செருப்பும் விளக்குமாறும்

செருப்பும் விளக்குமாறும்


ஆசுகவி காளமேகப் புலவர் எந்தப் பொருளில்

பாடல் பாடச் சொன்னாலும் பாடுவார்.

எந்தச் சொல் கொடுத்து அந்தச் சொல்லில்

மட்டுமே பாட வேண்டும் என்று

கேட்டுக் கொண்டாலும் உடனடியாகப் 

பாடி முடிப்பார்.

அதனால் அவரைச் சீண்டிப்பார்க்க

வேண்டும் என்றே ஒரு கூட்டம் சுற்றிக்

கொண்டே இருக்கும்.

ஏதாவது ஒரு சொல்லையோ எழுத்தையோ

கொடுத்துப் பாடும்படி கேட்டுக் கொண்டே

இருக்கும்.

எப்படியாவது காளமேகத்தைத் தோற்கடித்துவிட வேண்டும் என்பது பல புலவர்களின் நெடுநாள்  ஆசை.

அதுவும் சோழன் அவையில் ஆஸ்தான கவியாக வீற்றிருக்கும் அதிமதுரகவிராயருக்கு  வாழ்நாள் ஆசை என்றே சொல்ல வேண்டும்.


ஒருநாள் சோழன் அவையில் வைத்து

காளமேகத்திற்கு புலமைத் தேர்வு வைக்கப்படுகிறது.

ஏதேதோ சொல்லும் எழுத்தும் கொடுத்து பாடக் கேட்டு தோற்கடித்துவிடலாம் என்று பார்த்தார்கள்.

ஆனால் காளமேகம் என்ன சாதாரணப் புலவரா?

வரம் வாங்கி வந்தவராயிற்றே..

விட்டுவிடுவாரா?

அவர் எதையும்  பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. கேலியும் கிண்டலும்

நையாண்டியுமெனப் பாடி 

முடித்துவிட்டு அவர்பாட்டுக்குக் கடந்து போய்க்கொண்டே இருந்தார்.

ஏறுக்கு மாறாக சொற்களைக் கொடுத்தால் காளமேகம் சறுக்கி விடுவார் என்ற நினைப்பில் 

ஒருநாள்   "செருப்பு"  எனத்  தொடங்கி  "விளக்குமாறு"  என  முடிக்கும்  வகையில்  வெண்பாப் பாடுமாறு   ஒருவர் கேட்டுக் கொண்டார்.

ஒரு நிமிடம் கூட  தாமதிக்காமல் உடனே  பாடல்  பிறந்தது.

பாடல் உங்களுக்காக...

"செருப்புக்கு  வீர்ர்களைச்  சென்றுழக்கும்  வேலன்

பொருப்புக்கு  நாயகனைப்  புல்ல--மருப்புக்குத்

தண்டேன்  பொழிந்ததிருத்  தாமரைமேல்  வீற்றிருக்கும்

வண்டே  விளக்குமா  றே"


செருப்புக்கு எனத் தொடங்கி விளக்குமாறே என்று முடித்துவிட்டார்.

இது ஒரு காதல் பாடல்.

தலைவனை நினைத்துத் தலைவி  பாடிய  பாடல்


செரு - போர்க்களம்

புக்கு -புகுந்து

சென்று உழக்கும் -வீரர்களைக் கொன்று குவிக்கும்

பொருப்புக்கு நாயகனை - மலைகள் சூழ்ந்த குறிஞ்சி நிலத்தின் தலைவனை புல்ல - ஆரத் தழுவிக் கொள்ள 

மரு - மணம் 

புக்கு - புகுந்து 

தண் தேன் -குளிர்ச்சியான தேன்

திருத் தாமரை மேல் வீற்றிருக்கும் - அழகிய தாமரை மலர் மேல் அமர்ந்திருக்கும் வண்டே  -அறுகாற் பறவை எனப்படும் வண்டே 

விளக்குமாறே- வழியினை விளக்கிச் சொல்லித் தருவாயாக 


"செருப்புக்கு அதாவது போர்க்களத்திற்குள் புகுந்துவீரர்களைச்  சிதறடித்துக்  கலக்குகின்ற  வேலனாகிய குறிஞ்சித்  தலைவனை  தழுவுவதற்கு குளிர்ச்சியான தேனைப்  பொழிந்த  அழகிய  தாமரை  மலர்  மீது வீற்றிருக்கும்  வண்டே  !நீ எனக்கு அவனிருக்கும்  இடத்துக்குப்  போகும்  வழியை  விளக்கிக் காட்டுவாயாக" என்பது பாடலின் பொருள்.

அருமையான பொருள் பொதிந்த பாடல்.

செருப்புக்கு சென்று 

பொருப்புக்கு வேலனைப் புல்ல

வண்டை அழைத்து வந்து 

விளக்கமான வழி கேட்டு

நிற்கும்  புலமை

காளமேகத்திற்கு அன்றி வேறு யாருக்கு வரும்?

முரழ் வண்டு கண்ட 

மருட்சியில் அனைவரும் 

வாயைடைத்துப் போய் நின்றிருப்பர் இல்லையா!



கருத்துகள்

Popular Posts