வெறும்பானை பொங்குமோ
வெறும்பானை பொங்குமோ
கடவுள் எனக்கு மட்டும் ஏன் இப்படி சோதனைகள் தருகிறார்?
ஒருநாள் கூட நிம்மதியாக இருக்கமுடியவில்லை. பிரச்சினைக்கு மேல் பிரச்சினை....ஐயோ அப்பா போதுமடா சாமி என்ற புலம்பலா? இப்படி பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினை வருவதற்கு யார் காரணம்?
அப்படி என்ன தப்பு செய்துவிட்டேன்...
என்று உள்ளுக்குள்ளேயே வெம்பலா?
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று படித்திருக்கிறோம் அல்லவா?
அப்படியானால் இந்த பிரச்சினை, வறுமை எல்லாவற்றிற்கும் நாம் தான்
காரணமா?
நிச்சயமாக....
உங்களுக்கு வரும் நன்மைக்கும் தீமைக்கும் நீங்கள் தான் காரணம்.
வறுமை வந்துவிட்டதா?
கையில் பணமே இல்லையா?
வெறும்பானையை அடுப்பில் வைத்துவிட்டு இன்னும் பொங்கலியே என்று அடுப்பையே பார்த்துக் கொண்டிருந்தால் எப்படிப் பொங்கும்?
இதற்குப் போய் தெய்வத்தை நொந்து என்ன பயன் கேட்கிறார் ஒரு புலவர்.
வாருங்கள் என்னவென்று பார்ப்போம்.
"செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம்?- வையத்து
“அறும்-பாவம்!” என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்?
- நல்வழி
விளக்கம்:
வெறும் பானையை அடுப்பில் வைத்து தீ மூட்டி பொங்கு பொங்கு என்றால் பொங்குமோ? அது போல செய்ய வேண்டிய காலத்தில் நல்லது செய்யாமல் அடுத்தவருக்கு கொடுத்து உதவாமல் இருந்து விட்டு அதன் பலனாக இன்று வறுமை வந்த போது மட்டும் கடவுளே இது சரியா இது முறையாஇது நியாயமா உனக்கு கண் இல்லையா நீ இருக்கிறாயா இல்லையா என்று கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது. சங்க நிதி பதும நிதி என்று கூறப்படும் கோடி கோடியாக கொட்டும் இரண்டு நிதி அளவுப் பணம் வருமா என்று கடவுளை நொந்து கொள்வதால் என்ன பயன் ? நல்லது நடக்க வேண்டுமானால் பிறருக்கு நல்லது செய்யுங்கள், கடவுளை நொந்து கொள்வதால் ஒரு பயனும் இல்லை என்கிறார் ஔவை.
நாம் செய்த தீய செயல்களின் விளைவாகவே துன்பங்களை அனுபவிக்கிறோம். அதை விடுத்து, கடவுளைக் குறை கூறுவதால் ஒருபோதும் செல்வம் சேராது. உலையில் அரிசியைப் போடாமல் வெறும் பானையை அடுப்பில் வைத்து எவ்வளவு எரித்தாலும் சோறு பொங்காது. அதுபோல, பிறருக்கு உதவி செய்து புண்ணியம் சேர்க்காதவர்கள் எவ்வளவு முயன்றாலும் செல்வம் வந்து சேராது.
பிறருக்கு உதவுங்கள் என்று சொல்வதற்கு எந்த முறையைக் கையாண்டிருக்கிறார் ஔவை என்று பாருங்கள்.
இனி வெறுபம்பானையை அடுப்பில் வைத்துவிட்டு புலம்புவோமா என்ன!
கருத்துகள்
கருத்துரையிடுக