கர்மவீரர் காமராசர்

கர்மவீரர் காமராசர்


வறுமையின் வலியை

 வாழ்வினில் கண்டவர்

வாடிய விழிகளுக்கு 

விடியலைத் தந்தவர்


பசியெனும் பகையைப் 

பாசத்தால் வென்றவர்

பள்ளியின் வாசலைப்

பிள்ளைகட்குத் திறந்தவர்


கல்வியே செல்வமெனக் 

கற்பவர்க்குச் சொன்னவர் 

கல்லாத உள்ளங்களைக் 

கல்விச்சாலை அழைத்தவர்


சீருடை திட்டம் 

சீர்பட வழங்கி

சிறார்கள் வாழ்வைச்

சிகரமாய் உயர்த்தியவர்


தொழிற்சாலைகள் அமைத்து 

தொழில் வளர்த்து

தொழில்களின் மிகுதியால்

 நாட்டை உயர்த்தியவர்


பதவிப் பொருளெனப் 

பற்றில்லா பண்பாளர்

பணிவையே உயர்வெனப்

போற்றிப் புரந்தவர்


வாய்மையின் மொழியால்

வாழ்நாளை நெய்தவர்

வஞ்சக நிழலுக்கே 

வழியின்றிச் செய்தவர்


கரங்கள் காலியானாலும் 

கருணை மிக்கவர்

இதயம் எளிமையானாலும்

இமயமென  உயர்ந்து நிற்பவர் 


மண்ணுக்கு மகனாய் 

மக்களுக்குத் தந்தையாய்

மறையாத புகழுடை

மாமணி காமராசர் 


சூரியன் மறைந்தாலும் சுடரொளி மறையுமோ?

சான்றோர் மறைந்தாலும் 

சாதனை அழியுமோ?


காமராசர் என்றொரு காவியம் இருந்ததைக்

காலங்கள் தோறும் தமிழ்மனம் உரைக்கும்!


காலுக்குச் செருப்பின்றிக் 

காலங்கள் நடந்தவர்,

கண்ணுக்குக் கனவென்றே

கல்வியை விதைத்தவர்


ஏழையின் குடிசைக்கே

 ஏணியை அமைத்தவர்

ஏற்றத்தின் உச்சிக்கே 

எல்லோரையும் அழைத்தவர்


"பசியோடு பாடமில்லை" 

என்பதைப் பார்வையால் உணர்ந்தவர்

"படிப்போடு நாடுயரும்" 

பட்டறிவால் உரைத்தவர்


அன்னமென மதிய உணவை

அன்புடன் அளித்தவர்

அறிவெனும் அமுதத்தை

அனைவர்க்கும் பகிர்ந்தவர்


கற்க மறுத்த கதவெல்லாம் 

கடகடவெனத் திறந்தது

குழந்தைகள் முகமெல்லாம்

புன்னகைப் பூத்தது


புத்தகம் பிடித்த கரம் 

புதுவானம் தொட்டது

புதியதோர் தமிழகம் 

மகிழ்ச்சியாய் மலர்ந்தது


அணைகள் எழுந்தபின் 

ஆறுகள் சிரித்தன

அலைகடல் காற்றிலே 

வயல்களெல்லாம் வரப்புநிறை

விளைச்சல் கண்டு விம்மின


ஆலைகள் எழுந்தன

ஆயிரம் தொழில்கள்

ஆற்றல்கள் பெருகின

ஆனந்த விழிகள்

நாளை நமதென 

நம்பிக்கையாய்ப் பார்த்தன


அரியணை உயர்வல்ல

அறம்தான் உயர்வென்றார்

அதிகாரம் அழிவதாம்

அன்புதான் நிலைப்பதென்றார்


பொன்னையும் பொருளையும் 

புழுதியென எண்ணினார்

பொதுமக்கள் இதயத்தைப் 

பொக்கிஷமாய்க் கொண்டாடினார்


மலைகள் சிதைந்தாலும்

 மாண்பொளி சிதையாது

மழைகள் பொய்த்தாலும்

 மண்வளம் குறையாது


காலங்கள் கடந்தாலும் 

காமராசர் புகழ் மறையாது

கருணையும் கல்வியும் 

இருக்கும் வரை காமராசர் 

நினைவுகள் அழியாது!









 

கருத்துகள்

Popular Posts