துளித் துளியாய்....
துளித் துளியாய்....
மழைத்துளிகளே... வாருங்கள்,
இதயத்தில் கவிதை எழுதுங்கள்
கருநிறப் போர்வையால் கார்மேகங்கள் வானத்தைப் போர்த்தி நிற்க
முதல் மழைத்துளி என் கன்னத்தை முத்தமிட
இயற்கை வரவேற்புரை வாசிக்க
மண்ணின் நறுமணம் நாசியில் மோதி
மறந்துபோன நினைவுகளைத் தட்டியெழுப்ப
இலைகள்மீது மழைத்துளிகள்
நடனமாட,
தென்றல் மேனியைத் தீண்டிச் செல்ல
கூரைமீது விழுந்த மழைத்துளிகள்
செவிகளுக்கு இன்னிசை மீட்ட
வானவில்லின் துண்டுகளை ஏந்தி நீர்த்திவலைகள் வானத்தைக் காட்சிப் பொருளாக்க
கையிலிருந்த குறிப்பேடு நனைய
மழையுடன் மையும் மெல்லக் கரைந்தது
ஒவ்வொரு துளியும் மையைத் தொட்டு
மெல்லக் கவிதை எழுதியது.
மழை வெறும் நீராக மட்டும் விழவில்லை—
அது கனவுகளை வரைந்தது,
நம்பிக்கை விதைகளை விதைத்தது
நேற்றைய கவலைகளைக் கழுவிச் சென்றது.
மழைத் தூரலில் நனைந்தபடி
கடந்த காலத்தை நான் மறந்தேன்.
ஒவ்வொரு துளியும் உண்மையை
உரக்கப் சொன்னது
வீசும்தென்றல் புன்னகையைக்
கடத்திச் சென்றது
மனதோடு மழை மௌனமாய்ப்
பேச்சு வார்த்தை நடத்தியது
மழை என்பது மேகங்களிலிருந்து
வரும் வெறும் நீர் மட்டுமல்ல;
அது சொர்க்கத்தின் மென்மையான கையெழுத்து
பூமியின் இதயத்தில் எழுதப்பட்ட
காலத்தால் அழியாத
கவின்மிகு கவிதை
இதயத்தில் எழுத வைத்து
அழியா கோலம் வரைந்து நின்றது மழை!
கருத்துகள்
கருத்துரையிடுக