நேரமில்லைக்கு நேரமில்லை

"காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை"  

நாம் தயாராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் காலம் தொடர்ந்து ஓடிக்கொண்டேதான் இருக்கும் .

நாம் ஒரு முடிவை ஒத்திவைக்கலாம், இலக்கை அடைவதற்கான முயற்சி மேற்கொள்வதில் தாமதப்படுத்தலாம்.  சாதகமான சூழல்  வரட்டும் என்று காத்திருக்கலாம். ஆனால், காலத்தின் ஓட்டத்தை நம்மால் நிறுத்த முடியாது.

நாம் விரும்புகிறோமோ இல்லையோ

காலையிலேயே காலமென்னும் வரம் 

நம் கைகளில் கொடுக்கப்பட்டுவிட்டது.

வரம் வாங்கி வந்த நாம்

வரும் வழியிலேயே பறிகொடுத்துவிட்டு

நிற்கலாமா?

பணத்தைப் பார்த்துப் பார்த்து

செலவு செய்யும்நாம் காலத்தைத்

திட்டமிட்டுச் செலவழிப்பதில்லை.


காலமெல்லாம் எதற்கெல்லாமோ காத்திருந்து

காத்திருந்து இருந்த காலத்தைத்

தொலைத்துவிட்டு காத்திருப்பதிலேயே

நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறோம்.

கல்வியை எப்படி ஒருவராலும் திருட முடியாதோ 

அதேபோன்று காலமும் யாராலும்

திருடிக் கொண்டு செல்ல முடியாது.

ஆனால் நம்மையும் அறியாமல்

நமக்குக் கொடுக்கப்பட்ட காலம்

திருட்டு போய்க் கொண்டிருக்கிறது.

அதை என்றாவது நாம் உணர்ந்திருக்கிறோமா?


யார் யாரெல்லாமோ நமது காலத்தைத்

திருடிக் கொண்டிருக்கின்றனர்.

எவை எவையெல்லாமோ நம் 

காலத்தைக் களவாட காத்திருக்கிறது.

திருடியவர் யார் என்றுகூட தெரியாமல்

திருட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

கைபேசியோடு கணினியோடு 

தொலைக்காட்சியோடு என்று கிடைத்த

காலத்தைக் கூறுபோட்டுக் கொடுத்துவிட்டு

நேரமில்லை நேரமில்லை என்று

நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.


முழு நேரமும் வலைத்தளத்தில் மூழ்கிக்

கிடக்கும் அண்ணனுக்கு அப்பாவுக்கு

மருந்து வாங்கித் தர  அருகிலுள்ள 

கடைக்குச் சென்றுவர நேரமில்லை.

பேஸ்புக்கில் லைக்கிற்காகத் தவமாய்த்

தவமிருக்கும்  தங்கைக்கு ,அம்மாவிற்கு

உதவி செய்து லைக் வாங்க மனமில்லை.

கிராமத்தில் வசிக்கும் வயதானப்

பெற்றோரைப் பார்த்து வர நகரத்தில்

வேலை பார்க்கும் மகனுக்கு நேரமில்லை.

பொழுதத்தனையும் தொலைக்காட்சிமுன்

கழிக்கும் மனைவிக்கு வீட்டுக்கு வரும்

கணவனோடு பேச நேரமில்லை.

வீடியோ கேம் விளையாடி பொழுதைக்

கழிக்கும் தம்பிக்கு வீட்டுப்பாடம்

எழுத நேரமில்லை.


யாரைக் கேட்டாலும் நேரமில்லை...

நேரமில்லை...


கொடுத்த நேரத்தைச் சரியாகப்

பயன்படுத்தத் தெரியாமல்

நேரமில்லை என்ற ஒற்றைச்

சொல்லைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு

நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.

யாரையோ ஏமாற்ற நீங்கள் நேரமில்லை

என்ற வார்த்தையைப்

பயன்படுத்தியிருக்கலாம்.


ஆனால் இது அடுத்தவரை ஏமாற்றும் 

சொல் அல்ல.

உண்மையிலேயே நீங்கள்

உங்களையே ஏமாற்றும் சொல்தான்

இந்த நேரமில்லை.

நேரமில்லை என்ற வார்த்தையை

மனிதர்களைத் தவிர வேறு எந்த உயிர்களிடமும் கேட்டதுண்டா?

இயற்கையானது நேரமில்லை என்று காரணம் சொல்லி தன் கடமையிலிருந்து தவறியதுண்டா?

 கதிரவன் எனக்கு 

வர நேரமில்லை என்று தன் பணியை

நிறுத்தி வைத்ததுண்டா?


மரம், செடி கொடிகள் தமக்கு நேரமில்லை என்று காய் கனிகள் தருவதை

நிறுத்தி வைத்ததுண்டா?

காற்று வீச நேரமில்லை என்று

ஓய்வெடுத்துச் சென்றதுண்டா?


