ஏறைக்கோன் ஆட்சியின் மாட்சி

ஏறைக்கோன் ஆட்சியின் மாட்சி 


தமக்கு வேண்டியவர் தவறு செய்தால் அதனைப் பொறுத்துக்கொள்ளும் பண்பு

எத்தனை பேரிடம் இருக்கும்?

வேண்டியவராகவே இருந்தாலும் தவறு செய்தால் வெட்டிவிட்டு ஓட நினைப்போம்.

பிறர் தவறு செய்தால்  அதற்காக

நாம் வருந்துவோமா?

இப்படி ஒரு தவறு நடந்து விட்டதே என்று வெட்கப் படுவோமா?

எல்லா இடத்திலும் வீரத்தை வெளிக்காட்ட

நம்மால் கூடுமோ?


பிறர் செய்யும் தவறுக்காக 

தான் நாணும் பண்பு எத்தனை பேரிடம்

இருக்கும்?

படைக்கலப் பணியில் வீரர்கள் 

இருந்தால் போதும் என்று நினைக்காது தானும் அவர்களுக்கு இணையாக தன் திறமையைக் காட்டும் பண்பு 

எத்தனை வேந்தரிடம் இருக்கும்?

அவையில் பெருமிதத்துடன் நடந்து கொள்ளுதல் எல்லா மன்னர்களிடமும் இருக்குமா?


 இவை எல்லாம் சாதாரணமாக

யாரிடமும் இல்லாத 

இயலாத பண்புகள்.


ஆனால் 

பெருமக்களே!

எம் அரசன் ஏறைக்கோன் இவை எல்லா பண்பும் ஒருங்கே பெற்றவன்.


ஏறைக்கோன் என்னும் மன்னனின் பெருமையை மற்றொரு மன்னனிடம் கூறுவதாக  ஒரு பெண்பாற்  புலவர் பாடலொன்று பாடியுள்ளார்.


யாரந்த புலவர் என்று கேட்கிறீர்களா?

குறமகள் இளவெயினி தான் இந்த

ஏறைக்கோன் பெருமைகளைப் பற்றிப் பாடிய புலவர்.



அவர் பாடிய பாடல் இதோ உங்களுக்காக..


தமர் தற் தப்பின் அது நோன்றல்லும்,

பிறர் கையறவு தான் நாணுதலும்,

படைப் பழி தாரா மைந்தினன் ஆகலும்,

வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும்,

நும்மோர்க்குத் தகுவன அல்ல; எம்மோன்,  

சிலை செல மலர்ந்த மார்பின், கொலை வேல்,

கோடல் கண்ணி, குறவர் பெருமகன்

ஆடு மழை தவிர்க்கும் பயம் கெழு மீமிசை,

எல் படு பொழுதின், இனம் தலைமயங்கி,

கட்சி காணாக் கடமான் நல் ஏறு     

மட மான் நாகு பிணை பயிரின், விடர் முழை

இரும் புலிப் புகர்ப் போத்து ஓர்க்கும்

பெருங் கல் நாடன் எம் ஏறைக்குத் தகுமே.

                                      - புறநானூறு 

             பாடியவர் :குறமகள் இளவெயினி




"ஏறைக்கோன் தன் படைவீரர்களைப் பழிக்கமாட்டான். தான் முன்னின்று போர்புரிந்து வெல்வான்.


பகை வேந்தர்களின் அவையில் அஞ்சாது நடக்கும் ஆண்மை உடையவன்.


தன்னைச் சார்ந்தவர்கள் தனக்கு எதிராக தவறேதும் செய்தால் அதனை ஏறைக்கோன் பொறுத்துக்கொள்வான். பிறர் தம்மை அறியாமல் செய்யும் தவறுகளுக்காகத் தான் நாணுவான். அவர்கள் செய்யும் தவறுகளுக்குத்  தானும் ஒரு காரணம் என்று எண்ணும் மனப்பாங்கு உள்ளவன்.


எம் அரசன் ஏறைக்கோன் இவை எல்லா பண்பும் ஒருங்கே பெற்றவன்.


ஏறைக்கோன் கோடல் என்னும் வெண்காந்தள் மலரைத்  குடிப்பூவாகக் தன் தலையில் சூடிக் கொண்டிருப்பவன்.


இவனது மலைநாட்டில் 

ஆண்மான் பெண்மானை அழைக்கும் குரலை கேட்டு 

புலிகூட மகிழுமாம்.

அதாவது காட்டு விலங்குகள்கூட

இணையராய் இருக்கும் விலங்குகளுக்குத் தீங்கிழைக்காதாம்.

இதுதான்  ஏறை நாட்டுக்குகே பெருமை"

என்று பாடி பெருமைப்படுத்தியிருக்கிறார்  குறமகள் இளவெயினி .

மானைக் கண்டால் புலிக்குக் கொண்டாட்டம். ஆனால் மான் இணையாக இருப்பதைக் கண்டால் புலி

மகிழ்ச்சியாக பார்த்து மகிழும்.. இணையாக 

மகிழ்ந்திருக்கும்போது விலங்குகளிடம் கூட அவற்றைப் பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் வராது.இதுதான்

ஏறைக்கோன் ஆட்சியின் மாட்சி  என்கிறார் குறமகள் இளவெயினி.

மாறுபட்ட சிந்தனை.




அருமையான பாடல் இல்லையா!



கருத்துகள்

Popular Posts