யானறிந்த புலவரிலே(பேச்சுப் போட்டி)
யானறிந்த புலவரிலே(பேச்சுப் போட்டி)
நடுநிலை தவறாது
வாய்ச்சொல் வழுவாது
மனுநீதி காக்கும் மன்னனாய்
மையத்தில் அமர்ந்திருக்கும்
நடுவர் அவர்களே!
விழுதுகளாய்த் தாங்கி நிற்கும் பேச்சாளர் பெருமக்களே!
செந்தமிழ் தேனுண்ண வந்திருக்கும் அருமை மாணவத் தங்கங்களே!
உங்கள் அனைவருக்கும் முதற்கண்
என் வணக்கத்தைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்
என்று தமிழுக்கு நற்சான்றிதழ் தந்தவர் பாரதி.
எட்டயபுரத்தில் பிறந்து
எல்லை தாண்டி வந்து தொல்லை தந்த ஆங்கிலேயரை எதிர்த்துக் கவி பாடி
விடுதலை வேட்கையைத் தூண்டியவர்
பாரதி.
பாரதியின் கவிதையில் வாசிக்க வாசிக்க
உற்சாகம் பொங்கும். உள்ளுக்குள் ஒர் உந்து சக்தி வந்து உந்தி முன்னே தள்ளும்.
துள்ளல் இருக்கும் .
துவண்டு நின்ற வேளையில் தோள் கொடுத்துத் தூக்கிவிட
தன்னம்பிக்கை வரிகள் தந்து
தாங்கி நிற்கும்.
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதைத் தொழுது படித்திடடி பாப்பா என்று பாப்பாவுக்குப் பாட்டு எழுதிய பாரதிய
அத்தோடு தன் ஓட்டத்தை நிறுத்திவிட வில்லை.
எல்லாத் தரப்பு மக்களும் திரும்பிப் பார்க்கும்படியாக தனது சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் தன் வலிமையைத் தன் பிறப்பின் உண்மையைப்
புரிய வைக்கும் பாடல் பாடியவர் பாரதி.
தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பம் மிக உழன்று
பிறர் வாடச் செயல்கள் பல செய்து
நரை கூடிக் கிழப்பருவமெய்திக்
கொடுங் கூற்றுக்கிறையான பின் மாயும்
வேடிக்கை மனிதரைப் போலே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ?
என்று கேள்வி கேட்டவர் பாரதி.
காணி நிலம் வேண்டும் என்று
கேட்டவன் வெறும் காணி நிலத்தோடு நின்றுவிடாமல் நிறுத்தி விடாமல் கோரிக்கை விடுத்தவன் பாரதி. மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் என்று விருப்பப்பட்டவன் பாரதி.
எல்லா உயிரும் தொழும் என்று பௌத்தம் பேசியவனை இங்கே சற்று
ஈ என இரத்தல் இழிந்தன்று
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று என்று புறநானூறு பாடல் ஒன்றில் கழைதின் யானையார் குறிப்பிட்டுள்ளார். மனிதன் வாழ்வது எதற்காக ஒரு சாண் வயிற்றுக்காக என்று நாம் உலக வழக்கில் கூறுவது உண்டு.
தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி என்று கூறும் போது தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாதிவ இயல்பான வாழ்க்கை வாழ்கின்ற மனிதனைப் பாரதி சுட்டிக்காட்டுகிறார். மனிதன் முயற்சி இல்லாமல் பேசிப் பேசியே பொழுதைக் கழிப்பதை வெறுக்கிறார். அவ்வாறு இருக்கக்கூடிய மனிதனை வறுமை வாட்டும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்று வள்ளுவர் சொல்வதை நாம் அறிவோம். முயற்சி இல்லாதவன் வீட்டில் வறுமை குடியிருக்கும். அதனால் தான் வாடித் துன்பம் மிக உழன்று என்று கூறி இருக்கிறார் பாரதி.
ஒருவருடைய சொல்லும் செயலும் பிறரைப் பாதிக்காமல் இருந்தால் அவனை அந்தணர் என்று விளக்கம் கொடுக்கிறார் திருவள்ளுவர்
அந்தணர் என்போர் அறவோர் எவ்வுயிர்க்கும்
செந்தன்மை பூண்டொழுகலான்-
என்பது திருக்குறள்.
