மனதில் உறுதி வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்
மனதில் உறுதி இருப்பவர்கள்
எதையும் சாதிக்கும் துடிப்பு
மிக்கவர்களாக இருப்பர்.
தளர்ச்சி என்பது அவர்கள்
அகராதியில் இருக்காது.
வேகமும் துடிப்பும் அவர்கள்
செயலில் இருக்கும்.
வெற்றி பெற வேண்டும்
என்ற தணியாத் தாகம் அவர்கள்
தேடலில் இருக்கும்.
மனதில் உறுதி இருந்தால்
எந்தச் சோர்வும் கிட்ட
அண்டாது. இதை மனதில்
வைத்துதான் பாரதி மனதில்
உறுதி வேண்டும் என்ற பாடல்
பாடியிருக்க வேண்டும்.
இதோ பாரதியின் அந்தப் பாடல்.
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம்! ஓம்! ஓம்! ஓம்!
அருமையான பாடலில்லையா?
மனதில் உறுதி வேண்டும்.
உறுதி மட்டும் இருந்தால்
போதுமா?
பேச்சில் இனிமை வேண்டாமா?
பேச்சு ஒன்று நினைவு ஒன்று
என்று மாறுபாடாக இருக்கலாமா?
கூடாதல்லவா!
நினைவும் நல்லதாகவே இருக்க வேண்டும்.
அப்போதுதான் நம் மனம் விரும்பும் பொருள்
நமக்குக் கிடைக்கும்.
மனமும் மகிழ்ச்சியாக இருக்கும்.
எல்லோருக்கும் நாம் இப்படி இருக்க வேண்டும்.
அப்படி வாழ வேண்டும் என்று ஒரு கனவு
இருக்கும்.
கனவு கனவாகவே கழிந்துவிடக்கூடாது.
கனவில் விரும்பியவை நனவில்
வந்து சேர வேண்டும்.
தாமதமாக கிடைத்தால் மனச் சோர்வு
ஏற்பட்டுவிடும்.
அதனால் கனவில் நினைப்பவை
கைவசம் சீக்கிரமாகக்
கிடைக்க வேண்டும்.
செல்வம் இல்லா வாழ்க்கையில்
நிம்மதி இருக்குமா?
அதனால் வாழ்க்கை இனிமையாகக்
கடந்துபோகச் செல்வம் வேண்டும்.
செல்வத்தோடு கூடவே இன்பமும்
இல்லத்தில் நிறைந்திருக்க வேண்டும்.
வீட்டிற்குள் மகிழ்ச்சி வந்தாயிற்று.
வெளியிலும் நாலுபேர் பெருமையாகப்
பேசும்படியான நிலை வேண்டுமே!
இப்படிப்பட்ட ஆசை எல்லோருக்கும்
உண்டு.
ஆனால் நாம் நினைப்பதெல்லாம் எளிதில்
நடந்துவிடுமா என்ன?
இவை எல்லாம் கிடைக்க வேண்டும்
என்றால் இறைவனின் கடைக்கண்
பார்வை நம்மீது விழ வேண்டும்.
அப்போதுதான் நன்மைகள்
நம்மை வந்தடையும்.
கல்விக்கண் திறந்திடல் வேண்டும்.
அப்போதுதான் அறியாமை ஒழியும்.
ஆக்கப்பூர்வமான சிந்தனைகள்
துளிர்க்கும்.
கடவுள் தருவார் என்று கையை மடக்கிச்
சும்மா இருந்தால் முடியுமா?
நாம் செய்ய வேண்டிய காரியங்களைச்
செய்து கொண்டே இருக்க வேண்டும்.
அதுவும் செய்யும் காரியத்தில் உறுதி
இருக்க வேண்டும். நேரத்திற்கு ஒன்று
செய்பவராக இருக்கக் கூடாது.
நேற்று ஒன்று இன்று ஒன்று
என்று மாற்றி மாற்றி செய்பவராக
இருத்தல் கூடாது.
உறுதியான நிலைப்பாடு இருந்தால்
மட்டுமே வெற்றி கிட்டும்.
நாம் வெற்றி பெற்றால் போதுமா?
வீட்டில் பெண்களுக்கு விடுதலை வேண்டாமா?
பெண்கள் விடுதலையோடு வாழும்
நாடுதான் முன்னேறிய நாடாகக்
கருதப்படும்.அதனால் பெண்
விடுதலை வேண்டும்.
எது இருந்தாலும் பாதுகாப்பு
ஒன்று வேண்டும்.
அதுவும் கடவுளின் பாதுகாப்பு
இருந்தால் மட்டுமே அச்சமில்லாமல்
நிம்மதியாக வாழலாம்.
அச்சமில்லா வாழ்க்கை இருந்தாலும்
மண் விளைச்சல் மிக தந்து
பூமியும் தன் பங்கிற்குச் செழிப்பாகிப
பூரிப்புத் தந்திட வேண்டும்.
பூரிப்பால் வானம் வசப்பட
வேண்டும்.வானம் வசப்பட்டுவிட்டால்
வாழ்வே வசந்தமாகிப் போகுமல்லவா?
எல்லாம் கிடைத்துவிட்டது என்பதற்காக
பண்பில் குறைச்சல் இருக்கலாமா?
வாக்கினில் உண்மை இருந்திடல்
வேண்டும்.
உண்மை மட்டும் இருந்தால் போதும்.
வேறு எல்லா நற்பண்புகளும் கூடவே
கைகோத்து நடக்கும்.
நம்மிடம் மட்டும் உண்மை இருந்தால்
போதுமா?
உலக மக்கள் நன்றாக இருக்க வேண்டாமா?
நன்றாய் இருத்தலுக்கு
உலகெங்கும் உண்மை நின்று
நிலை பெற்றட வேண்டும்.
அருமையான பாடலில்லையா?
வேண்டும்...வேண்டும்..வேண்டுமென்று
யாரிடம் கேட்டிட முடியும்?
இறைவனைத் தவிர யார்
நம் வேண்டுதல்களை நிறைவேற்றப்
போகிறவர்கள் இருக்கப் போகிறார்கள்.?
அதனால்தான் இறைவனிடம்
தனது விருப்பத்தை விண்ணப்பமாக வைத்து
பாடலை முடித்திருக்கிறார் பாரதி.
என்னென்ன விண்ணப்பங்கள் வைத்தார்
என்பதை மறுபடியும் வாசிக்க வேண்டும்
என்று தோன்றுகிறதல்லவா!
கருத்துகள்
கருத்துரையிடுக