தப்பும் தவறும்

தப்பு - தவறு - பிழை

சரியா? தப்பா? என்று பேசுகிறோம். சரியா? தவறா? என்று வினவுகிறோம். 

நான் தப்புத் தவறு எதுவும் செய்ததில்லை என்று குரலை உயர்த்திப் பேசுகிறோம்.

 தப்பித் தவறியும் கெட்ட வார்த்தை 

பேசவேமாட்டேன் என்று பெருமிதம் கொள்கிறோம். 

இது என்ன தப்பும் தவறும் சேர்ந்தே பயணிக்கின்றன என்று தோன்றும்.

ஆம் .இரண்டும் பெரும்பாலும் ஒரே பொருள் கொண்டவை. 

ஆனால் 'தப்பு'வில் தப்பித்தல் என்னும் ஒரு பொருளும்  அடங்கிக் கிடக்கிறது

என்பதை மறந்துவிடக்கூடாது.

உங்கள் கருத்து தவறு என்று  வன்மையாக கண்டனங்களைத் தெரிவிக்கிறோம்.

தவறு செய்தவர்களுக்குத்  தண்டனை உண்டு என்று உறுதியாகக் கூறுகிறோம். எழுதுகிறோம். ஆகத் தப்பு என்பதனினும் தவறு அதிக அழுத்தம் தரக்கூடிய சொல் .

அறியாமல் செய்வது தப்பு என்றும், அறிந்தே செய்வது தவறு . 

அறிந்து செய்தாலும் அறியாமல் செய்தாலும் தப்பு தப்புதான்.

தவறு தவறுதான்.

எளிதாக தப்பித்து விட முடியாது .

இனி தப்பித் தவறிகூட

பிழையாக எழுத மாட்டோம் இல்லையா?

இப்போது பிழை என்ற சொல் எங்கிருந்து வந்தது?

எதற்காக வந்தது?

என்ற கேள்வி எழுகிறதல்லவா?

வாருங்கள் 

பிழை என்ற சொல்லைப் பார்த்துவிடுவோம் .

பிழைபட எழுதக்கூடாது.

பிழைபட உச்சரிக்க கூடாது.

எழுத்துப் பிழையாக எழுதினால் பொருள் மாறுபடும்.

கவனக்குறைவு பிழை ஏற்படக் காரணமாக அமையும்.

வினாவிற்கு விடைதெரியாத நிலையில் பொருத்தமில்லாத விடையை எழுதுவது பிழை. 

இதுவும் தவறு என்ற பொருளில்தான்

சொல்லப்பட்டாலும் பேச்சு வழக்கில் இது பிசகு எனவும் குறிப்பிடப்படுகிறது.


பிழை என்ற சொல் தென் திராவிட மொழிகளில் மட்டும் காணப்படும் ஒரு சொல்.


தப்புத்தப்பாக படித்து 

தவறாக எழுதினால்

எழுத்துப்பிழை நிறைய ஏற்படத்தானே செய்யும்.


மூன்று சொற்களும் ஒரே பொருள் போல இருந்தாலும் பொருத்தமான இடத்தில் அவை பயன்படுத்தப்படும்போதுதான் 

அந்தச் சொற்றொடர் முழுமை பெறும்.

தரமான சொற்றொடராக அமையும்.

நாம் சொல்ல வந்த  கருத்தைச் சரியாக வெளிப்படுத்துவதாகவும் இருக்கும்

பிழையின்றி சொற்களை எழுதினால் தவறான புரிதல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

தப்பு 

தவறு

இவற்றிற்கிடையிலான

சிறிய வேறுபாடுகளை அறிந்து 

சரியான இடங்களில் சரியான சொற்களைத் தேர்ந்தெடுத்துப் 

பிழையின்றி பேசவும் எழுதவும் 

கற்றுக்கொள்வோம்.





கருத்துகள்

Popular Posts