மனிதன் பிறர் வாட பல செயல்கள் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளான். அதுதான் அவனுக்கு வேடிக்கையாகவும் இருக்கிறது.
தன் பெண்டு தன்பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் இவை உண்டு தான் உண்டு என்போன் சின்னதொரு கடுகுபோல் உள்ளம் கொண்டோன் என்று பாவேந்தர் கூறுவதை நாம் அறிவோம் இம்மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கை ஓட்டத்தில் முதுமை என்னும் பருவமடையும் போது தான் அவனுக்கு உள்ளே இருக்கும் ஆன்மீகம் விழித்துக் கொள்கிறது.
இறை உணர்வு பொங்கி வருகிறது. எதுவும் நம் கையில் இல்லை என்ற எண்ணம் மேலோங்குகிறது. குருதி ஓட்டம் வேகத்தோடு இருந்தபோது இளமைத் துடிப்பில் செய்த பாவங்களை எல்லாம் கணக்குப் போடுகிறது.
நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான் சோழன் என்று கரிகால் பெருவளத்தானை பழமொழி நானூறு புகழ்கிறது. இமயவரம்பினில் மீன் கொடி ஏற்றி இசைப்பட வாழ்ந்த பாண்டியரை இன்னும் நாம் புகழ்கிறோம். கற்றளி எடுத்து கடற் படை நடத்திய இராஜ ராஜனையும் இராஜேந்திர சோழனையும் இன்னும் நினைத்துப் பார்த்துப் பெருமைப்படுகிறோம். கல்லிலே கலைவண்ணம் கண்ட பல்லவர்களைப் புகழ்கிறோம்.
செயற்கரிய செய்வார் பெரியார் என்கிறார் பொய்யாமொழிப் புலவர்.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்று இன்றைய கவிஞர்கள் எழுதிவிட்டனர். நரை கூடிய கிழப்பருவம் வந்தபின் வருகின்ற ஞானம் இளமையில் வருவதில்லை. ஆனால் இளம் வயதிலேயே பாரதியின் நாவில் நாமகளாம் சரஸ்வதி குடிகொண்டு விட்டாள். அதனால் தான் சுப்பிரமணியாய் இருந்தவன் பாரதியாக மாறினான்.
மெய்ப்பொருள் காணும் ஞானியாக காசியில் நடமாடித் திரிந்திருக்கிறான். பெண்ணை மதிக்க வேண்டும் என்று சகோதரி நிவேதிதையைச் சந்தித்த பிறகு அவனுக்குள் எண்ணம் தோன்றியிருக்க வேண்டும்.
இவ்வளவு நாள் நான் என் மனைவியைக் கூட மதித்ததில்லையே! சமுதாயத்தில் சம உரிமை கொடுத்து பெண்ணை நடத்த வேண்டும் என்று போர்க் குரல் எழுப்பினான். அதனால்தான்
எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மி அடிக்கச் சொன்னான். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இறுதியில் ஒரு நாள் இறைவனடி சேரத்தான் போகிறோம்.அதனால் தான் கொடுங்கூற்றுக்கு இரையான பின் மாயும் என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார். மனித வாழ்வு அர்த்தமற்றதாகப் போய்விட்டால் அது வேடிக்கையாக இருக்கும்.
பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ வேண்டும் என்பதில் பாரதி தன்னைத்தானே செதுக்கிக் கொண்டவன். அதனால் தான் அவனுடைய இந்தக் கவிதையும் என்னைச் செதுக்குவதாக அமைந்துவிட்டது.
காட்டுக்குள் தேனீக்கள் கூட்டுக்குள் வைத்ததைப் பாட்டுக்குள் வைத்தவன் பாரதி அதைக் கேட்டுக் கிறுகிறுத்துப் போனவன் பாரதிதாசன். நான் மட்டும் என்ன விதிவிலக்கா? உளம் மகிழப் பகிர்ந்தேன், உள்ளம் குளிர்ந்தேன். உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்.
வாழிய பாரத மணித்திருநாடு. வாய்ப்புக்கு நன்றி வருகிறேன், விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.
கருத்துகள்
கருத்துரையிடுக