கதிரவன் உதிக்க நேரமில்லை என்று

அடம்பிடித்து நிறுத்திக் கொண்டால்.....

மரம், செடி கொடிகள் ஒரு வருடத்திற்கு

எங்களுக்கு காய்ப்பதற்கு நேரமில்லை

என்று அப்படியே நின்றுவிட்டால்....

ஒரே ஒரு நாளைக்கு வீசமாட்டேன்

என்று காற்று தன் பணியை நிறுத்தி

வைத்துக் கொண்டால்.....

அம்மாடியோவ்...வேண்டாமடா சாமி

என்று கத்த வேண்டும் போல் இருக்கிறதல்லவா!


பயப்படாதீர்கள்.

இவை ஒருபோதும் நேரமில்லை என்று

தம் பணியை நிறுத்திக் கொள்ளப்

போவதில்லை.

நாம் மட்டும் இந்த நேரமில்லை 

என்ற சொல்லை மடியில்

கட்டிக் கொண்டு ஏன் திரிய வேண்டும்?

நமக்குக் கொடுக்கப்பட்ட காலத்தில்

நாம் என்ன செய்தோம் என்பதில்தான்

நம்மை நாம் அடையாளப்படுத்திக்

கொள்ள முடியும். 

காலத்தைத் திருட்டு கொடுத்துவிட்டு

திருதிருவென்று விழித்துக் 

கொண்டிருக்கிறோமா?

காலத்தின் அருமை தெரியாது அங்கங்கே 

கழித்துவிட்டோமா? இல்லை

களித்துவிட்டோமா?


காலம் எவ்வளவு விலைமதிப்பற்றது

என்பது ஒரு ஓட்டப்பந்தய வீரனுக்குத்

தெரிந்திருக்கும்.

அரை வினாடியில் கிடைக்கவிருந்த

வெற்றி கைவிட்டுப் போயிருக்கும்.

அந்த அரைவினாடி நேரம் அவனுடைய

வாழ்க்கையை எப்படியெல்லாம் 

புரட்டிப் போட்டிருக்கும் .


விபத்தில் சிக்கிய ஒருவனுக்கு தகுந்த

நேரத்தில் செய்யப்படும் உதவி

அவன் உயிரையே காப்பாற்றிவிடும்.

சரியான நேரத்தில் வந்து சேர்த்தீர்கள்.

இன்னும் ஒரு ஐந்து நிமிடம்

தாமதித்து வந்திருந்தால்  உயிரே

போயிருக்கும் என்பார்

டாக்டர்.

அப்போது பாதிக்கப்பட்ட நபர்

கண்ணீர் மல்க கையெடுத்துக்

கும்பிடுவார்.

அந்தத் தருணம் 

வார்த்தையால் சொல்லமுடியாத

நன்றியைக் கண்களால் தெரிவிக்கும்

உணர்வுப் பூர்வமான நேரம்.

அந்த ஐந்து நிமிட நேரத்திற்கு

ஈடு இணையாக எதுவும் கொடுத்துவிட

முடியுமா?


ஐந்து நிமிட நேரம் ஒரு வாழ்க்கையையே

காப்பாற்றியிருக்கிறது.

"நான் நேரத்தை வீணாக்கினேன்;

இப்போது நேரம் என்னை வீணாக்குகிறது"

என்றார் ஷேக்ஸ்பியர்.


ஆமாம்....நேரத்தை நாம் வீணாக்கினால்

ஒருநாள் நேரம் நம்மை வீணாக்கிவிடும்.

உரிய காலம் ,உகந்த காலம், 

உதவாத காலம் என்று பாகுபாடு பார்க்காது

எல்லாக் காலத்தையும் தமக்கு உரிய

காலமாக மாற்றும் திறன் படைத்த

ஒருவரால்தான் வரலாற்றேடுகளில் 

தம் பெயரைப் பதிவு

செய்ய முடியும்.

நாளை என்பது ஒரு ஏமாற்று வேலை.

இன்று என்பது மட்டுமே உண்மை.

நேரத்தோடு வேண்டாம் கண்ணாமூச்சி

விளையாட்டு.


நேரமில்லை என்ற சொல்லோடு

கொள்ளுங்கள் பிணக்கு.

இன்றே தொடங்கட்டும் உங்கள்

வெற்றிக்கணக்கு !









இன்னும் கொஞ்சம் தூங்கட்டும்.

இன்னும் கொஞ்சம் உறங்கட்டும்.

இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு

நித்திரை செய்யட்டும் என்பாயோ?

உன் தரித்திரம்

வழிப் போக்கனைப் போலவும்

உன் வறுமை ஆயுதம் அணிந்தவனைப்

போலவும் வரும்"

என்கிறது பைபிள்.


நேரத்தைப் படுக்கையில் கழித்தால்

ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுவாய்.

எவ்வளவு பெரிய உண்மை!










.










"

கருத்துகள்

Popular Posts