விடை தர மறுக்கும் பள்ளி

பள்ளிப் பருவத்தில் 

துள்ளி விளையாடிய

இடங்களைத் திரும்பிப் 

பார்க்கிறேன்!

கண்களில் ஏக்கம்

 நடந்த இடங்களில்

 மறுபடி என் காலடி பதித்து

தடம் அழிந்து போகாதபடி

மெல்ல நடக்கிறேன்!

    

தூண்களைச் சுற்றிச் சுற்றி

தேய்த்த இடங்களில்

சேதாரம் இருக்கிறதா

பட்டு விரல்களால் மெல்ல

தொட்டுப் பார்க்கிறேன்

 கண்களில் இட்டு 

 வணங்குகிறேன்!

       

முட்டிபோட மறுத்த 

 முழங்கால் மறுபடி

 தனக்கு ஒரு வாய்ப்பு கேட்டு

 தடுமாறி நின்றிட 

 வகுப்பறையின்  வராண்டாவில் 

வாய்தா கேட்டு

 நிற்கின்றேன்!

       

 தலைமை ஆசிரியர் 

அறை முன்னர் 

 காத்துக் கிடக்கும் காலம்

 இனி உனக்கு இல்லை

 சொல்லாமல் சொல்ல வந்த

கடந்த கால நினைவுகள் 


 நக்கலாய் பேசிய சொற்கள்  தொண்டைக்குள் சிக்க திருகும் கால்களைத் திரும்ப அழைக்கிறேன்

முடங்கினில் திரும்ப

அடம்பிடிக்கும் 

முரட்டுக் காளை போல

கால்களும் திரும்பிட மறுக்க

 மனமெனும் சாட்டையைச் சுழற்றி

 வலுக்கட்டாயமாய்த் 

திருப்பிட முனைகின்றேன்

       

துள்ளித் திரிந்த

மைதானமும் துளியும் இடமில்லை

இங்கென  எள்ளி நகையாடிட 

ஒற்றைப் பனைமரமாய்த்

தனிமையில் நின்று

 வெறுமையை உணர்ந்து

வெம்பி நிற்கிறேன்

             

முழுதாய் விடைபெற 

ஆசிரியர் அறையை 

எட்டிப் பார்க்கின்றேன்

 பழுதாய்க் கிடந்த மனதை

 முழுதாய் சரி செய்த இடம்

 எளிதாய் கடந்திட முடியாமல் 

முட்டி வந்த கண்ணீர்

தடையிட தயங்கித் 

தயங்கி நிற்கிறேன்

               

 ஏனிந்த தயக்கம் 

குரல் கேட்டு திரும்புகிறேன்

 தோழனாய் வகுப்பாசிரியர் 

தோள்தொட்டுப் பேச

கரைந்து போகின்றேன்

அங்கேயே தொலைந்து 

போகின்றேன்

கண்ணீரால் கன்னம் கழுவி

மௌனியாய் நிற்கிறேன்

          

 எப்போதும் நீ வரலாம்

இது உன் பள்ளி 

 வாயால் சாசனம் எழுதி  

 வழங்கிய தெய்வத்தைத்

 தொழுத கையோடு

தடையிட்ட கண்ணீரோடு

 கெஞ்சும் கண்களோடு

 கரங்களை அசைத்து

 நகர்கின்றேன்!

         

 புதியவை புகுதலும்

 பழையவை கழிதலும் வழுவல

தேற்றிட முயல்கின்றேன்

விடைதர மறுத்த

பள்ளி நாட்களை

உள்ளி   உள்ளி

உள்ளுக்குள்  உவந்து 

நிற்கிறேன்!

               

  

                     

                    

கருத்துகள்

Popular Posts