒரு தந்தை.
மக்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யும் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தினார்.
காமராசர் ஒரு சரித்திரம்.அதனால் தொலைநோக்குப் திட்டங்கள் தந்து நம் நெஞ்சங்களை விட்டு அகலாதிருக்கிறார்.
கல்விக்கண் திறந்த காமராசர் ஒரு சகாப்தம்.
வாழ்க காமராசர் புகழ்
கருத்துகள்
கருத்துரையிடுக