மரம் வளர்ப்போம்
மரம் வளர்ப்போம்
வைகறையின் வாசல் திறக்க
வானம் பொன்னொளி விரிக்க
மலர்மணம் தென்றல் சுமக்க
மனங்கள் மகிழ்ச்சியில் மிதக்க
சிள்வண்டு ரீங்காரம் ஒலிக்க
சிறுபுள்கள் தேனிசை இசைக்க
ஆறுகள் ஓடி ஆர்ப்பரிக்க,
அலைகள் கரையை முத்தமிட்டுச் சிலிர்க்க
மலைகள் மௌனப் பாடம் நடத்த
மரங்கள் கருணை மொழி பேச
மேகங்கள் மழையை வாரி வழங்க,
மண்ணெல்லாம் பசுமை போர்த்தி மகிழ
நிலவொளி நெஞ்சத்தை நனைக்க
நட்சத்திரங்கள் கனவுகளை விதைக்க
இயற்கை எழிலோவியம் மனதை ஈர்க்க
இறைவன் வரைந்தார் நல்லுயிரோவியம்
வரைந்த ஓவியம் மாசில்லாதிருக்க
கறைகளில்லா காட்சிகள் கண்முன் விரிய
விலங்கினமும் புள்ளினமும் காட்டுக்குள்
விடுதலைக் காற்றைச் சுவாசித்து நடமாடிட
காற்றை நேசித்து நம் வாழ்வு நலமாக
காடுகள் வளர்த்து பூமி பொலிவுபெற
நீரைச் சேமித்து நாளை வளமாக்க
நிலத்தைப் போற்றி நல்லுணவு கிடைக்க
பறவைகள் பறக்கும் வானம் நமது
பசுமைகள் பூக்கும் பூமி நமது
ஆறுகள் ஓடும் அழகும் நமது
அனைத்தும் காக்கும் கடமையும் நமது
மரம் நடும் ஒவ்வொரு கரமும்
மனிதகுலத்தின் நம்பிக்கையை வளர்க்கும்
இயற்கை சிரிக்கும் ஒவ்வொரு நாளும்
இன்பமாய் மலரும் உலகின் வாழ்வும்
காடுகள் வளர்ப்போம் கவின்மிகு
உலகைக் கண்முன்னர் படைப்போம்
மரங்கள் வளர்ப்போம் மனிதகுலம் வாழ
மகிழ்ச்சிப் பயிரை அறுவடை செய்வோம்
கருத்துகள்
கருத்துரையிடுக