பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்

பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் 


 " பசி ருசி அறியாது "என்று கேள்விப்பட்டிருக்கிறோம். 

     "பசித்தபின் புசி "என்று சொல்லக் கேட்டிருக்கிறோம்.

 இது என்ன பசி வந்தால் பத்தும் பறந்து போகும்?

 அது என்ன பத்து ? தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதல்லவா!

 கொஞ்சம் பொறுங்கள். பசியாறிவிட்டு வருகிறேன்.

      அதாவது ஔவையின் பாடலைப் படித்து அறிவுப் பசி ஆற்றிவிட்டு வருகிறேன் என்று சொன்னேன்.

அப்பாடா...

என்ன இது? நானொன்று நினைக்க

இந்த ஔவை வேறொன்று சொல்கிறாரே!

நான் என்ன நினைத்தேன் என்றால் 

பசி வந்தால் சட்டி பத்த இருக்கும்

பருக்கையையும் வழித்து உருட்டி  உள்ளே தள்ளி விடுவோம் இல்லையா?

அதைத்தான் பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று ஔவை சொல்லியிருப்பார்

என்று நினைத்தேன்.

ஔவை என்னடா வென்றால்

வேறு ஒரு பதிலைச் சொல்கிறார்.

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பதற்காக  ஔவை சொல்லும் விளக்கம் 

இதோ உங்களுக்காக...

"   மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை

 தானம் தவம் உயர்ச்சி தாழாண்மை _ தேனின்

 கசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்

பசி வந்திடப் பறந்து போம் "

 - நல்வழி

  என்கிறார் ஔவை.

பசி வந்தால் பறந்து போகும்.

அந்த பத்து யாதெனில்....

       

  1 .     மானம்

  2  .      குலம் 

  3  .    கல்வி

  4  .    வண்மை அதாவது ஈகை

 5  .   அறிவுடைமை

 6  .  தானம் 

 7   .  தவம்

8  .   உயர்ச்சி அதாவது சமூகத்தில் உயர்ந்த நிலை

 9  .     தாளாண்மை அதாவது விடாமுயற்சி 

 10   .   காமம்

போன்ற பத்து குணங்களும்  பசி வந்தால் நம்மை விட்டுப் போய் விடுமாம்.

அம்மாடியோவ்.... பசிக்கு இவ்வளவு சக்தி இருக்கிறதா!..வியப்பாக இருக்கிறதல்லவா !

" எண்சாண் உடம்புக்கு வயிறே பிரதானம் ."இது புதுமொழி 

வயிற்றுக்காகதானே இந்தப் பாடு.

இந்த உழைப்பு. ஓட்டம் எல்லாமே வயிறார 

உணவு உண்ண வேண்டும் என்பதற்காகத்தானே!

நாமும் பசிக் கொடுமையை   அனுபவித்திருப்போம்.

கொஞ்சம் நினைவுபடுத்திப் பாருங்கள்.

நல்ல வயிற்றுப் பசி இருக்கும் போது எது கிடைத்தாலும எந்த இடத்தில் இருந்தாலும்  வாங்கி சாப்பிடுவோம்.

நாலுபேர் பார்ப்பார்களே ...நான் எவ்வளவு பெரிய ஆள்.... என் குலம் என்ன...  அந்தஸ்து என்ன?  பதவி என்ன... பவுசு என்ன?எதுவுமே நினைவுக்கு வராது.

நன்றாக சாப்பிட்டுவிட்டு பசி அடங்கியதும் அங்கேயும் இங்கேயும் பார்ப்போம்.

யாராவது பாத்திருப்பார்களோ?...

என்ன இது ? 

ரோட்டோர கடையில் நின்று...

கையில் அசிங்கமாக கையில் தட்டை ஏந்தியபடி....

அவமானமாக உணருவோம்.

பசி அடங்கியதும் மானம் மெதுவாக வந்து எட்டிப் பார்த்துச் சிரிக்கும்.

பசி இருக்கும்வரை அந்த 

மானம் அவமானம் எல்லாம் 

எங்கே போய் ஒளிந்து நின்று கொண்டது.?

நான் இந்த குலத்தவன் 

என்ற நினைப்பு எங்கே பதுங்கிக் கொண்டது?

என் படிப்பு என் அந்தஸ்து எல்லாம்

எங்கே காணாமல் போனது?

என் அறிவு என் வலிமை

என் தவம் எல்லாம் எப்படி இல்லாமல்

போனது?

எனது உயர்வு ,அன்பு, பண்பு அத்தனையும்

சொல்லி வைத்தாற்போல்

பதுங்கி நின்று கொண்டன.

இவை அத்தனைக்கும் காரணம் பசி என்ற ஒற்றை உணர்வு.

பசியின் முன்னர் நாம் ஒன்றுமே இல்லாதவர்களாகிப் போவோம்.

இதை அனுபவித்தவர்களுக்குப்  புரியும்.

இதைத்தான்" பசி வந்தால் பத்தும் பறந்து போகும் "என்று சொல்லி வைத்தாரோ ஔவை.

பழமொழி அனுபவமொழி .

பட்டறிவு மூலம் பெற்றதைப் பட்டென்று

நாலே வார்த்தையில் நறுக்கென்று 

சொன்ன பெரியோர் மொழி.

உலக நடைமுறையை நச்சென்று... நாலே  வார்த்தையில் சொன்ன பழமொழிக்கு

ஔவையின் விளக்கம்  அருமை.

"பசி வந்திட பத்தும் பறந்து போகும்" என்பதற்கு ஔவையைவிட வேறு 

யாரேனும்   அருமையாக விளக்கிவிட முடியுமா என்ன! 

      

      

    

    

     

       

கருத்துகள்

Popular Posts